>> Monday, June 14, 2010
"ஐ.எஸ்.ஐ.க்கு தாலிபானுடன் தொடர்பு"
பாகிஸ்தானிய உளவுத்துறையினர் தாலிபான்களுக்கு ஆதரவு தருவதாக நெடுங்காலமாக சந்தேகங்கள் நிலவிவருகின்றன
பாகிஸ்தான் உளவுத்துறைக்கும் ஆப்கானில் உள்ள தாலிபான்களுக்கும் தொடர்பு இருப்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இருப்பதாக லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கை கூறுகிறது.
முன்பு கருதப்பட்டிருந்ததை விட அதிக அளவில் தாலிபான்களுக்கு நிதியும், பயிற்சியும், அடைக்கலமும் ஐ.எஸ்.ஐ. வழங்கிவருவதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஆப்கானிஸ்தானில் களத்தில் போராடும் தாலிபான் தளபதிகள் ஒன்பது பேருடன் உரையாடியும் ஆறு பேரை விசாரித்தும் இந்த ஆய்வை நடத்தியதாக செல்வாக்குமிக்க லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் உயர்கல்விக் கூடம் தெரிவித்துள்ளது.
தாலிபான்களின் அதிஉயர் நிர்வாக சபை நடத்தும் கூட்டங்களுக்கு பாகிஸ்தான் உளவுத்துறையினர் வந்து கலந்துகொள்வது உண்டு என்று இந்த தாலிபான் தளபதிகள் விசாரணைகளின்போது கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் செல்வாக்கு தலைதூக்கிவிடாமல் பார்த்துகொள்ளும் நோக்கில் பாகிஸ்தான் உளவுத்துறையினர் தமக்கு உதவியதாக அந்த தளபதிகள் குறிப்பிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்த அறிக்கையில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் அரசாங்கம் காத்திரமாக நிராகரித்துள்ளது.
"இவையெல்லாம் குப்பைக்குச் செல்ல வேண்டிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்" என பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment