>> Monday, June 21, 2010
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தச் சம்பவம் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்
1986 சம்பவம்: பாதிக்கப்பட்டோர் பேட்டி
இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவனந்தாவுக்கு எதிராக குற்றம்சாட்டப்படும் 1986 சென்னை துப்பாக்கி சூட்டு கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழோசைக்கு பேட்டி தந்துள்ளனர்.
பேட்டி
சமீபத்தில் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் வந்திருந்த இலங்கை அமைச்சரும் இ.பி.டி.பி. கட்சித் தலைருமான டக்ளஸ் தேவானந்தாவை ஒரு கொலை வழக்கு சம்பந்தமாக கைதுசெய்ய வேண்டும் என்று தமிழகத்தில் குரல்கள் எழுந்திருந்தன.
ஆனால் இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த திருநாவுக்கரசு என்ற இளைஞரின் குடும்பத்தினர், "இது தொடர்பில் கடந்த பல ஆண்டுகளாக எவ்வித நீதி விசாரணையும் நடைபெறவில்லை, கடவுள்தான் நீதி வழங்க வேண்டும்." என்று கூறுகின்றனர்.
சென்னையில் 24 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் டக்ளஸ் தேவானந்தா முக்கிய பங்காற்றினார் என்று குற்றம் கூறப்படுகிறது.
அந்த சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், வேறு சிலர் காயமடைந்து இருந்தனர்.
கடந்த 24 ஆண்டுகளாக யாரும் எவ்வித உதவியும் எங்களுக்கு செய்யவில்லை. இப்போது வழக்கு போடுவதால் எங்களுக்கு எவ்வித பயனும் இல்லை.
சம்பவத்தில் கொல்லப்பட்ட திருநாவுக்கரசுவின் சகோதரர் நடராஜன்
பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள அந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து வழக்கு விசாரணை முடுக்கி விடப்பட வேண்டும் என்று கோரும் வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
இந்த சூழலில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த குருமூர்த்தி என்பவர் தமிழோசையிடம் கூறும்போது, "இந்த துப்பாக்கிச் சூட்டில் தனக்கு கையில் காயமேற்பட்டது, அதிலிருந்து கடினமான வேலைகள் செய்வது இயலாததாக உள்ளது" என்றும் தெரிவித்தார்.
இந்த துப்பாக்கிச் சூடு குறித்த வழக்கு விசாரணைகள் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, ஒவ்வொரு முறை வழக்கு விசாரணை வரும் போதும், நீதிமன்றத்தில் ஆஜராகும் குற்றம்சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்ததாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் இலங்கையில் போரில் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று ஒரு கட்டத்தில் தமக்கு சொல்லப்பட்டு வழக்கு முடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment