>> Friday, June 11, 2010
ஃபிஃபா தலைவர் செப் பிளெட்டருடன் தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா
உலகக் கோப்பை யாருக்கு?
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் வெள்ளிக்கிழமை தென் ஆப்பிரிக்காவில் தொடங்கவுள்ள நிலையில், போட்டிகளை யார் வெல்வார்கள் என்கிற ஆரூடம் பலரால் வெளியிடப்பட்டு வருகிறது.
கால்பந்து விளையாட்டின் மிகச்சிறந்த வீரர் என்று வர்ணிக்கப்படும் பெலே இந்த ஆண்டின் உலகக் கோப்பை போட்டியின் போது ஆப்பிரிக்க நாடு ஒன்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்று தான் நம்புவதாக கருத்து வெளியிட்டுள்ளார்.
பிரேசில் மற்றும் ஸ்பெயின் மிகச்சிறந்த அணிகளை கொண்டிருந்தாலும் யார் கோப்பையை கைப்பற்றுவார்கள் எனக் கூறுவது கடினமாக இருக்கும் எனவும் பெலே கூறியுள்ளார்.
எனினும் தனது நாடான பிரேசில் இறுதிப் போட்டியில் ஒரு ஆப்பிரிக்க அணியை எதிர்த்து விளையாடுவதை பார்த்தால் தனக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்படும் எனவும் பெலே கருத்து வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று அதில் தேர்வான 32 நாட்டு அணிகள், இந்த இறுதிப் போட்டியில் பங்கு பெறுகின்றன.
இந்த 32 நாடுகள் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் போட்டி இந்திய இலங்கை நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
அதில் போட்டிகளை நடத்தும் நாடான தென் ஆப்பிரிக்க அணி மெக்ஸிகோ அணியை எதிர்த்து விளையாடுகிறது.
ஜோஹனஸ்பர்கில் உள்ள சாக்கர் சிட்டி விளையாட்டு மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.
ஆவலுடன் பார்க்கப்படும் போட்டி
இந்தப் போட்டியில் பிரேசில் நாட்டு அணி வடகொரிய அணியை எதிர்த்து ஆடும் போது கால்பந்து விளையாட்டில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சிறிய நிகழ்வும் ஏற்படவுள்ளது.
ஐந்து முறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை வென்றுள்ள பிரேசில் அணி, 44 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள வடகொரிய அணையை எதிர்த்து ஆடவுள்ளது.
இந்த உலகக் கோப்பை போட்டியில் பங்குபெறும் 32 நாடுகளின் தரப்பட்டியலில், பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது வடகொரியா.
பிரேசில் நாடு தடையற்ற சுதந்திரம் கொண்ட, மகிழ்ச்சித் துடிப்புடன் விளங்கும் ஒரு நாடு. ஆனால் வடகொரியாவோ கடுமையான இரும்புத் திரைக்கு பின்னர் செயற்படும் நாடு.
பிபிசி ஆய்வு
இதனிடையே உலகக் கோப்பையை போட்டியை யார் வெல்லக் கூடும் என்பது குறித்து பிபிசி ஒரு ஆய்வை நடத்தியது.
உலகின் பல பகுதிகளில் உள்ள கால்பந்து வீரர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டுத்துறை செய்தியாளர்கள், மற்றும் இதர வல்லுநர்களிடம் கருத்து கேட்டு ஆய்வு ஒன்றை நடத்தியது.
அந்த ஆய்வு முடிவுகளின்படி உலகக் கோப்பை வெல்லும் வாய்ப்பு யாருக்கு அதிகம் என்கிற பட்டியலில் முதலிடத்தில் ஸ்பெயினும், இரண்டாம் இடத்தில் பிரேசிலும் உள்ளன. அர்ஜெண்டினா அணி மூன்றாம் இடத்திலும் இங்கிலாந்து அணி நான்காம் இடத்திலும் உள்ளன.
கருத்துக்கணிப்புகள், ஆரூடங்கள் எல்லாம் எந்த அளவுக்கு சரியாக அமைந்தன என்பது ஜூலை மாதம் 11 ஆம் தேதி தெரிந்துவிடும்.
0 comments:
Post a Comment