>> Friday, June 11, 2010
இந்திய திருமணங்களில் நூறில் ஒன்று விவாகரத்தில் முடிகிறது
விவாகரத்தை விரைவாக்க சட்டத்திருத்தம்
இந்தியாவில் கணவன் மனைவிக்கு இடையிலான திருமண உறவு மீண்டும் சரிப்படுத்த முடியாத அளவுக்கு முறிந்துவிட்ட நிலையை, விவாகரத்து வழங்குவதற்கான கூடுதல் காரணமாக எடுத்துக் கொள்ளும் வகையில், இந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர இந்திய அமைச்சரவை வியாழனன்று ஒப்புதல் அளித்திருக்கிறது.
அதன்படி, இந்து திருமணச் சட்டம் 1955 மற்றும் சிறப்புத் திருமணச் சட்டம் 1954-ல் திருத்தங்கள் செய்யப்படும்.
அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு, மத்திய செய்தி, ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி இதை செய்தியாளர்களிடம் அறிவித்தார்.
``மீண்டும் சரிப்படுத்த முடியாத அளவுக்கு கணவன் மனைவிக்கு இடயிலான உறவு முறிந்துவிட்டால் அதை ஒரு காரணமாக எடுத்துக் கொண்டு விவாகரத்து வழங்க இந்தத் திருத்தம் உதவும். பரஸ்பர சம்மதத்துடன் பிரிய விரும்பி மனுத்தாக்கல் செய்தோர், ஒரு தரப்பு மட்டும் வழக்கில் ஆஜராகாமல் விசாரணையை இழுத்தடித்து இன்னொரு தரப்புக்கு தொடர்ந்து மன உளைச்சலை ஏற்படுத்துவோர் விவகாரத்தில் இந்தப் பிரிவு பாதுகாப்பளிப்பதாக இருக்கும். இத்தகயை சட்டம் தேவை என்று சட்டக் கமிஷன் பரிந்துரை செய்திருந்தது’’, என்றார் அமைச்சர் அம்பிகா சோனி.
திருமணத் திருத்தச் சட்டங்கள் 2010 என்ற மசோதா மூலம், நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத் திருத்தங்கள் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.
0 comments:
Post a Comment