>> Tuesday, June 29, 2010
தமிழக முதல்வர்
சர்ச்சையில் மாநாட்டு பிரகடனம்
தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளித்திட உரிய சட்டம் இயற்றப்படும் என தமிழ் செம்மொழி் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிவிப்பு, அரசியல் சட்டப்படி செல்லுபடியாகுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், தமிழ் மீதும் தமிழர்களின் முன்னேற்றத்தின் மீதும் பற்றுக்கொண்டவர்கள் அதை எதிர்ப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டி, கடந்த ஒரு வாரமாக கோவையில் தங்கியிருந்த முதலமைச்சர் கருணாநிதி அவர்கள், சென்னை திரும்பும் முன்பு கோவையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
மொரீஷியஸ் போன்ற வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் பலர் தமிழை மறந்துவிட்ட நிலையில், அவர்கள் தங்கள் அடையாளத்தைத் தெரிந்துகொள்ள தமிழக அரசு ஏற்பாடு செய்யுமா, தமிழ்நாட்டிலிருந்து அறிஞர்கள், ஆசிரியர்களை, புத்தகங்களை அனுப்பி உதவுமா என செய்தியாளர்கள் கேட்டபோது, அவ்வாறு கோரிக்கைகள் வந்தால் அதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
அடுத்த மாநாடும் தமிழ் செம்மொழி மாநாடாக நடைபெறும் என முதல்வர் அறிவித்துள்ள நிலையில், ஜப்பானில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் அனுமதியும் ஒத்துழைப்பும் கோரப்படுமா எனக் கேட்டபோது, எல்லா அமைப்புக்களின் ஒத்துழைப்புடனும் அடுத்த மாநாடு நடத்தப்படும் என முதலமைச்சர் பதிலளித்தார்.
செம்மொழி மாநாட்டை ஒட்டி கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை தொடர்பாக கருத்துத் தெரிவித்த கருணாநிதி, அரசு அவ்வாறு எந்த முடிவையும் அறிவிக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
0 comments:
Post a Comment