>> Thursday, June 10, 2010
பிரிட்டன் வர ஆங்கிலம் தேவை
பிரிட்டிஷ் விசா பெற ஆங்கிலம் அவசியம்
பிரிட்டிஷ் பிரஜைகளை திருமணம் செய்து பிரிட்டனில் குடியேற விழைபவர்கள் ஆங்கிலம் கற்றிருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் திட்டம் ஒன்றை பிரிட்டிஷ் அரசாங்கம் முன்னெடுக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே உள்ள நாடுகளில் இருந்து இவ்வாறு பிரிட்டனுக்கு வர விண்ணப்பிப்பவர்கள் ஆங்கிலத்தில் அடிப்படை அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.
ஏற்கனவே திருமணமாகி அல்லது திருமணமாகாமல் பிரிட்டனில் இருக்கும் ஜோடிகளுக்கும், ஒரு பாலின ஜோடிகளுக்கும் இது பொருந்தும்.
திருமண மோதிரங்கள்
பிரிட்டிஷ் பிரஜைகளை திருமணம் செய்பவர்கள் பிரிட்டனுக்கு வர ஆங்கில அறிவைப் பெற்றிருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் விதிகள் முதன்முதலில் 2007 இல் தொழிற்கட்சியினரால் பிரேரிக்கப்பட்டது. அடுத்த ஆண்டுமுதல் இதனை அமலுக்குக் கொண்டுவர அவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், இப்போது புதிய அரசாங்கத்தின் கீழ், எதிர்வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து அது அமலுக்கு வருகிறது.
தற்போதைய நிலையில், பிரிட்டிஷ் பிரஜைகளை திருமணம் செய்பவர்கள் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கான விதிகள், ''அவர்களுடைய திருமணம் உண்மையானது, அவர்கள் பிரிட்டிஷ் அரசாங்க உதவி நிதிகளில் தங்கியிருக்க மாட்டார்கள் என்பவற்றை உறுதி செய்ய வேண்டும்'' என்பதையே வலியுறுத்துகின்றன.
ஆங்கிலப் பயிற்சி நிலையம் ஒன்று
ஆங்கிலம் பேசத்தெரிந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துவது, பிரிட்டிஷ் சமூகத்தில் இரண்டறக் கலப்பதற்கும், கலாச்சார தடைகளை களைவதற்கும் பொதுச் சேவைகளை பாதுகாப்பதற்கும் ஊக்கமாக அமையும் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் கூறுகிறது.
குடியேறி வருபவர்கள் ஆங்கிலத்தில் தொடர்புகொள்ள முடியாத போது பல பிரச்சினைகள் எழுவதாகவும், அவர்கள் சமூகத்தில் தனிமைப்பட்டுப் போவதாகவும் குடிவரவு அமைச்சரான டாமியன் கிறீன் கூறுகிறார்.
ஆனால், மக்களைப் பொறுத்தவரை, ஒருவர் யாரைத் திருமணம் செய்யலாம் என்பது குறித்த அவரது தெரிவை இந்தத் திட்டம் மட்டுப்படுத்துகிறது என்று அதனை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள்.
கடந்த வருடத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே இருந்து பிரிட்டிஷ் பிரஜைகளை திருமணம் செய்தவர்கள் 59,000 பேருக்கு பிரிட்டனில் குடியேற விசா வழங்கப்பட்டது. இந்த புதிய விதிகள் இந்த தொகையை 10 வீதத்தால் குறைக்கும் என்று அதிகாரபூர்வ மதிப்பீடுகள் கூறுகின்றன.
இந்த நகர்வு தெற்காசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் உள்ள ஆங்கிலம் பேசாத நாடுகளை சேர்ந்தவர்களை சமச்சீரற்ற வகையில் பாதிக்கும் என்று குடியேறிகளுக்கான நலக்குழுக்கள் கூறுகின்றன.
இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், வங்கதேசத்தவர்கள் மற்றும் இலங்கையர் இதனால் பாதிக்கப்படுவார்கள்.
பிரிட்டிஷ் பிரஜைகள் அவர்களது வெளிநாட்டு வாழ்க்கைத் துணைவர்களை பிரிட்டனுக்கு அழைத்துக்கொள்வதற்கான விசா, ஒருவரை பிரிட்டனில் இரண்டு வருடங்கள் வாழ அனுமதிக்கிறது.
அதன் பின்னர் அவர்கள் பிரிட்டனில் காலவரையின்றி வாழ்வதற்கான அனுமதிக்காக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரிகள் பின்னர் ''ஐக்கிய இராட்சியத்தில் வாழ்க்கை மற்றும் மொழி'' ஆகியவை குறித்த மேலதிக பரீட்சையிலும் தேறியாக வேண்டும்.
0 comments:
Post a Comment