>> Thursday, June 17, 2010
இலங்கை வெளியுறவு அமைச்சருடன் அமெரிக்க அரசுத்துறைச் செயலர் (ஆவணப்படம்)
இராஜதந்திரிகள் விஜயம்
இலங்கை அரசாங்கம் போரில் வெற்றிபெற்று ஒரு வருடம் கழிந்த நிலையில் அந்த நாடு எதிர்கொள்கின்ற சவால்களை விவாதிக்கும் வகையில் இந்த வாரத்தில் இலங்கைக்கு பல வெளிநாட்டு மூத்த இராஜதந்திரிகள் விஜயம் செய்கிறார்கள்.
ஐநாவின் மூத்த அதிகாரியான லின் பஸ்கோ மற்றும் ஜப்பானின் இலங்கைக்கான சிறப்புத்தூதுவரான யசூசி அகாசி ஆகியோர் வரவிருக்கும் நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மூத்த ஆலோசகர்கள் இருவர் ஏற்கனவே இலங்கைக்கு வந்துவிட்டார்கள்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசாங்கம் வெற்றி பெற்ற ஒரு வருடத்தை கடந்த மாதம் இலங்கை பூர்த்தி செய்திருந்த நிலையில், இலங்கை அரசாங்கமும், விடுதலைப்புலிகளும் போரின் இறுதிக்கட்டத்தில் போர்க்குற்றங்களை செய்திருக்கலாம் என்று குற்றஞ்சாட்டி அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தொடர்ச்சியாக வெளியிட்ட அறிக்கைகள் இலங்கை அரசாங்கத்தை கடுமையாக கோபப்படுத்தியிருந்தன.
அப்படியான நடவடிக்கைகளில் தமது படையினர் ஈடுபடவில்லை என்று இலங்கை அரசாங்கம் மறுத்திருந்தது.
ஆனால், ''போர்க்குற்றங்கள் மற்றும் அக்கிரமங்கள்'' ஆகியவை குறித்த அமெரிக்க தேசிய பாதுகாப்புக் கவுன்ஸிலின் இயக்குனரான டேவிட் பிரஸ்மனும், அதிபர் ஒபாமாவின் மற்றுமொரு மூத்த ஆலோசகரான சமந்தா பவர் அவர்களும் ஏற்கனவே இலங்கையில் வந்தது தங்கியிருக்கிறார்கள் என்று திடீரென தெரியவந்துள்ளது.
அதிகாரிகளையும், சிவில் சமூக உறுப்பினர்களையும் சந்தித்து வருகின்ற அவர்கள், இலங்கையின் போர் நடந்த இடங்களுக்கும் விஜயம் செய்கிறார்கள்.
இலங்கை அரசாங்கம் போரின் போது கையாண்ட யுக்திகள் தொடர்பாக கடுமையாக விமர்சித்துவந்த அமெரிக்கா, அண்மைக்காலமாக, இலங்கையை ஊக்கம் தந்து திருத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது.
சில சர்வதேச விமர்சனங்களால் கவரப்படாமல், இலங்கை அரசாங்கத்தால், நியமிக்கப்பட்டுள்ள புதிய நல்லிணக்கக்குழு தனது பணியை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலாரி கிளின்டன் கூறியுள்ளார்.
அதற்கு எதிராக முத்த ஐநா அதிகாரிகள் இலங்கையில் போரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற நிகழ்வுகள் குறித்து சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று அழைப்புவிடுத்துவருகின்றார்கள்.
பல தடவைகள் தனது இலங்கைக்கான விஜயத்தை பின்போட்டு வந்த ஐநாவின் மூத்த அரசியல் அதிகாரியான லின் பாஸ்கோ அவர்கள் இறுதியாக புதனன்று இலங்கை வரவுள்ளார்.
இலங்கையில் சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டனவா என்பது குறித்த பொறுப்புக் சுமத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஐநாவின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்கள், இலங்கை விவகார நிபுணர்கள் குழு ஒன்றை நியமித்துள்ளார்.
''பொறுப்பு சுமத்தல்'' மற்றும் ''நல்லிணக்கம்'' என்ற இந்த இரண்டு பதங்கள்தான், அவற்றை வலியுறுத்தும் முறையே ஐநா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் போரின் பின்னரான இலங்கையில் எதற்கு முன்னுரிமை கொடுத்து ஆராய விழைவார்கள் என்பதற்கு ஒரு தடயமாகும்.
0 comments:
Post a Comment