>> Friday, June 11, 2010


டக்ளஸ் தேவானந்தா
"டக்ளஸ் விவகாரம்--தில்லிக்கு தகவல்"



தமிழ்நாட்டில் சில குற்றவியல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு பின்னர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இலங்கை பாரம்பரிய தொழில் மற்றும் சிறுதொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்து புது டில்லி காவல்துறையினருக்கு தகவல் அனுப்பியிருப்பதாக சென்னை காவல்துறை ஆணையர் டி.ராஜேந்திரன் தெரிவித்திருக்கிறார்.
1986ம் ஆண்டு நவம்பர் 1ம் நாளன்று அப்போது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஈ.பி.ஆர்.எல்.எஃப்பில் இருந்த டக்ளஸ் தேவானந்தா சென்னை சூளைமேடு பகுதியில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின்போது ஒருவரை சுட்டுக்கொன்றதாகவும் மேலும் நால்வரை காயப்படுத்தியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைதும் செய்யப்பட்டார். சில மாதங்கள் கழித்து ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.

பிறகு, 1988ம் ஆண்டு நவம்பரில் 10 வயது சிறுவனை கடத்திச் சென்று 7 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும் டக்ளஸ் தேவானந்தா மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார்.

1989ம் ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். ஓராண்டிற்கு பிறகு விடுதலை செய்யப்பட்ட அவர் இலங்கைக்கு சென்றார். ஆனால் அவர் மீதான வழக்குக்கள் தொடர்பாக சென்னை ஆறாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் டக்ளஸ் தேவானந்தாவை தேடப்படும் குற்றவாளி என அறிவித்தது. அந்த அறிவிப்பு இன்னமும் நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில் தற்போது இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சேயுடன் இந்தியா வந்திருக்கும் அவரைக் கைது செய்யவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருக்கிறது.

தேவானந்தா குறித்து புது டில்லி காவல்துறையினருக்கு தகவல் அனுப்பியிருப்பதாக சென்னை காவல்துறை ஆணையர் டி.ராஜேந்திரன் பிபிசி தமிழோழையிடம் தெரிவித்தார்.

தேவானந்தாவைக் கைது செய்யக்கோரும் மனு நாளை வெள்ளிக்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter