>> Monday, June 28, 2010
ஐ நா குழுவுக்கு இலங்கை எதிர்ப்பு
ஐ நா வின் தலைமைச் செயலர் அமைத்துள்ள குழுவை இலங்கை எதிர்க்கிறது
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக கடந்த ஆண்டு முடிவுக்கு வந்த இறுதி கட்ட போரின் போது இடம் பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து தனக்கு ஆலோசனை வழங்க ஐ நா வின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அமைத்துள்ள குழுவுக்கு இலங்கை அரசு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு மறைமுக செயற்திட்டம் உள்ளதாக இலங்கை அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
போரின் போது இடம் பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்பாக ஐ நா வின் தலைமைச் செயலருக்கு ஆலோசனை வழங்க மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
புலிகளுக்கு புத்துயிர் எனப் புகார்
பான் கீ மூன் அவர்களின் இந்தச் செயற்பாடு இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு புத்துயிரூட்டும் ஒரு செயல் என இலங்கை அரசு முன்னர் வர்ணித்திருந்தது.
முள்ளிவாய்க்கால் மருத்துவமனையும் தாக்குதலுக்கு உள்ளானந்து
கடந்த ஆண்டு முடிவுக்கு வந்த இறுதிகட்ட போரின் கடைசி ஐந்து மாதங்களில் ஏழாயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் இறந்ததாக ஐ நா கூறுகிறது.
இந்த மூன்று உறுப்பினர்கள் குழுவை அமைப்பது தொடர்பான விடயம் கடந்த ஆண்டு மே மாதம் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்த போது ஜனாதிபதியுடன் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் இடம் பெற்றிருந்தது.
நான்கு மாதங்களில் அறிக்கை
இந்தோனீசியாவின் மார்சூகி தாருஸ்மான் இந்த மூவர் குழுவுக்கு தலைவராக செயற்படுவார். தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த யாஸ்மின் சூக்கா மற்றும் அமெரிக்காவின் ஸ்டீவென் ராட்னர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
இந்த வல்லுனர் குழு தாங்கள் பொறுப்பேற்ற பிறகு நான்கு மாதங்களில் தமது பணியை முடிப்பார்கள்.
இலங்கையில் இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தவறுக்கு பொறுப்பு சுமத்தும் நடவடிக்கை குறித்து சர்வதேச அளவுகோள்களின் நடைமுறைகளுக்கு ஏற்க எப்படி முன்னெடுப்பது என்பது பற்றிய வழிமுறைகளை ஆராயும்.
இந்த குழுவின் பரிந்துரைகள், இது தொடர்பில் இலங்கை அரசு தமது வல்லுநர்களை கொண்டு விசாரிக்க முன்வருவதற்கு கொடுத்த உறுதிமொழியை காப்பாற்ற முன்வருமானால், அதற்கும் உதவியாக இருக்கும் எனவும் ஐ நா வின் அறிக்கை கூறுகிறது.
தங்களது செயற்பாடுகள் தொடர்பில் இந்த வல்லுநர் குழு இலங்கையிலுள்ள அதிகாரிகளுடனும் இணைந்து செயற்படும் என தாங்கள் நம்புவதாகவும் ஐ நா வின் தலைமைச் செயலரின் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடும் எதிர்ப்பு
கடந்த ஆண்டு இலங்கை வந்த போது மஹிந்தவுடன் பான் கீ மூன்
இலங்கையில் நீடித்திருக்கக் கூடிய ஒரு அமைதி மற்றும் இணக்கப்பாட்டுக்கு மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு யார் பொறுப்பு என்பது குறித்த விசாரணை அடிப்படையானது என்பது தொடர்பில் பான் கீ மூன் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்கின்றார் என அவரது பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
ஐ நா வின் தலைமைச் செயலர் தனக்கு ஆலோசனை கூற அமைத்துள்ள இந்த குழுவானது தேவை இல்லாமல் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடும் ஒரு செயல் என்று கூறி இலங்கை அரசு தனது கடுமையாக எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
தேவையில்லாத தலையீடு
முப்பது ஆண்டுகளாக நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்ட விடுதலைப் புலிகளை தோற்கடித்த பிறகு, இது தொடர்பாக கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் இணக்கப்பாடு குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கை அரசு ஒரு ஆணையத்தை அமைத்துள்ள நிலையில், ஐ நா வின் இந்த நடவடிக்கை தேவையற்றது என இலங்கை அரசின் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
இலங்கை இறையாண்மையுள்ள ஒரு நாடு எனவும், தமது நாட்டில் சுதந்திரமான நீதி நிர்வாகம் இருக்கின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ள அரசின் அறிக்கை, தமது நாடு தொடர்ந்து மனித உரிமைகளை பாதுகாத்தும் முன்னெடுத்தும் வருகின்றது எனவும் தெரிவித்துள்ளது.
இறையாண்மையுள்ள ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தேவையற்ற ஒரு தலையீடாகவே ஐ நா வின் இந்த செயற்பாடு உள்ளதாகவும் கூறும் வெளியுறவு அமைச்சகம், இப்படியான நடவடிக்கைகள் மூலம் நாட்டில் இணக்கப்பாட்டை அரசு முன்னெடுத்து வரும் வேளையில் அதற்கு குந்தகம் விளைவிக்க சில சுயநல சக்திகள் செயற்பட வழிவகுக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
தெளிவின்மை
ஐ நா வின் தலைமைச் செயலர் அமைத்துள்ள இந்த வல்லுநர்கள் குழு அவருக்கு அலோசனை வழங்கும் வகையிலேயே உள்ளது என்பதும் அது விசாரணைகளை நடத்தும் ஒரு குழு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல இலங்கை அரசால் சில வாரங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டுள்ள ஆணையம், எது குறித்து ஆராயும், யாரை விசாரிக்கும் என்பதும் கூட தெளிவில்லாமலேயே இருக்கின்றது.
0 comments:
Post a Comment