>> Thursday, June 17, 2010
முல்லைதீவுப் பகுதியில் லின் பாஸ்கோ
ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான துணைப் பொதுச் செயலர் லின் பாஸ்கோ புதன்கிழமை பிற்பகல் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
அங்கு நடைபெறுகின்ற மீள்குடியேற்றம் மற்றும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன் அங்கு நடைபெறுகின்ற அபிவிருத்தி வேலைகள், புனரமைப்பு பணிகள் என்பவை தொடர்பாகவும் முல்லைத்தீவு அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்துள்ளார்.
மாவட்ட அரசாங்க அதிபர் எமில்டா சுகுமார், போருக்கு பிறகு முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வரும் மீள்குடியேற்றம் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக அவருக்கு விளக்கியுள்ளார்.
வற்றாப்பளை. குமாரபுரம் பகுதிகளுக்குச் சென்று மீளக்குடியமர்ந்துள்ள மக்களின் நிலைமைகளையும், கண்ணிவெடி அகற்றும் பணிகளின் நிலைமைகளையும் நேரடியாகப் லின் பாஸ்கோ பார்த்தறிந்துள்ளார்.
வற்றாப்பளை பகுதியில் பொதுமக்களைச் சந்தித்த அவர் அவர்களது குறை நிறைகளைக் கேட்டறிந்ததுடன் குமாரபுரம் பகுதியில் இடம்பெறுகின்ற கண்ணிவெடி அகற்கும் பணிகள் தொடர்பாக இராணுவ அதிகாரிகளிடமும், எஃப்.எஸ்.டி கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினரிடமும் கேட்டறிந்து கொண்டார்.
எதிர்கட்சித் தலைவர்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் ஊடகத்துறையினரையும் லின் பாஸ்கோ சந்தித்து பேசவுள்ளார் எனவும் கூறப்படுகிறது.
இலங்கை ஜனாதிபதியுடன் லின் பாஸ்கோ
தனது முல்லைத்தீவு பயணத்தை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பிய ஐக்கிய நாடுகள் சபையின் துணைப் பொதுச் செயலர், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசியுள்ளார்.
தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என அவரிடம் கோரிக்கை விடுத்த பொதுமக்கள், அழிவுக்குள்ளாகிய தமது வீடுகளைத் திருத்தவும், வீடில்லாதவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கவும் வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
முல்லைத்தீவு பகுதிகளின் மீள்குடியேற்ற அபிவிருத்தி நடவடிக்கைகளைத் தாங்கள் தொடர்ச்சியாகக் கவனித்து வருவதாகவும், தேவையான உதவிகளை அரசாங்கத்தின் ஊடாக வழங்கவுள்ளதாகவும் லின் பாஸ்கோ அந்த மக்களிடம் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment