>> Friday, June 18, 2010
ஒரு வாரத்தில் ஆலோசனைக் குழு
லின் பாஸ்கோ
இலங்கையில் முடிவுக்கு வந்த இறுதிகட்ட போரின் போது இடம் பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ நாவின் தலைமைச் செயலருக்கு ஆலோசனை வழங்க ஒரு குழுவை அமைக்கும் பணி அடுத்த வாரத்தின் முதல் பகுதியில் முடிவடையக் கூடும் என ஐ நா வின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார்.
அந்நட்டு அரசின் எதிர்ப்பையும் மீறி இந்தக் குழு அமைக்கப்படுகிறது
இலங்கையில் பல ஆண்டுகளாக இருந்து வரும் மனக்கசப்பு ஒரே இரவில் மறையாது என்று ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான துணைத் தலைமைச் செயலர் லின் பாஸ்கோ தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் விஜயமாக இலங்கை வந்திருந்த அவர் தனது விஜயத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த போதே இந்தக் கருத்தை வெளியிட்டார்.
பல தசாபதங்களாக ஏற்பட்டிருந்த காயங்களை ஆற்றும் நடவடிக்கைகளுக்கான பெரிய முயற்சி செய்யப்பட வேண்டிய தருணம் தற்போது வந்துள்ளது எனவும் லின் பாஸ்கோ கூறியுள்ளார்.
போர் முடிவடைந்துள்ள நிலையில், அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டியது முக்கியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். போர் எதனால் ஏற்பட்டது என்பதை அறிந்து கொண்டு அதை களையும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் எனவும் லின் பாஸ்கோ கூறியுள்ளார்.
இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம் பெற்ற நிகழ்வுகள் குறித்து நம்பகத்தன்மையுடன் கூடிய ஒரு விசாரணை தேவை என ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் தொடர்ந்து கூறி வருவதையும் லின் பாஸ்கோ சுட்டிக் காட்டினார்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசு ஒரு ஆணையத்தை அமைத்துள்ளதை ஐ நா கவனத்தில் எடுத்துள்ளது எனவும் கூறிய லின் பாஸ்கோ அரசு விரும்பினால் அந்த ஆணையத்துக்கு ஆதரவளிக்கவும், உதவுவதற்கும் ஐ நா தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன
வட இலங்கையில் லின் பாஸ்கோ(பழைய படம்)
இலங்கையின் வடக்கே போரினால் இடம் பெயர்ந்து தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மக்களுக்கு உண்மையாகவே பல பிரச்சினைகள் இருக்கின்றன எனவும் லின் பாஸ்கோ கூறியுள்ளார்.
பல மாதங்கள் முகாம்களில் இருந்துவிட்டு தங்களது வீடுகளுக்கு திரும்பும் போது அங்குள்ள நிலைமைகள் மக்களுக்கு கவலையளிக்கக் கூடிய வகையில் இருக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“வீடுகளுக்கு கூரைகளே இல்லாத நிலையும், அல்லது வீடுகளே இல்லாத நிலையையும் காண்பது மிகவும் வேதனையான விடயம்” என்றும் லின் பாஸ்கோ செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் கடுமையானவை என்றும், அதை அவர்கள் எழுப்புவதில் நியாயம் இருக்கின்றது எனவும் லின் பாஸ்கோ தெரிவித்துள்ளார்.
எனினும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நடவடிக்கையில் உள்ளூர் அரசும், தேசிய அரசும் கடுமையாக செயற்பட்டு வருவதையும் தம்மால் காணக் கூடியதாக இருந்ததாகவும் லின் பாஸ்கோ கருத்து வெளியிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment