>> Wednesday, June 30, 2010
யு என் எச் சி ஆர் முத்திரை
யு என் எச் சி ஆர் அலுவலகம் மூடப்படும்''
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையம் இலங்கையின் கிழக்குப் பகுதியில் தனது பணிகளை குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.
இதன்படி கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மட்டக்களப்பில் செயற்பட்டு வந்த அந்த அமைப்பின் அலுவலகம் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கிழக்குப் பகுதியில் இதுவரை காலமும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அதனால் இடம்பெயர்ந்தவர்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையத்தின் அலுவலகம் உதவி வந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக இடம்பெயர்ந்திருந்த நிலையில் இருந்த மக்களில் பெரும்பாலானவர்கள் தமது இருப்பிடங்களுக்கு திரும்பி விட்டதாகவும் அதனாலேயே தமது பணிகளை கிழக்கு மாகாணத்தில் குறைத்துக் கொள்வதாகவும் யு என் எச் சி ஆர் அமைப்பின் இலங்கை பிரதிநிதி மைக்கேல் ஸ்வாக் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பியிருந்தாலும் பல காலமாக அவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் உதவிகளை தமது அமைப்பு செய்து வந்துள்ளது என்றும் மைக்கேல் ஸ்வாக் கூறியுள்ளார்.
இலங்கையின் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற உச்சக்கட்டப் போரின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 1,60,000 பேர் இடம்பெயர நேர்ந்தது. மேலும் கிழக்கு மாகாணத்தின் மற்ற பகுதிகளிலிருந்தும் 1,40,000 பேர் இந்த மாவட்டத்துக்கு வந்தனர்.
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இன்னமும் 2000 பேர் வரை மீளக் குடியேற்றப்படாத நிலையில் இருக்கிறார்கள் எனவும் ஐ நா வின் அதிகாரி கூறுகிறார். அவர்கள் வாழ்ந்து வந்தப் பகுதிகளில் கண்ணி வெடி அகற்றும் பணி முழுவதுமாக முடியவில்லை என அரசு கூறுவதே இவர்கள் தமது இடங்களுக்கு செல்வதில் தாமதத்தை ஏற்படுத்துகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடக்கே இன்னமும் மீள்குடியேற்றம் செய்யப்படாமல் இருக்கும் 54,000 மக்களின் நலன் குறித்தும் அவர்கள் தமது சொந்த இடங்களுக்கு சென்று மீண்டும் வாழ்வது குறித்தும் தாங்கள் தற்போது கவனம் செலுத்தி வருவதாகவும் யு என் எச் சி ஆர் அமைப்பின் இலங்கை பிரதிநிதி மைக்கேல் ஸ்வாக் தெரிவித்துள்ளார்.
இந்த அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது பணிகளை நிறுத்திக் கொண்டு அலுவலகத்தை மூடுவது தங்களுக்கு கவலை அளிக்கிறது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா கூறுகிறார்.
மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள மக்களுக்கு இன்னும் முழுமையான வாழ்வாதாரங்கள் ஏற்படவில்லை என்றும் அதுவரை ஐ நா வின் அகதிகளுக்கான ஆணையம் போன்ற அமைப்புகளின் ஆதரவு தேவைப்படுகிறது எனவும் அவர் கூறுகிறார்.
0 comments:
Post a Comment