>> Wednesday, June 2, 2010
திமுக கூட்டணியில் பாமக
பா ம க நிறுவனர் ராமதாஸ்
திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் முடிவில் மாற்றம் இல்லை என பாட்டாளி மக்கள் கட்சி கூறி இருக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாசின் மகனான முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாசின் ராஜ்யசபா எம் பி பதவிக்காலம் முடிவுக்கு வரும் நிலையில்- அவரை மீண்டும் எம் பியாக தேர்ந்தெடுக்க திமுகவின் ஆதரவை பாமக கோரியிருந்தது.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த திமுகவின் உயர்நிலை செயல் திட்டக் குழுவின் கூட்டத்தில் பாமகவை கூட்டணியில் இணைத்துகொள்வதென்றும் ஆனால் எதிர்வரும் மாநிலங்களவைத் தேர்தல்களில் அக்கட்சிக்கு இடம் ஒதுக்கப்படாது, மாறாக அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தல்களில் பாமகவிற்கு ஓர் இடம் ஒதுக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது.
மாநிலங்களவைத் தேர்தலில் பாமகவுக்கு இப்போதைக்கு இடம்தரப்படாது என திமுக எடுத்துள்ள முடிவு குறித்து பாமக கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்பட்டது. திங்கள் கிழமை நடந்த பாமகவின் உயர் மட்ட ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகும் நிலை தெளிவுபடுத்தப்படவில்லை. முதல்வரை பாமகவின் சார்பில் ஒரு குழு சந்திக்கும் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படியே கட்சித் தலைவர் கோ.க.மணி தலைமையிலான ஒரு குழு முதல்வர் கருணாநிதியை செவ்வாய்கிழமையன்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியது. பின்னர் கூட்டணி தொடரும் என்று செய்தியாளர்களிடம் மணி கூறினார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி, 2009 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுக கூட்டணிக்குச் சென்றது. ஆனால் அக்கட்சிக்கு போட்டியிட்ட 7 இடங்களிலும் தோல்வியே கிடைத்தது.
0 comments:
Post a Comment