>> Monday, April 12, 2010




அரசாங்கத்துக்கு த.தே.கூ ஆதரவா?

''இனப்பிரச்சனைத் தீர்வில் சாதகமான அணுகுமுறையை த.தே.கூ பரிசீலிக்கும்''
இலங்கையில் ஆளும் சுதந்திர முன்னணி அரசாங்கம், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் பெறும் நோக்கில் த.தே. கூட்டமைப்பின் ஆதரவை நாடுவதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள ஊகங்களில் உண்மை இருக்கலாம் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சுரேஷ் பிரேமச்சந்தரன் செவ்வி
அரசியல் யாப்பில் இனப்பிரச்சினை தொடர்பாகப் பேசுவதற்கு ஜனாதிபதி முன்வருவாராக இருந்தால், நிச்சயம் அவருடன் பேசுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தயாராக இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச் சந்திரன் கூறினார்.
மகிந்தவுடன் சம்பந்தர்(ஆவணம்)இனப் பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வு வர வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரும்புகிறது என்பது அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், அவ்வகையான தீர்வை ஜனாதிபதி முன்னெடுத்தாலும் சரி, அல்லது வேறு வகையான தீர்வை முன்மொழிந்தாலும் சரி, அவ்விவகாரத்தை தமது கட்சி பரிசீலிக்கும் என்று கூறினார்.
அரசாங்கம் கொண்டுவர முயற்சிக்கும் அரசியல் சாசன மாற்றங்கள் தமிழரின் இனப் பிரச்சினைக்கான தீர்வை உள்ளடக்கியதாக இருந்தால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அது தொடர்பாக இணக்கப்பாட்டுடன் ஆய்வுசெய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
த.தே.கூ உறுப்பினர்கள்(2005இல்)இலங்கையின் தமிழ் மக்கள் தனிநாடு கோரிக்கைகளையெல்லாம் கைவிட்டு, ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வந்துள்ளனர். அதுபோல அரசாங்கமும் தமது தரப்பில் விட்டுக்கொடுப்புகளைச் செய்ய முன்வர வேண்டும் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மையினர் பலமும் முஸ்லிம்களும்

இலங்கையில் முஸ்லிம்கள்
இலங்கையில் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஒன்றிணைந்து அரசியலை எதிர்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
என்.பீ.எம்.சைஃபுதீன் செவ்வி
சிங்கள பெரும்பான்மை வாக்குகளால் அமைக்கப்படும் புதிய அரசாங்கம் சிறுபான்மை மக்களின் பங்களிப்பின்றி அரசியலமைப்பு மாற்றங்களைச் செய்யக்கூடிய நிலை தற்போது உருவாகியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நிலையை தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் ஊக்குவிக்குமானால் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் எதிர்காலம் பலவீனமான நிலைக்கே தள்ளப்படும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியலறிவுத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் என்.பீ.எம்.சைஃபுதீன் தமிழோசையிடம் கருத்து வெளியிட்டார்.
தமிழ்,முஸ்லிம் தலைவர்கள்சிறுபான்மை சமூகங்கள் ஒற்றுமையாக இணைந்து தேர்தலைகளை எதிர்கொள்வதன் மூலம் மட்டுமே தமது விகிதாசாரங்களுக்கு ஏற்ப பிரதிநிதித்துவங்களை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
பல மாவட்டங்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் கடந்த தடவைகளைவிட இம்முறை குறைந்துள்ளமைக்கு ஒரே கட்சி வேட்பாளர்களுக்கிடையிலான போட்டியும் போட்டி கட்சிகளுக்கிடையில் வாக்குகள் சிதறிப்போனமையுமே காரணம் என சைஃபுதீன் கூறுகிறார்.
முஸ்லிம் மக்கள் வழமையாக பெற்றுவந்த பிரதிநிதித்துவங்கள் குறைந்துவருவதை முஸ்லிம் கட்சிகள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதும் அவரது கருத்தாக அமைந்துள்ளது.



போலந்து அதிபருக்கு அஞ்சலி

போலந்து அதிபருக்கு இறுதி மரியாதை
போலந்து அதிபர் லெஹ் கச்சின்ஸ்கி சென்ற விமானம் மேற்கு ரஷ்யாவில் தரையில் மோதி வெடித்து ஓர் நாள் ஆகும் நிலையில், அதிபரின் சடலம் போலந்து தலைநகர் வார்சாவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் பயணம் செய்த 96 பேரில் அனைவருமே கொல்லப்பட்டிருந்தனர்.
சிகப்பு மற்றும் வெள்ளை நிறம் கொண்ட போலந்தின் தேசியக் கொடியால் மூடப்பட்டிருந்த பிரேதப் பெட்டியை, இராணுவ அதிகாரிகள் விமானத்திலிருந்து, சிகப்புக் கம்பளப் பாதையில் கொண்டு செல்ல, முக்கியஸ்தர்கள் வரிசையாக நின்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அதிபரின் இரட்டைச் சகோதரரான முன்னாள் பிரதமர் யாரோஸ்வாவ் கச்சின்ஸ்கியும் தற்போதைய பிரதமர் டோனல்ட் டஸ்கும் அதிபருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
போலந்து திருச்சபைகளில் பிரார்த்தனைமந்திரங்களும் பிரார்த்தனைப் பாடல்களும் ஒலிக்க, வீதி ஊர்வலமாக பிரேதப்பெட்டி அதிபர் மாளிகைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திலும் இராணுவத்திலும் மிக முக்கியப் பொறுப்பில் இருந்தவர்கள் டஜன் கணக்கானோரும் இந்த சம்பவத்தில் பலியானவர்களில் அடங்குவர்.
இறந்தவர்களுக்காக போலந்தில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, இந்த கோர சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு தலைமையேற்றுள்ள ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின், விமானம் தரையில் மோதி வெடித்த இடத்துக்கு சென்று நினைவஞ்சலி நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார்.
என்ன நடந்துள்ளது என்பதை மிக விரைவில் கண்டறியவுள்ளதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
எரிந்த நிலையில் விமானம்ஆனாலும் விமானம் மிகவும் தாழ்வாக சென்றுகொண்டிருந்ததாகவும், மிகுந்த பனிமூட்டத்துக்கு மத்தியில் ஓடுபாதை ஒன்றில் தரையிரங்க முற்பட்டபோது அது சில மரக் கிளைகள் மாட்டி தரையில் விழுந்ததாகவும் ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டுள்ளதாக ஸ்மலன்ஸ்க் நகரில் உள்ள பிபிசி செய்தியாளர் தெரிவித்தார்.



கூட்டமைப்பின் வெற்றி...




இரா.சம்பந்தன்
2004 ஆம் ஆண்டில் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 22 இடங்களை வென்றிருந்த நிலையில், இம்முறை தேர்தலில் அந்தக் கூட்டமைப்பு 12 இடங்களையே வென்றுள்ளது.
அந்தக் கூட்டமைப்பு மேலும் சில ஆசனங்களை பெறக் கூடிய வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.
கடந்த முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தெரிவான சிலர் அதிலிருந்து வெளியேறி வேறு கட்சிகளின் கீழ் இம்முறை தேர்தலில் போட்டியிட்டனர்.
அப்படியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனியாகப் போட்டியிட்ட வேட்பாளர்கள் யாரும் வெற்றி இம்முறை வெற்றி பெறவில்லை.
2001 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றிருந்த சில பழைய முகங்கள் மீண்டும் இம்முறை தெரிவாகியுள்ளனர்.
மேலும் கடந்த 2004 ஆம் ஆண்டுத் தேர்தலின் போது விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்ட பெரும்பாலான வேட்பாளர்கள் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர் எனபதும் குறிப்பிடத்தக்கது.
வெற்றிக்கு காரணம்
த.தே.கூ உறுப்பினர்கள்
அரசுக்கு ஆதரவான அரசியல் நிலைப்பாட்டை எடுக்கும் தமிழ் கட்சிகள் ஒரு புறத்திலும், தேசியம், சுயநிர்ணயம் போன்ற கொள்கைகளை தொடர்ந்து கூறி வரும் கட்சிகள் இன்னொரு புறமும் இருக்க, இந்த இரண்டுக்கும் இடையே ‘மிதவாத போக்குடன்’ போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே இம்முறை வெற்றி கிடைத்துள்ளது என்று கூறுகிறார் பத்திரிகையாளர் டி பி எஸ் ஜெயராஜ்.
டி பி எஸ் ஜெயராஜின் கருத்துக்கள்
அப்படியான ஒரு போக்குக்காகத்தான் தமிழ் மக்கள் பெருமளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தனர் என்றும் அவர் கூறுகிறார்.
அதே நேரம் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், இன்றைய சூழலில் தமிழருக்காக ஒற்றுமையான, பலமான ஒரு குரல் ஒலிக்க வேண்டும் என்கிற உணர்வும் பரவலாகக் காணப்பட்டது என்றும் அதுவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கு வழி வகுத்தது என்றும் அவர் கருத்து வெளியிடுகிறார்.
மோதல் அரசியல் பலன் தராது
மகிந்தவுடன் சம்பந்தர்இலங்கையில் அரசியல் தீர்வு குறித்த விவாதங்களும் சர்ச்சைகளும் தொடருகின்ற நிலையில், அரசுடனான மோதல் போக்கு தீர்வுக்கு வழி செய்யாது என்றும் டி.பி.எஸ் ஜெயராஜ் கூறுகிறார்.
தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்துக்களுக்கு மக்கள் வழங்கிய ஆணையாகவே இந்த வெற்றியை கருதுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் அதிகாரப் பரவலாகக்கல் மூலமான தீர்வை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வலியுறித்தி வருகின்ற நிலையில், ஒற்றையாட்சிக்கு வெளியிலான தீர்வுக்கு சாத்தியமில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ கூறிவருகின்றார்.
வடமாகாண சபைக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழ் கட்சிகளுக்கு இடையேயான ஒரு பலப்பரீட்சையாக இந்த தேர்தல் அமைந்துள்ளதாகவும் ஜெயராஜ் கூறுகிறார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் கொடுத்துள்ள வெற்றி அல்லது ஆணை என்பது கடும்போக்கு அரசியல் செய்வதற்கான ஆணை அல்ல

டி.பி.எஸ் ஜெயராஜ்
அந்தத் தேர்தல் முடிவடையும் வரை எல்லாக் கட்சிகளுமே தங்களுடைய தற்போதைய நிலைப்பாடுகளை கைவிடப் போவதில்லை என்றும் கூறும் அவர், அதற்கு பிறகே அரசியல் ரீதியான முன்னேற்றங்கள் ஏற்படும் என தான் கருதுவதாகவும் கூறுகிறார்.
நாடாளுமன்றத் தேர்தல் சூடு இன்னமும் ஆறாத நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சரி, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் சரி தங்களது நிலைப்பாடிலிருந்து இறங்கி வருவது உடனடியாக சாத்தியமாகாது என்பதும் டி பி எஸ் ஜெயராஜின் வாதமாக இருக்கிறது.
ஒற்றையாட்சியும் சமஷ்டியும் எதிரும் புதிருமாக இருக்கும் நிலையில், இந்த இரண்டுக்கும் இடையில் அரசியலுக்கான இடம் நிச்சயமாக இருப்பதாக கூறும் அவர், அந்த இடத்தை அடைய வேண்டியதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் செய்ய வேண்டிய வேலை என்றும் கருத்து வெளியிடுகிறார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter