>> Monday, April 19, 2010
சஷி தரூர் பதவி விலகினார்
இந்தியாவின் வெளிவிவகாரத் துறையின் இராஜாங்க அமைச்சர் சஷி தரூர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழுவின் முடிவை அடுத்து அவர் பதவி விலகியுள்ளார்.
சஷி தரூர் மற்றும் லலித் மோடி
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பிரபலமாக இருக்கும் ஐ பி எல் கிரிக்கெட் போட்டியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள கொச்சி அணி தொடர்பான சர்ச்சையின் காரணமாகவே அவர் பதவி விலக நேரிட்டுள்ளது.
அவரது ராஜிநாமாவை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டுள்ளார்.
ஆளும் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழுவின் கூட்டத்தை அடுத்து ஞாயிறு இரவு பிரதமர் இல்லத்துக்கு அழைக்கப்பட்ட தரூர் அங்கு பிரதமருடன் சுமார் 40 நிமிடங்கள் உரையாடிய பின்னர் தனது முடிவை அறிவித்தார்.
ஞாயிறு அன்று காலையும் தரூர் மன்மோகன் சிங்கை சந்தித்து தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.
"பங்குகளால் வந்த பிரச்சினை"
விக்கெட் விழுந்தது
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் புதிதாக இணைந்துள்ள கொச்சி அணியின் சில பங்குகளை தனது தோழியான சுனந்தா புஷ்கருக்கு வழங்க அவர் அந்த அணியின் நிர்வாகத்தினருக்கு அழுத்தம் கொடுத்தார் என்று அவர் மீது புகார் கூறப்பட்டது.
கொச்சி அணியின் உரிமையாளர்களில் சுனந்தாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் அந்தப் புகார்களை சஷி தரூர் மறுத்துள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தனது நிலைப்பாட்டை அவர் தெரிவித்தாலும், எதிர் கட்சிகள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
அவர் மீதான குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து அவருக்கும் ஐ பி எல் போட்டிகளின் ஆணையாளர் லலித் மோடிக்கும் இடையே மோதல் வலுத்தது.
கொச்சின் அணியின் உரிமையாளர்கள் மீது அவசியமில்லாத அழுத்தத்தை சசி தரூர் ஏற்படுத்தினார் என்று லலித் மோடி குற்றம் சாட்டியிருந்தார்.
எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
இந்த சர்ச்சை எழுந்ததை அடுத்து ஞாயிறன்று கொச்சி அணியில் தனக்கு இருக்கும் பங்குகளை திருப்பியளிப்பதாக சுனந்தா ஞாயிறன்று காலை அறிவித்திருந்தார்.
சஷி தரூர் மீது எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என இந்திய நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சி உட்பட பலர் கோரி வந்தனர்.
இதன் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் பலமணி நேரம் முடங்கும் நிலை ஏற்பட்டது
0 comments:
Post a Comment