>> Friday, April 16, 2010
திமுகவினர் எவரும் கட்சியின் செயல்பாடுகள் குறித்து பகிரங்கமாகப் பேசுவதைத் தவிர்க்கவேண்டும் என தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு. கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.
"கட்சியின் எதிர்காலம் குறித்தோ அல்லது கூட்டணி அமைப்பது குறித்தோ இறுதி முடிவெடுக்க வேண்டியது கட்சியின் பொதுக்குழுவும், செயற்குழுவும்தான். அவற்றை அறிவிக்கும் உரிமை தனக்கும் பொதுச்செயலாளர் அன்பழகனுக்கும் மட்டுமே இருக்கிறது. மற்றவர்கள் அம்முடிவுகளை அமல்படுத்த வேண்டும். அவ்வளவுதான் அவர்கள் பங்கு." என கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளார்.
எச்சரிக்கை
கட்சி விவகாரங்கள் பற்றி பகிரங்கமாகப் பேசினால் அது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய நடவடிக்கையாகக் கருதப்படும்.
திமுக தலைவர் கருணாநிதி
"அண்மைக் காலமாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளால் நான் நிலைகுலைந்து விடமாட்டேன், கட்சி எத்தனையோ பிரச்சினைகளை சந்தித்தித்து சிக்கல்களிலிருந்து மீண்டிருக்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
"ஊராட்சியிலிருந்து மத்திய அரசு வரை எந்தப் பொறுப்பிலிருந்தாலும் சரி, சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் துறை குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு வேண்டுமானால் விடையளிக்கலாமே ஒழிய மற்றபடி வேறு எவ்வித தன்னிலை விளக்கமும் தரக்கூடாது" என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அரசுப் பொறுப்புக்களிலிருந்து ஓய்வு பெற்று சமூகப் பணியில் ஈடுபடப்போவதாக கருணாநிதி அறிவித்ததிலிருந்து அடுத்த திமுக தலைவர் யார், முதல்வர் யார் என்றெல்லாம் ஊகங்கள் தொடர்ந்து ஊடகங்களில் எழுப்பப்பட்டு வருகின்றன.
எச்சரிக்கை அழகிரிக்கா?
துணை முதல்வரான அவரது இளைய மகன் ஸ்டாலினுக்கே அந்த வாய்ப்பு என்று பலரும் கருதினாலும் மூத்த மகனும் மத்திய உரத்துறை அமைச்சருமான அழகிரி, கருணாநிதிக்குப் பிறகு என்ற நிலை உருவாகும்போது தான் தலைமைப்பதவிக்கு போட்டியிட இருப்பதாகவும், கருணாநிதிக்குப் பிறகு தான் எவரையும் தலைவராக ஏற்றுக்கொள்ளமுடியாது என இருமுறை பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார்.
கருணாநிதி விரும்பினால் அமைச்சரவையிலிருந்து விலகி மாநில அரசியலில் முழுமூச்சாக இறங்கவும் தாம் தயார் என அழகிரி கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆனால் பொதுவாக ஸ்டாலின் உட்கட்சிப் பிரச்சினைகள் பற்றி எதுவும் கருத்து தெரிவிப்பதில்லை.
இந்நிலையில் கருணாநிதியின் இன்றைய அறிக்கை அழகிரிக்கு விடப்பட்டிருக்கும் மறைமுக எச்சரிக்கை என்று கருதப்படுகிறது.
0 comments:
Post a Comment