>> Monday, April 26, 2010






அவசர நிலை நீக்கம்: அரசு பரிசீலனை


இலங்கை வெளியுறவு அமைச்சர்
இலங்கையில் அவசர நிலையை ரத்து செய்வது பற்றி அரசாங்கம் பரிசீலித்து வருவதாக இலங்கையின் புதிய வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் அதற்கான கால வரையறை எதனையும் அரசாங்கம் கொண்டில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பில் சர்வதேச அரங்கில் தொடர்ந்து கரிசனைகள் வெளியிடப்பட்டு வந்துள்ள ஒரு சூழலில், அந்நாட்டில் அமலில் இருந்துவரும் அவசர நிலையும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட அவசரகால சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துவருகின்றன.

விடுதலைப் புலிகளுடனான யுத்தம் தற்போது முற்றுப்பெற்றுவிட்ட நிலையில், நாட்டில அவசர நிலை தேவையில்லை என்ற கருத்தும் மேலோங்கிவருகிறது.

மனித உரிமைகள் தொடர்பில் புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள், வெளியுறவு விவகாரங்களில் இலங்கையின் நிலையை முன்னேற்ற உதவும் என்று கருதப்படுகிறது.

நாட்டின் பாதுகாப்பு சூழல் மேம்பட்டுள்ள ஒரு நிலையில், அரசாங்கம் சில பாதுகாப்பு விதிகள் குறித்து மீள்பார்வை செய்துவருவதாகவும், இதன் அடிப்படையில் அரசாங்கம் விரைவில் அறிவிக்கவுள்ள சில திட்டங்கள் சர்வதேச அரங்கில் வரவேற்பைப் பெறும் என்றும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

புதிய அரசின் வெளிவிவகார கொள்கை

நாட்டின் பொருளாதாரமும் வேலை வாய்ப்பும் மேம்படும் வகையில் புதிய அரசின் வெளிவிவகார கொள்கை அமையும் என்று பீரிஸ் கூறினார்.

"நாட்டில் இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், மற்ற நாடுகளுடனான நல்லுறவுகளை மேம்படுத்துவதில் முனைந்து செயல்படுவது என்பதுதான் எமது வெளியுறவு கொள்கையின் அடிநாதமாக இருக்கும்." என்றார் அவர்.

சார்க்

பூட்டான் தலைநகர் திம்புவில் நடக்கவுள்ள தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் (சார்க்) மாநாடு நடக்கும்போது இலங்கை ஜனாதிபதி இந்தியப் பிரதமரை சந்திக்கும் வாய்ப்பை இலங்கை அரசாங்கம் வரவேற்கிறது என்றும் பல்வேறு இருதரப்பு விவகாரங்கள் அப்போது விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஆனாலும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எந்தப் பிரேரணையும் சார்க் கூட்டத்துக்கு இலங்கை அரசு கொண்டு செல்லவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

முதல்வர் விழாவில் வன்முறை


சென்னை உயர்நீதிமன்ற வளாகம்
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி கலந்துகொண்ட விழாவில் அவரை எதிர்த்து கோஷங்கள் எழுப்பிய சில வழக்கறிஞர்கள் விழா நடந்துகொண்டிருக்கும்போதே கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

சம்பவத்தின்போது அங்கிருந்த இரு தொலைக்காட்சி சானல்களைச் சேர்ந்த புகைப்படக்காரர்கள் மூவரும் காயமடைந்திருக்கின்றனர். அவர்களது காமிராக்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன.

உயர்நீதிமன்ற வளாகத்தில் டாக்டர் அம்பேத்கரின் சிலையினை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி பாலகிருஷ்ணன் திறந்துவைத்தார்.

சிலை திறப்பிற்குப் பிறகு கருணாநிதி பேசத் துவங்கியபோது, மக்கள் கலை இலக்கியக் கழகம் எனும் அமைப்பைச் சேர்ந்த ஒரு சில வழக்கறிஞர்கள் கருப்புக் கொடிகளை வீசிய வண்ணம், "வழக்கறிஞர்களுக்கு நியாயம் வழங்காத கருணாநிதி பேசக்கூடாது" என முழக்கங்கள் எழுப்பினர்.


சென்ற வருடம் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் போலீசார் இடையே மோதல்கள் நடந்திருந்தன
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வழக்கறிஞர்களுக்கும் போலீசாருக்கு இடையே நடந்த மோதல்கள் தொடர்பாக போலீசார் எவர் மீதும் சரிவர நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி, அவர்கள் தங்கள் எதிர்ப்பை அவ்வாறு தெரிவித்தனர்.

உடனே பார்வையாளர்களில் ஒரு பகுதியினர் வெகுண்டெழுந்து, வழக்கறிஞர்கள் மீது நாற்காலிகளை வீசத்தொடங்கினர். இன்னும் சிலர் நேரடியாக அவர்களை நெருங்கி தாக்கத் தொடங்கினர்.

சம்பவங்களை வீடியோ பதிவு செய்துகொண்டிருந்த தொலைக்காட்சி சானல் நிருபர்களும் தாக்குதலுக்குள்ளாயினர்.

சற்று நேரம் மோதல் நடந்த பிறகு, போலீசார் தலையிட்டு அடிபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

முதல்வருக்கு கறுப்புக்கொடி காட்டி முழக்கங்கள் எழுப்பியவர்களில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

ஆனால் வழக்கறிஞர்களும் தொலைக்காட்சி சானல்களைச் சேர்ந்தவர்களும் தாக்கப்பட்டது தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.


தமிழ்க் கட்சிகளுக்கு டக்ளஸ் அழைப்பு


அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் தமிழ் கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாடொன்றை எட்டுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக ஈ.பி.டி.பி கட்சித் தலைவர் டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார்.

டக்ளஸ் செவ்வி

யுத்தம் முடிவடைந்துள்ள சூழ்நிலையில் சகல தமிழ் கட்சிகளும் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து செயற்படவேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா தமிழோசையிடம் கூறினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் அண்மையில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் அரசியல் தீர்வுதிட்டத்தின் அவசியம் பற்றியும் அதற்கான தமது ஒத்துழைப்பு பற்றியும் வெளியிட்ட கருத்தினை வரவேற்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெவரிவித்தார்.

13வது அரசியல் சட்டதிருத்தத்தை அடித்தளமாகக் கொண்டு அரசியல் தீர்வுத்திட்டம் நோக்கிய பயணித்தை அனைத்து தமிழ் கட்சிகளும் ஆரம்பிக்க முன்வரவேண்டும் என கோருவதாகவும் அவர் கூறினார்.

யாழ் குடாநாட்டில் அண்மைக்காலங்களில் நடைபெற்றுள்ள வன்முறைச் சம்பவங்கள் இனிமேலும் தொடராதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்குடாநாட்டில் உளவுப்பிரிவினரின் பெயரில் சட்டவிரோத செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதை தவிர்ப்பதற்காக மக்கள் பொலிசாருடனோ அல்லது ஊர் மக்களுடனோ இணைந்து செயற்படவேண்டுமெனவும் அவர் கூறினார்.


தொண்டாமானும் அமைச்சுப் பதவியும்?


ஆறுமுகன் தொண்டமான்
தோட்டத் தொழிலாளர்களின் அபிவிருத்திகளை கவனிக்கும் அமைச்சு கிடைக்காததால்தான் ஆறுமுகம் தொண்டமான் இலங்கை அரசில் அமைச்சராக பொறுப்பேற்கவில்லை என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி தெரிவிக்கிறது.
அவருக்கு கால்நடை அபிவிருத்து அமைச்சு மட்டுமே இம்முறை கொடுக்கப்பட்டது என்றும் அதை ஏற்றுக் கொள்ளும் நிலையில் தமது கட்சி இல்லை என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரான முத்து சிவலிங்கம் தமிழோசையிடம் தெரிவித்தார்.


முத்துசிவலிங்கம் பேட்டி

இந்த விடயத்தை தமது தரப்பு ஜனாதிபதியிடம் முன்னரே தெரிவித்ததாகவும், அதை அடுத்தே வெள்ளிக்கிழமையன்று தொண்டமானுக்கு அமைச்சர் பதவி அளிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் முத்து சிவலிங்கம் கூறுகிறார்.

மலையகம் வாழ் மக்களின் அபிவிருத்திகளுக்கான சில துறைகளை ஒன்றிணைத்து ஒரு அமைச்சு வழங்க அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.


முத்து சிவலிங்கம்
ஜனாதிபதியை தாங்கள் சந்தித்து உரையாடியுள்ள நிலையில் தாங்கள் நம்பிக்கையுடனேயே இருப்பதாகவும் பொருளாதார அபிவிருத்தி துறையின் துணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள முத்து சிவலிங்கம் கூறுகிறார்.

கடந்த நாடாளுமன்றத்தை விட தற்போது இலங்கை தொழிலாளர் கட்சிக்கு குறைவான உறுப்பினர்களே இருந்தாலும் தமது பேரம் பேசும் திறன் குறைந்துவிடவில்லை என்றும் அவர் கருத்து வெளியிடுகிறார்.

இலங்கையின் பொருளாதாரத்துக்கு ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கும் மலையக மக்களை தமது கட்சி சார்ந்துள்ளதால் அரசு தம்மை ஒதுக்கி விடமுடியாது என்று தாங்கள் கருதுவதாகவும் முத்து சிவலிங்கம் கூறுகிறார்.


இலங்கையின் முழுப் பொருளாதாரத்தையும் கையில் அடக்கிய மக்களைக் கொண்டவர்கள் நாங்கள்


முத்து சிவலிங்கம்

மலையகப் பகுதியில் தமது கட்சிக்கு பலமான ஆதரவு இருப்பதாகவும் அதன் காரணமாக தங்களை யாரும் சுலமபாக ஒதுக்கி தள்ளிவிட முடியாது என்றும் அவர் தெரிவிக்கிறார்.

நடப்பு நாடாளுமன்றத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தமைக்கு அரசியல் மாற்றங்கள் மற்றும் மக்கள் மாறி மாறி வாக்களிப்பதே காரணம் எனவும் கூறும் அவர், அது தமது அடித்தளத்தை பாதிக்காது என்றும் கூறுகிறார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter