>> Wednesday, April 28, 2010


தமிழகத்தில் பந்த் தோல்வி


சில மாநிலங்களில் மாத்திரம் கடையடைப்பு வெற்றிபெற்றது
விலைவாசி உயர்வைக் கண்டித்தும், நிலையைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று குறை கூறியும் இடது சாரி கட்சிகள் மற்றும் அவற்றின் தோழமைக்கட்சிகள் அகில இந்திய அளவில் இன்று நடத்திய 12 மணிநேர பாரத் பந்திற்கு தமிழகத்தில் பெரிய அளவில் வரவேற்பில்லை.
பஸ்கள், ரயில்கள் வழக்கம் போல ஓடின. சாலைப் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. இடதுசாரி தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மட்டும் தங்கள் ஆட்டோக்களை இயக்கவில்லை ஆங்காங்கே சில கடைகள் மூடப்பட்டிருந்தன.

தொழில் நகரமான கரூர் போன்ற இடங்களில், மின் வெட்டு காரணமாக பாதிக்கப்பட்ட தொழில் அதிபர்கள் தங்கள் நிறுவனங்களை மூடிவிட்டதாக செய்திகள் கூறுகின்றன.

ஓரிரு இடங்களில் சில வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. மற்றபடி குறிப்பிட்டு சொல்லும்படியாக பாதிப்பு எதுவும் இல்லை.


சில இடங்களில் பொதுப்போக்குவரத்து பாதிப்பு
சட்டமன்றத்தில் அதிமுக, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனி்ஸ்ட் கட்சி எம்எல்ஏக்கள் இன்று காலை அவை கூடியதும் விலைவாசி உயர்வு, பந்த் ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரினர்.

கேள்வி நேரம் முடிந்ததும் விவாதிக்கலாம் என்று பேரவைத்தலைவர் ஆவுடையப்பன் கூறினார். ஆனால், அதை ஏற்காமல் அவையின் மையப் பகுதிக்கு வந்து அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அவர்களை வெளியேற்றுமாறு காவலர்களுக்கு உத்திரவிட்டார் ஆவுடையப்பன்.

அதே போல புதுச்சேரி சட்டசபையில் இதே பிரச்சினையை முன்வைத்து அதிமுக, மதிமுக மற்றும் இந்திய கம்யூனி்ஸ்ட் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இடதுசாரிகளின் ஆட்சியில் உள்ள் சில மாநிலங்களில் முழுமையான கடையடைப்ப்பு இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter