>> Monday, April 19, 2010


யாழ்ப்பாணத்தில் சர்வதேச வர்த்தக கண்காட்சி


யாழில் சர்வதேச வர்த்தத் தொழில் கண்காட்சி நடைபெறுகிறது
யாழ்ப்பாணத்தில் தொழிற்துறையை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் நோக்கில் அங்கு முதல் முறையாக மூன்று நாட்கள் இடம்பெறும் சர்வதேச வர்த்தக தொழிற்சந்தை ஞாயிறன்று தொடங்கியது.
இந்தியா மற்றும் கொழும்பைச் சேர்ந்த சுமார் 200 தொழில் நிறுவனங்களும் தயாரிப்பு நிறுவனங்களும் இந்த கண்காட்சியில் பங்கு பெறுகின்றன.

அவர்கள் தங்களது பொருட்களையும், இயந்திரங்களையும் உபகரணங்களையும் காட்சிக்காக வைத்திருந்ததாக யாழ் வர்த்தக மற்றும் தொழிற்துறை மன்றத்தின் தலைவரான பூரணசந்திரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.


பூரணசந்திரன் பேட்டி

இந்தக் கண்காட்சியின் மூலம் யாழ்ப்பாணத்திலுள்ள தொழில் முனைவோருக்கு புதிய தொழில்நுட்பமும், தயாரிப்பு முறைகளும் அறிமுகமாவதாகவும், அது அங்கு தொழில் வளர்ச்சிக்கு ஒரு முன்னோடியாக அமையும் என்றும் அவர் கூறுகிறார்.

இந்த கண்காட்சி யாழ்ப்பாணம் மத்தியக் கல்லூரியில் நடைபெறுகிறது.

உணவு பதப்படுத்தும் துறைக்கு முக்கியத்துவம்


ஆர்வத்துடன் காணும் மக்கள்
யாழ்ப்பாணத்தில் பல்வகையான காய்கறிகளும் பழவகைகளும் உற்பத்தியாகும் நிலையில், உணவு பதனிடும் தொழிலுக்கு இந்த வர்த்தக கண்காட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் பூரணசந்திரன் தெரிவிக்கிறார்.

உள்ளூரில் உற்பத்தியாகும் காய் மற்றும் கனி வகைகளை பதப்படுத்தி, தரமான முறையில் ஏற்றுமதி செய்ய வழி செய்யும் வகையிலான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.

மேலும் பதப்படுத்தப்படும் உணவுப் பொருட்களை சிறப்பான முறையில் பொதிப்படுத்தும் தொழில்நுட்பமும் பெரிய அளவில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்ததாக யாழ் வர்த்தகம் மற்றும் தொழில்மன்றத்தின் தலைவர் கூறுகிறார்.

30 ஆண்டுகளாக தொழிநுல்ட்பம் கிடைக்கவில்லை


போர் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் காரணமாக கடந்த 30 ஆண்டுகாலமாக யாழ்ப்பாணம் பகுதிக்கு சிறந்த தொழில்நுட்பங்கள் கிடைக்கவில்லை என்றும் பூரணசந்திரன் சுட்டிக்காட்டுகிறார்.

யாழ்ப்பாணத்தில் இன்று ஒரு நல்ல சூழ்நிலை உருவாகியுள்ளது, அந்தச் சூழ்நிலையில் நாங்கள் எமது வர்த்தகத்தை அபிவிருத்தி செய்வதற்காகவே இந்தச் சந்தை ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அவர் கருத்து வெளியிடுகிறார்.

தற்போது யாழ்ப்பாணத்தில் சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அப்பகுதிக்கு மின்சாரம் வழங்கும் நடவடிக்கை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதும் அங்கு தொழில் வளம் பெருகும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் பூர்ணசந்திரன் கூறுகிறார்.

அதே போல நீர் ஆதாரங்களை தொழில் வளர்ச்சிக்கு பெற்றுக் கொள்வதிலும் சில முன்னெடுப்புகள் இடம் பெற்று வருவதாகவும் அவர் கூறுகிறார்.

பொறியியலாளர்கள் பற்றாக்குறை நீடிக்கிறது


உணவு தயாரிப்பு தொழிற்துறை
யாழ்ப்பாணத்தில் பொறியியலாளர்களின் பற்றாக்குறை நீடிக்கிறது என்பதையும் தமிழோசையிடம் யாழ் வர்த்தக மற்றும் தொழில்துறை மன்றத்தின் தலைவர் கூறினார்.

எனினும் இந்தியா மற்றும் கொழும்பிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் இருக்கும் மக்களுடன் இணைந்து தொழில்களை தொடங்கும் போது அவர்களிடமிருந்து உள்ளூர் மக்களும் தொழிற்நுட்பத்தை கற்றுக் கொள்வார்கள் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

அதன் மூலம் தற்போது நிலவும் பொறியியலாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்றும் அவர் கருத்து வெளியிடுகிறார்.

உள்ளூர் மக்கள் இது போன்று நடத்தப்படும் வர்த்தக மற்றும் தொழில் சந்தைகள் மூலம் தகவல்களை பெற்றுக் கொண்டு தொழில்களை தொடங்குவதில் ஆர்வம் காட்டி வருவதாகவும் பூரணசந்திரன் சுட்டிக்காட்டுக்கிறார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter