>> Thursday, April 22, 2010





இலங்கையின் புதிய பிரதமர் ஜயரட்ண

இலங்கையின் புதிய பிரதமராக தி மு ஜயரட்ண நியமிக்கப்பட்டுள்ளார். புதன்கிழமை மாலை அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்கும் தி மு ஜயரட்ண



இவர் இலங்கையின் 14 ஆவது பிரதமர்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து கட்சிகள் தேசியப் பட்டியலுக்கான தமது உறுப்பினர்களை நியமித்துள்ளன.

ஆளும் கூட்டணியின் பட்டியலில் த மு ஜயரட்ண இடம் பெறுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இருக்கும் பெரிய கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவன உறுப்பினர்களின் டி எம் ஜெயரட்ணவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் சார்பில் 17 பேரும், ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் 9 பேரும், இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் ஒருவரும், தேசிய ஜனநாயக முன்னணியின் சார்பில் இருவரும் தேசியப் பட்டியலில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முக்கியமானவர்கள்

இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் சட்டத்தரணி சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆளும் கூட்டணியின் பட்டியலில் முன்னாள் பிரதமர் ரட்ணஸ்ரீ விக்ரமநாயக்க, மூத்த அமைச்சர்களாக இருந்த டல்லஸ் அழகப்பெரும, ஜி எல் பீரிஸ், டியூ குணசேகர, பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோர் இருக்கின்றனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரான முத்து சிவலிங்கம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவரான விநாயமூர்த்தி முரளிதரன், பிரபல திரைப்பட நடிகை மாலினி ஃபொன்சேகா உட்பட பலர் ஆளும் தரப்பு பட்டியிலில் இடம் பெற்றுள்ளனர்.

எதிர்கட்சிகள் தரப்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில், ஐ தே க வின் செயலர் திஸ்ஸ அத்தநாயக்க, துணைத் தலைவர் டி எம் சுவாமிநாதன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஐ தே க வில் இணைந்த யோகராஜன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் ஹஸன் அலி, அஸ்லாம் முகமது சலீம் உட்பட பலர் இடம் பெற்றுள்ளனர்.

மனோ கணேசனுக்கு இடம் இல்லை

ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கு தேசியப் பட்டியலில் இடம் அளிக்கப்படவில்லை.

ஐ தே மு சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட மனோ கணேசன் தோல்வியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் ஃபொன்சேகாவின் தலமையில் செயற்படும் ஜனநாயக தேசிய முன்னணி, அனுர குமார திஸ்ஸநாயக்க மற்றும் டிரன் அலஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.



ரணில் மனோ உறவு முறிந்தது


கொடுத்த வாக்குறுதியை ரணில் மீறிவிட்டார்-மனோ கணேசன்
இலங்கையின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணியிலிருந்து விலகுவதாக மனோ கணேசனின் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
மனோ கணேசனுக்கு ஐக்கிய தேசிய முன்னணி வாக்களித்தபடி தேசியப் பட்டியலில் நியமனம் வழங்கப்படாததை எதிர்த்தே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியினர் தம்முடன் எழுத்துபூர்வகச் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி நடந்து கொள்ளவில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தமிழோசையிடம் தெரிவித்தார்.


கொடுத்த வாக்குறுதியை ரணில் விக்ரமசிங்க அவர்கள் காப்பாற்றவில்லை, எமக்கும் கொழும்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களுக்கும் துரோகம் செய்துவிட்டார் அதனால் கூட்டணியிலிருந்து விலகுகிறோம்


பிரபா கணேசன்

நாடாளுமன்றத் தேர்தலின் போது தமது கட்சிக்கு கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் ஒரு இடத்தை விட்டுக் கொடுப்பதற்கு ஈடாக தேசியப் பட்டியலில் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஒரு இடம் வழங்கப்படும் என்று ரணில் விக்ரமசிங்க உறுதியளித்ததாகவும் மனோ கணேசன் கூறுகிறார்.

அரசாங்கத்தை ஆதரிப்பது தொடர்பில் எந்த முடிவும் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படவில்லை எனவும் பிரபா கணேசன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

எனினும் அரச தரப்பு தம்முடன் தொடர்புகளை மேற்கொண்டுள்ளார்கள் எனவும் பிரபா கணேசன் கூறுகிறார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குளேயே இருக்கும் சில பேரினவாத நபர்களாலேயே தமது கட்சிக்கு தேசியப் பட்டியலில் இடம் கிடைக்காமல் போனது என்றும் பிரபா கணேசன் கருத்து வெளியிடுகிறார்.


ஐபிஎல்:தொடர் சோதனைகள்


பெரும் பணம் புழலும் ஐபிஎல் போட்டிகள் சிக்கலில் உள்ளன
இந்தியாவில் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஒலி மற்றும் ஒளிபரப்பு உரிமைகளை பெற்றுள்ள மூன்று நிறுவனங்களின் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைகளை நடத்தியுள்ளனர்.
பெரும் பணம் புழலும் இந்தியன் பிரீமியர் லீகில் ஊழல்கள் இடம் பெற்றுள்ளதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அது குறித்து நடைபெற்று வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாகவே இந்தச் சோதனைகள் நடந்துள்ளன.

இந்தப் போட்டிகளில் புதிதாக இணைந்து கொண்ட கொச்சி அணி தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து இந்தியாவின் வெளிவிவகாரத் துறையின் துணை அமைச்சராக இருந்த சஷி தரூர் ராஜிநாமா செய்ய வேண்டிய நிலமை ஏற்பட்டது.

விளையாட்டு அரங்குகளுக்கு வெளியே விளையாட்டுகள்

விளையாட்டு அரங்குகளில் நடைபெறும் இந்தப் போட்டிகளுக்கு அப்பாற்பட்டு, வெளியே எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்த தகவல்கள் மற்றும் செய்திகளிலேயே இந்திய மக்கள் ஆழ்ந்த கவனம் செலுத்தி வருகின்றனர்.


லலித் மோடியுடன் விஜய் மல்லையா



ஊழல்,மோசடிகள்,நேர்மையற்ற தன்மை, போட்டிகளை முன்கூட்டியே தீர்மானிக்கும் வகையிலான சூதாட்டம், சட்ட விரோதமாக வெளிநாடுகளிலிருந்து பணத்தை இந்தியாவுக்குள் கொண்டுவருதல் போன்ற பல்வகையான குற்றச்சாட்டுகளுக்கு ஐ பி எல் ஆளாகியுள்ளது.

இப்போட்டிகளில் புதிதாக இணைந்து கொண்ட கொச்சி அணி தொடர்பான விடயத்தில் ஐபிஎல் ஆணையாளர் லலித் மோடிக்கும், இந்தியாவின் முன்னாள் அமைச்சர் சஷி தரூருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களை அடுத்தே இப்படியான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


பல்லாயிரம் கோடி ரூபாய்கள் புழங்கும் இந்தப் போட்டிகளுக்கு பணம் எங்கிருந்து வந்தது, அவை எப்படி நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன என்பவை, அரசால் நடத்தப்பட்டு வரும் விசாரணைகளில் அடங்கும்



கொச்சி அணியின் உரிமையாளர்களில், சஷி தரூரின் நெருங்கிய தோழியும் ஒரு பங்குதாரர் என்ற தகவலை மோடி வெளிப்படுத்த தரூர் அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

தற்போது இந்தப் போட்டியின் அனைத்து பண விடயங்கள் தொடர்பிலும் உச்சி முதல் பாதம் வரையான விசாரணைகள் தொடங்கியுள்ளன.

விசாரணைகளை அடுத்து பெரும் அளவில் பணம் புழலும் இந்தப் போட்டியில் மேலும் பல தலைகள் உருளக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter