>> Thursday, April 15, 2010
இந்தியாவில் புயல்: 60 பேர் பலி
புயலில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளனஇந்தியாவின் கிழக்கு மாநிலங்களான மேற்கு வங்கம் மற்றும் பிகாரில் வீசிய கடும் புயலில் குறைந்தது 60 பேர் பலியாகியுள்ளனர்.
அங்கு மணிக்கு 160 கிலோ மீட்டருக்கும் மேலான வேகத்தில் வீசிய புயலில் பல்லாயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.
பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதே போல மின்சாரம் வழங்கும் கம்பிகளும், கம்பங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன.
இந்தக் கடும் புயல் காற்றில், மேற்கு வங்க மாநிலத்தில் வங்கதேசத்தின் எல்லையில் இருக்கும் வடக்கு தினாஜ்பூர் மாவட்டமே மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அம்மாவட்டத்திலிருந்து மட்டும் 41 சடலங்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.
இந்தப் புயல் காற்றில் வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்ததிலேயே அதிகப்படியானவர்கள் இறக்க நேரிட்டது என்று மாநிலத்தின் உள்ளூர் பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீகுமார் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
புயல் காற்றின் இந்தத் தாக்குதல் காரணமாக 50,000 க்கும் அதிகமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன என்று மேற்கு வங்க மாநில அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த பாதிப்பில் காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொலை தொடர்புகள், ரயில் சேவைகள் கடும் பாதிப்பு
புயல் ஏற்படுத்திய தாக்கம்
இந்தப் புயல் தாக்குதலில் தொலை தொடர்புகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் சாலைகள் மூடப்பட்டுள்ளன. ரயில்வே பாதைகளும் சேதமடைந்துள்ளன.
புயல் காற்றை அடுத்து கடும் மழை பெய்ததில், ஏற்கனவே வீட்டுக் கூறைகள் இடிந்து விழுந்த நிலையில் உள்ளே இருந்த மக்கள் மேலும் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
வீடுகள் இடிந்து விழுந்த காரணத்தினாலேயே பாதிப்புகள் கூடுதலாக காணப்படுகின்றன.
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வடக்கு தினாஜ்புர் கிராமத்தில் பல இடங்களில் மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததால் அம்மாவட்டத்தின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயல் காற்றில் வங்கதேசத்தின் ரங்பூர் பகுதியில் இருவர் பலியாகியுள்ளனர். அப்பகுதியில் 11,000 த்துக்கும் அதிகமான குடிசை வீடுகள் மற்றும் தகர கூரைகளை கொண்டிருந்த வீடுகக்ள் இடிந்து விழுந்துள்ளன.
0 comments:
Post a Comment