>> Friday, April 30, 2010


குடும்பத்தினருடன் பிரபாகரன்



பிரபா தாயார்--தமிழக அரசின் பதிலென்ன?



விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளை ம்றுபடி இந்தியாவிற்கு வரவழைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கவேண்டும் என்ற கோரிக்கை குறித்து தமிழக அரசு அளிக்கும் பரிந்துரையை இந்திய நடுவணரசு பரிசீலிக்கும் என்று நடுவணரசின் வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து இந்த விடயத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை நாளை வெள்ளிக்கிழமை (30.4.10) மதியத்துக்குள் நீதிமன்றத்திடம் தெரிவிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்திரவிட்டது.

கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி இரவு மலேசியாவிலிருந்து, உரிய விசா பெற்று சென்னை வந்த பார்வதி அம்மாள் குடியேற்றத்துறை அதிகாரிகளால் மீண்டும் மலேசியாவிற்கே திருப்பி அனுப்பப்பட்டார்.

அந்தச் சம்பவம் தமிழக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதற்கும் தமிழக அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்று தமிழ்நாட்டின் முதல்வர் மு கருணாநிதி கூறியிருந்தார்.

தமக்கு முன்பு தமிழ்நாட்டில் முதல்வராக இருந்த ஜெ ஜெயலலிதா, பிரபாகரனின் பெற்றோர் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு தடைவிதிக்கவேண்டும் என்று 2003 ஆம் ஆண்டில் எழுதிய கடிதத்தின் அடிப்படையில், சென்னை விமான நிலையத்தில் இருந்த நடுவணரசு அதிகாரிகள் பார்வதியம்மாளை திருப்பியனுப்பியதாக தமக்கு தெரிய வந்திருப்பதாகவும் கருணாநிதி கூறியிருந்தார்.

பார்வதியம்மாள் சென்னையில் சிகிச்சை பெற விரும்பினால், அவர் இந்தியா வர அனுமதி அளிக்குமாறு மத்திய அரசிடம் தாம் கோரத்தயார் என்றும் கருணாநிதி சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.

இந்த பின்னணியில் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கருப்பன் பார்வதி அம்மாளை சிறப்பு விமானத்தில் தமிழகம் அழைத்து வந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கோரி பொது நலவழக்கொன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.

இந்த வழக்கு புதன்கிழமை நீதிபதிகள் தர்மாராவ், கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு வழக்கறிஞர் வெளிநாட்டவர்கள் வருகைக்கு அனுமதி வழங்குவது என்பது நடுவணரசின் கட்டுப்பாட்டில் உள்ள விடயம் என்பதால், இந்த வழக்கில் மாநில அரசை சேர்க்கக் கூடாது என்று கோரினார்.

இதை ஏற்று கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கில் இருந்து தமிழக அரசை நீக்க உத்தரவிட்டனர்.

பின்னர் நடந்த வாதங்களின்போது இந்திய நடுவணரசின் வழக்கறிஞர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன், இந்த வழக்கில் மத்திய அரசின் நிலை குறித்து வியாழக்கிழமை பதில் அளிப்பதாக தெரிவித்திருந்தார்.

அதன்படி, வியாழனன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நடுவணரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், ஒரு வெளிநாட்டுப் பிரஜையை இந்தியாவுக்குள் அனுமதிப்பதா இல்லையா என்பதை முடிவெடுக்கும் அதிகாரம் இந்திய அரசுக்கு உண்டு என்று கூறினார்.

மேலும், பார்வதியம்மாள் பிரச்சினையை பொறுத்தவரை, அவரை இந்தியாவுக்குள் அனுமதிக்கக்கூடாது என்று 2003 ஆம் ஆண்டு தமிழக அரசு செய்திருந்த பரிந்துரையின் அடிப்படையில் தான் அவர் அனுமதிக்கப்படவில்லை என்று விளக்கினார். தற்போதைய மாநில அரசு பார்வதியம்மாளை அனுமதிக்கலாம் என்று கூறினால் அதை நடுவணரசு பரிசீலித்து முடிவெடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, இந்த விடயத்தில் தற்போதைய தமிழக அரசின் நிலை என்ன என்பதை நாளை வெள்ளிக்கிழமை மதியம் ஒருமணிக்குள் தமிழக அரசின் வழக்கறிஞர் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கும்படி கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter