>> Tuesday, April 27, 2010
'புலிகள்' 7 பேர் கைது
நெதர்லாந்தில் விடுதலைப்புலிகள் சந்தேக நபர்கள் கைது
நெதர்லாந்து நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பு குறித்து நடத்தப்பட்ட கவனமான மற்றும் விரிவான புலனாய்வுகளை அடுத்து, அந்நாட்டின் தேசிய குற்றப் புலனாய்வு சேவைகள் அமைப்பினர் சந்தேகத்துக்குரிய ஏழு பேரைக் கைது செய்துள்ளனர்.
இது தவிர 16 வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இதன் போது கணினிகள், காகித ஆவணங்கள், தொலைபேசிகள், புகைப்படங்கள், டிவிடிக்கள் ஆகியவை சோதனைக்கு உள்ளாயின.
மேலும் இந்த நடவடிக்கையின் போது 40,000 யூரோக்கள் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் 2006 ஆம் ஆண்டு பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்தது.
நெதர்லாந்து நாட்டின் தேசிய குற்றப் புலானாய்வு போலீசாரால் நடத்தப்பட்ட விசாரணைகளில் விடுதலைப் புலிகளுக்காக நிதிகள் சேகரிக்கப்பட்டமை குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் 2002 ஆம் ஆண்டின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின்படி, அப்படியான அமைப்புகளுக்கு நிதி மற்றும் பொருளாதார ஆதரவு வழங்குவது சட்டப்படி பொருளாதாரக் குற்றமாக கருதப்படும்.
மேலும் இந்த விசாரணைகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்களா என்பது குறித்தும் ஆராயப்படுகின்றது.
குமுதம் விவகாரம்- விசாரிக்க குழு
குமுதம் பப்ளிகேஷன்சின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பி வரதராஜன்
குமுதம் நிறுவன விவகாரம் குறித்து விசாரிக்க குழு ஒன்றை தமிழக அரசு நியமிக்கும் என தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு கருணாநிதி சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு குமுதம் பப்ளிகேஷன்ஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பி வரதராஜன் பலகோடி ரூபாய் மோசடி செய்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தமிழக சட்டமன்றத்தில் திங்கட்கிழமையன்று விவாதிக்கப்பட்டது.
குமுதம் பப்ளிகேஷன்ஸ் உரிமையாளர் ஜவஹர் பழனியப்பனின் புகாரின் பேரில்தான் வரதராஜன் கைது செய்யப்பட்டார் என்று கூறிய முதல்வர் மு கருணாநிதி, தமது அரசு பத்திரிகை சுதந்திரத்தை மதித்தே நடக்கும் என்றும், தமிழ்நாட்டின் முன்னணி வார இதழான குமுதம் நிர்வாகிகளுக்கிடையே ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.
குமுதம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பொறுப்பு வகிக்கும் பி.வரதராஜன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டு, அன்றிரவே சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
நிறுவனத்தின் தலைவர் என்ற முறையில் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆறு லட்ச ரூபாய் சம்பளத்தை 10 லட்சம் ரூபாயாக திருத்தி, பல கோடி ரூபாய் அளவுக்கு அவர் மோசடி செய்தார் என்று வரதராஜன் மீது பழனியப்பன் புகார் கூறியிருந்தார்.
ஆனால் வரதராஜனோ, தன்னிடமுள்ள பங்குகள் அனைத்தையும் தன்னிடம் விற்றுவிடுமாறு பழனியப்பன் தன்னை வற்புறுத்தினாரென்றும் அதற்கு தான் மசியாததால் தன் மீது வீண்பழி சுமத்துவதாகவும் கூறுகிறார்.
தமிழர் எதிர்ப்பு-அமிதாப் பரிசீலனை
சர்வதேச இந்திய திரைப்பட அக்கடமி முத்திரை
சர்வதேச இந்திய திரைப்பட அக்கடமியின் விருது வழங்கும் விழா இலங்கையில் நடத்தப்படவுள்ளமை குறித்து தமிழர் அமைப்புக்களால் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அடுத்து அதன் ஏற்பாட்டுக்குழு உடனடியாகக் கூடி விவாதிக்கவுள்ளதாக அந்தக் குழுவின் விளம்பரத் தூதுவரான நடிகர் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார்.
இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா ஜூலையில் இலங்கையில் நடக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்கள் அரசாங்கப் படைகளால் அநியாயமாக கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டுகின்ற இந்திய தமிழர் அமைப்புக்கள் இந்த விழாவை இந்திய திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.
அத்துடன் இந்த விழாவின் ஏற்பாட்டில் முக்கியஸ்தராக திகழுகின்ற சர்வதேச இந்திய திரைப்பட அமைப்பின் விளம்பர தூதுவரான நடிகர் அமிதாப் பச்சனும் இந்த விழாவைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறிவருகிறார்கள்.
அதன்படி ''நாம் தமிழர் இயக்கத்தினர்'' அவரது வீட்டை முற்றுகையிடும் போராட்டம் ஒன்றையும் மும்பையில் ஞாயிறன்று நடத்தினார்கள்.
அக்கடமியின் உறுப்பினர்கள் சிலர்
அதனையடுத்து கருத்து வெளியிட்டிருக்கின்ற நடிகர் அமிதாப் பச்சன் அவர்கள், அனைவரின் உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக இணையத்தில் கருத்து வெளியிட்டிருக்கின்ற அமிதாப்பச்சன் அவர்கள், அந்த ஏற்பாட்டுக் குழுவினர் போராட்டம் நடத்தியவர்களை சந்தித்துப் பேசியதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மகஜர் ஒன்றையும் அவர்கள் பெற்றுக் கொண்டதாகவும் கூறினார்.
அத்துடன் இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக அந்தக் குழுவினர் உடனடியாக கூடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த விவகாரம் குறித்து ஒரு இறுதி வழியையும், தீர்வையும் காண அவர்கள் முயற்சிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
'ஐ.பி.எல்.லில் ஊழல்': மோடி இடைநீக்கம்
லலித் மோடி
இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட்டின் தலைவர் பொறுப்பில் இருந்து வந்த அதன் தோற்றுநர் லலித் மோடி ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து இடைக்காலத் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பையில் நடந்த மூன்றாம் வருட ஐ.பி.எல். பந்தயத்தின் இறுதி ஆட்டம் முடிந்த சற்று நேரத்தில் மோடியை இடைநீக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
மோடிக்கு எதிராக இருபதுக்கும் அதிகமான குற்றச்சாட்டுகளை இந்திய கிரிக்கெட் நிர்வாக அதிகாரிகள் முன்வைக்கின்றனர்.
அணிகளை ஏலம் விட்டதில் முறைகேடு, நிதி மோசடி , தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமங்கள் வழங்கியது தொடர்பில் எட்டு கோடி டாலர்கள் கட்டணம் பெற்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இதில் அடங்கும்.
இது தவிர வருமான வரித்துறை அதிகாரிகள் அவர் மீது தனிப்பட்ட விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்க அவருக்கு இரண்டு வாரகால அவகாசம் தரப்பட்டுள்ளது.
லலித் மோடி
இந்திய மக்களின் இருபெரும் மோகங்களான கிரிக்கெட்டையும் சினிமா உலகையும் ஒரு வகையாகக் கலந்து ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ள ஐ.பி.எல். யோசனைக்கு செயல்வடிவம் கொடுத்தவர் லலித் மோடிதான்.
ஐ.பி.எல்.லின் தலைவராக மரபு வழுவியும், படோடாபத்துடனும், தன்னிச்சையாகவும் அவர் செயல்பட்ட விதம் பலரை சீண்டிவிடுவதாய் இருந்தது.
லலித் மோடி அளவுக்கதிமான அதிகாரத்துடன் கோலோச்சுகிறார் என இந்தியாவின் கிரிக்கெட் நிர்வாக அமைப்பான பி.சி.சி.ஐ.யில் சில உறுப்பினர்கள் நினைத்திருந்தனர்.
சஷி தரூர்
சஷி தரூர்
ஐ.பி.எல்.லில் புதிதாக ஏலம் விடப்பட்ட இரண்டு அணிகளின் உரிமையாளர்கள் பற்றிய விபரத்தை லலித் மோடி வெளியிட்டிருந்தார்.
மத்திய அரசு துணை அமைச்சர் சஷி தரூரின் நண்பி ஒருவருக்கு ஓர் அணியில் இலவசமாக பங்கு வழங்கப்பட்டுள்ளது எனும் விதமாக மோடி சுட்டிக்காட்டியிருந்தார்.
இதனை அடுத்து ஐ.பி.எல். மூலம் ஆதாயம் அடைகிறார் என்று சஷி தரூர் மீது இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பிரச்சினை செய்திருந்தனர்.
இதனால் எழுந்த அழுத்தம் காரணமாக சஷி தரூர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
அரசாங்கத்துக்கும் இவ்விவகாரம் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது.
அரசாங்கம் நடவடிக்கை
ஐ.பி.எல். மற்றும் அதன் அணிகளின் நிதி விவகாரங்கள் குறித்து பரந்துபட்ட ஒரு விசாரணைக்கு உத்தரவிடுவதாக அரசாங்கம் பதில் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா பின்னணி கொண்டவராகக் கருதப்படும் லலித் மோடி மீது தற்போது தீவிரமான விசாரணைகள் நடத்தப்படுகிறன.
லலித் மோடி அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துவருகிறார்.
மோடியின் இடைநீக்கத்துக்குப் பின்னர் ஆளும்கட்சிக்கு நெருக்கமானவராக கருதப்படும் சிராயு அமீன் என்பவர் ஐ.பி.எல்.லின் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment