>> Saturday, March 27, 2010

இடம் பெயர்ந்த மக்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது
இலங்கையில் இராணுவத்தினரின் தடுப்பு முகாம்களில் உள்ள விடுதலைப் புலி அமைப்பின் உறுப்பினர்களும் வாக்களிப்பதற்கு வசதி செய்யப்பட்டிருப்பதாக அந்த நாட்டின் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.
சுமார் 10,000 பேர் இவ்வாறு சரணடைந்தும் கைது செய்யப்பட்டும் வவுனியா பிரதேசத்தில் உள்ள பல முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் சுமார் 1,500 பேர் வரையில் மாத்திரமே வாக்களிப்பதற்கு வசதி செய்து தருமாறு கோரி தேர்தல் திணைக்களத்திற்கு விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மீள்குடியேற்றம் நடைபெற்றுள்ள இடங்களில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வாக்குச் சாவடிகளில் வாக்களிக்கவுள்ளவர்களில், இன்னும் அந்தப் பகுதிகளில் மீளக்குடியமராதவர்களுக்கு வவுனியாவில் இருந்து போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் வன்னி உதவித் தேர்தல் ஆணையாளர் சங்கரப்பிள்ளை சுதாகரன் தெரிவித்திருக்கின்றார்.
இதுபற்றிய மேலதிகத் தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
அமெரிக்கா பாகிஸ்தான் இடையே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த உயர்மட்ட இராணுவப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன
பாகிஸ்தான் இராணுவத் தளபதியும் அமெரிக்க கூட்டுப்படைகளின் தலைவரும்அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான கேந்திர மற்றும் இராணுவம் முக்கியத்துவம் வாய்ந்த உயர்மட்ட இராணுவக் குழுக்களுக்கு இடையேயான ஒரு வாரகால பேச்சுவார்த்தைகள் வாஷிங்டனில் தொடங்கியுள்ளன.
பாகிஸ்தானின் இராணுவத் தளபதி ஜெனரல் அஷ்ஃபக் கியானி அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலர் ராபர்ட் கேட்ஸ் மற்றும் அந்நாட்டின் கூட்டுப்படைகளின் தளபதியான அட்மிரல் மைக் முல்லனுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
2013 ஆண்டு வாக்கில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் முகமான முன்னெடுப்புகளை பராக் ஒபாமா அவர்கள் செய்துவரும் நிலையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கத் துருப்புக்கள் வெளியேறும் நிலையில் அதற்கு பாகிஸ்தான் எந்த வகையில் உதவ முடியும் என்றும் அதே நேரம் மிதவாத நோக்குடைய தாலிபான்களை கொண்டு ஆப்கானிஸ்தானில் ஒரு ஆட்சியை அமைக்க முடியுமா என்பது போன்றவை இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள் என்றும் பாதுகாப்பு ஆய்வாளர் டாக்டர் சுபா சந்திரன் கருத்து வெளியிடுகிறார்.
ஆப்கானிஸ்தானின் அரசியல் விடயத்தில் இந்தியாவுக்கு எந்தப் பங்கும் இருக்கக் கூடாது என்று பாகிஸ்தான் அமெரிக்காவிடம் வலியுறுத்தும் என்றும் அவர் கூறுகிறார்.
அவரது பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
போலி மருந்து விற்றால் ஆயுள் தண்டனை:தமிழ்நாடு அரசு கடும் எச்சரிக்கை
தமிழகத்தில் போலி மருந்து விற்றால் ஆயுள் தண்டனை உறுதி என்று தமிழக அரசு எச்சரித்துள்ளதுதமிழகத்தில் போலி மருந்துகள் மற்றும் காலாவதியான மருந்துகளை விற்றால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கலாம் என்று தமிழக அரசு ஆறு மாதங்களுக்கு முன்னர் சட்டம் இயற்றியது.
எனினும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெருமளவில் போலி மருந்துகளும் காலாவதியான மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
இதன் பின்புலத்தின் இந்தச் சட்டத்தின் கீழ் தவறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
செவ்வாய்கிழமை முதல்வர் கருணாநிதி தலைமையில் இது தொடர்பிலான உயர்மட்டக் கூட்டம் ஒன்றும் இடம் பெற்று மருந்து தயாரிப்பாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
மருந்து தயாரிப்பு மற்றும் அதன் தரம் தொடர்பில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் அரசால் வெளியிடப்பட்டிருந்தாலும், சிறிய மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அவற்றை முழுமையாக கடைபிடிப்பதில்லை என்றும் நுகர்வோர் அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
மாநில மருந்து கட்டுப்பாட்டு ஆணையகத்தில் போதிய ஆட்கள் இல்லாமையும், தயாரிக்கப்படும் மருந்துகளின் தரத்தை சோதிக்க தேவையான அளவு சோதனைச்சாலைகள் இல்லாமல் இருப்பதும் போலி மருந்துகள் மற்றும் காலாவதியான மருந்துகள் சந்தைக்கு வருவதற்கு காரணமாக இருக்கிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த விடயம் தொடர்பில் தமிழ்நாட்டிலுள்ள பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் நலன்கள் குறித்த பாதுகாப்பு அமைப்பான சி ஏ ஜியின் டிரஸ்டி சுசித்ரா ராம்குமார் அவர்களின் பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
இணையத்தின் சாதனையும் சவால்களும்
ஆங்கிலத்த்தில் இண்டர்நெட் எனப்படும் இணையத்தின் வல் லமை குறித்து, இணையத்தின் பேராற்றல் என்ற தலைப்பில் பிபிசி தமிழோசையில் கடந்த இரண்டு வாரங்களாக சிறப்புச் செய்திகள் ஒலிபரப்பாகி வருகின்றன.
இருபதாம் நூற்றாண்டில் துவங்கிய இந்த இணையத்தின் பேராற்றல் உலகு தழுவிய அளவில் மனித சமூகத்தில் ஏற்படுத்தி வரும் பன்முக மாற்றங்கள் மற்றும் தாக்கங்கள் குறித்து இந்த செய்திகளும் பெட்டகங்களும் விரிவாக விளக்கிவருகின்றன.
அதே சமயம் இணையத்தின் பேராற்றல் முழுமையும் உலகின் மனித சமூகத்திற்கு பயன்படாமல் பல்வேறு தடைகள் தொடர்ந்தும் நீடிப்பதாக விமர்சனகருத்துக்களும் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
இத்தகைய விமர்சனங்களில் ஓரளவுக்கு உண்மை இருக்கிறது என்கிறார் பேனோஸ் லண்டன் என்கிற தன்னார்வ அமைப்பின் தகவல் தொழில்நுட்ப சமூக செயற்திட்டத்தின் மேலாளர் முரளி சண்முகவேலன் அவர்கள்.
அதாவது, தொழில் வளர்ச்சியடைந்த மேற்குலக நாடுகளில் இணையம் என்பது பொதுமக்கள் மற்றும் அரசுகளின் அன்றாட செயற்பாடுகளில் பெருமளவு பயன்படும் ஒரு அத்தியாவசிய தொழில்நுட்பத்தேவையாக இருப்பதாகவும், ஆனால் இந்தியா, இலங்கை போன்ற வளரும் நாடுகளில் இணையம் என்பது பொருளாதார வசதிபடைத்தவர்கள் மட்டுமே அணுகக்கூடிய ஒரு தொழில்நுட்பமாகவே இன்னமும் பார்க்கப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.
இணையத்தை பயன்படுத்துவதற்கு ஆகும் செலவு கூடுதலாக இருப்பது, ஆங்கிலம் தெரியாதவர்களால் எளிதாக பயன்படுத்த முடியாத தொழில்நுட்பமாகவே இணையம் நீடிப்பது, இணைய பயன்பாடு தொடர்பில் அரசுகளிடம் தொலைநோக்கு பார்வை யும் திட்டமிடலும் இல்லாமலிருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இணையத்தின் பேராற்றல் பெரும்பான்மை மக்களுக்கு இன்னமும் சென்றடையவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter