>> Saturday, April 17, 2010

'த.தே.கூ. உடன் இணைந்து செயற்படுவோம்'


சம்பந்தனுடன் ஹக்கீம்(கோப்பு)
அரசியல் தீர்வு முயற்சிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

ரவூப் ஹக்கீம் செவ்வி

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டே இரு தரப்பு பிரதிகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டதாக ரவூப் ஹக்கீம் தமிழோசையிடம் கூறினார்.

தமிழ்,முஸ்லிம் மக்களின் அதிகபட்ச ஆதரவைப் பெற்றுள்ள கட்சிகள் என்ற வகையில் இரண்டு கட்சிகளுக்கும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய தார்மீக பொறுப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


கூட்டமைப்பு தலைவர்களுடன் ஹக்கீம் (கோப்பு)
எதிர்கால அரசியல் களச்சூழ்நிலையை எதிர்கொள்வது, இனப்பிரச்சனைத் தீர்வுக்கான வழிமுறைகள் மற்றும் யாப்பு சீர்திருத்தத்தில் இடம்பெறவேண்டிய அம்சங்கள் குறித்து உடன்பாடுகளை எட்டுவதற்காக கூட்டிணைந்து செயற்பட வேண்டுமென்பதை இரு தரப்பினருமே உணர்ந்துள்ளதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கூறினார்.

அரசாங்கம் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் உரிமைப் பிரச்சனைகள் தொடர்பில் அலட்சியப் போக்கை முன்னெடுக்கக் கூடிய அபாயத்தை தடுப்பதற்கு இவ்வாறான இணைந்த அரசியல் நடவடிக்கை அவசியம் எனவும் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

தேர்தலுக்கு முன்னர் இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்படுவதற்கு தேர்தல் முறைமைகளில் உள்ள சிக்கல்களே தடையாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
'பூட்டோ படுகொலை'- ஐநா காட்டம்


பெனாசீர் பூட்டோ
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் படுகொலையை தடுக்கவோ அது தொடர்பில் விசாரணை நடத்தவோ அந்நாட்டு அரசாங்கம் தவறியுள்ளதாக ஐநாவால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவொன்று குற்றஞ்சாட்டியுள்ளது.
அத்தோடு பாகிஸ்தானின் அதிகாரம்மிக்க புலனாய்வு முகவர்களையும் அந்த விசாரணைக் குழு கடுமையாக சாடியுள்ளது.

பெனாசீர் பூட்டோ இரண்டு வருடங்களுக்கு முன்னால் இஸ்லாமாபாத்துக்கு அருகே தேர்தல் பிரச்சாரமொன்றில் கலந்துகொண்டுவிட்டு திரும்பும் போது நடத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

படுகொலை நிகழ்ந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளை மட்டுமே கருத்தில் எடுக்ககூடிய விதத்தில் அமைந்திருந்த ஐநாவின் இந்த விசாரணை ஆணையம், குற்றவியல் பொறுப்பு எதனையும் யார்மீதும் சுமத்தாதபோதிலும் மிகக்கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளது.


படுகொலைக்கு முன்னதாக பிரச்சார வாகனத்தில் பெனாசீர் பூட்டோ
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஜெனரல் பர்வேஷ் முஷாரப் அரசாங்கம் பெனாசீர் பூட்டோவை எல்லா மட்டங்களிலுமே பாதுகாக்க தவறியுள்ளதாக மிகத் தெளிவாக குற்றஞ்சாட்டியுள்ள இந்த விசாரணை அறிக்கை, பூட்டோவின் படுகொலைக்கு பின்னால் இருந்தவர்கள் தொடர்பில் நம்பகமான விசாரணை தேவைப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

பூட்டோ ஏற்கனவே படுகொலை முயற்சியொன்றிலிருந்து தப்பிவந்திருந்த நிலையில், அவரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் அவரது உயிருக்கே உலை வைக்குமளவிற்கு இருந்துள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இந்த படுகொலையின் பின்னரான அரசாங்கத்தின் பதில்நடவடிக்கை தொடர்பில் இன்னும் காட்டமாகவே விசாரணைக் குழு விமர்சித்துள்ளது.

படுகொலை விசாரணைகளை பாதுகாப்பு படையினர் திட்டமிட்டே புறக்கணித்துள்ளதாக ஐ.நா விசாரணைக்குழுவின் தலைவர் ஹெரால்டோ முனொஸ் கூறுகிறார்.


பிரச்சனையை மூடிமறைப்பதற்கு திட்டமிட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதற்கு சங்கிலித் தொடரான பல சம்பவங்கள் சான்றுகளாக உள்ளன


ஹெரால்டோ முனொஸ்-ஐநா விசாரணைக்குழு

ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் சூத்திரதாரிகளை சிக்க வைக்காமல் விசாரணைகள் அடிமட்டங்களிலேயே நின்று விட்டதாகவும் அந்த விசாரணைகளின் அனைத்து கட்டங்களிலும் புலனாய்வு முகவர்களின் பரவலான செல்வாக்கு ஊடுருவியிருந்ததாகவும் ஐநா அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால் தற்போது அதிபராகவுள்ள பெனாசீர் பூட்டோவின் கணவர் ஆசிஃப் அலி ஸர்தாரி கையிலேயே விசாரணைகளின் அடுத்தக்கட்டம் தங்கியுள்ளது.

பாகிஸ்தானின் மிக பலமான இராணுவக் கட்டமைப்பை விசாரணைக்குள்ளாக்குவதே நம்பத்தகுந்த குற்றவியல் விசாரணையொன்றுக்கு வழிவகுக்கும் என்பதை அந்நாட்டு மக்களுக்கு இந்த ஐ.நாவின் அறிக்கை உணர்த்தியுள்ளது.



எரிமலைப் புகை- விமானசேவைகள் தொடர்பாதிப்பு


ஜேர்மனி ஃப்ராங்ஃபர்ட் விமான நிலையத்தில் பயணி ஒருவர்
ஐஸ்லாந்தின் எய்யப்யாலயேகோட்ல (Eyjafjallajökull) என்ற எரிமலை ஒரு மாதத்திற்குள் தற்போது இரண்டாவது தடவையாக வெடித்திருப்பது பல வட ஐரோப்பிய நாடுகளில் விமானப் போக்குவரத்தை நிறுத்த வைத்துள்ளது.
எரிமலை கக்குகின்ற சாம்பல் காற்று மண்டலத்தில் தூசுப் புகையாகப் பரவியுள்ளது.

இந்தப் புகை மேகம் பறக்கும் விமானங்களின் இயந்திரத்தைப் பழுதாக்கிவிடும், விமானத்தின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவித்துவிடும் என்று அஞ்சி விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக லட்சக்கணக்கான விமானப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


விமான சேவைகள் நிறுத்தப்பட்டன
பரபரப்பாக பயணிகள் வந்து போகின்ற விமான நிலையங்களில் எல்லாம் பயணிகள் மூட்டையும் கையுமாக தரைகளில் படுத்துறங்கும் நிலைமையைக் காண முடிகிறது.

இதனால் விமானப் போக்குவரத்து நிறுவனங்களும் பெரும் நஷ்டங்களை எதிர்கொள்கின்றன.

வேறு தேதியில் பயணிக்க விரும்பாத பயணிகளுக்கு இந்த நிறுவனங்கள் டிக்கெட் தொகையை திரும்பத் தர வேண்டும்.

விமானங்கள் பறக்காததால் எரிபொருள் செலவு இருக்காது என்றாலும், ஊழியர்களுக்கான சம்பளம், விமானத்துக்கான வாடகைப் பணம், கடன் வாங்கிய தொகைக்கான வட்டி போன்ற செலவுகளையெல்லாம் விமான நிறுவனங்கள் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

உலக பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்கனவே இந்த விமான நிறுவனங்கள் பெரும் நிதிச் சிரமங்களை சந்தித்திருந்தன.

பயணிகள் போக்குவரத்து மட்டுமல்லாது சரக்குப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

காய்கறிகள், பழங்கள், பூக்கள் போன்ற சீக்கிரம் கெட்டுப்போகக்கூடிய பொருட்களுக்கு இந்த விமான நிறுவனங்கள் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டி வரலாம்.

சுற்றுச் சூழல் தாக்கம்


உயரத்தில் எரிமலை புகை
இந்த எரிமலை உறைந்த பனி ஏரியொன்றின் அடியில் வெடித்துள்ளதால், நெருப்புப் பிழம்பின் சக்தியும் பனிக்கட்டியும் சேர்ந்து காற்று மண்டலத்தில் வெளியிட்ட தூசுப் புகை, காற்று மண்டலத்தில் பத்து கிலோமீட்டர்கள் உயரம் வரை பரவியுள்ளது.

அது காற்று மண்டலத்தில் பரவி, மெது மெதுவாக மீண்டும் பூமியில் படிந்துவிடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்த தூசின் விளைவாக மனிதர்களுக்கு பெரிய உடல்நலப் பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று கருதப்படுகிறது

ஆனால் அந்த எரிமலை அடுத்து என்ன செய்யப் போகிறது என்பதுதான் இப்போதைக்கு முக்கியக் கேள்வியாக இருக்கிறது.

எரிமலை தணிய ஆரம்பித்திருப்பதாகத்தான் தெரிகிறது என்று பிரிட்டனின் திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் எரிமலை நிபுணர் டாக்டர் டேவ் ரோதரி கூறியுள்ளார்.

அருகில் உள்ள வேறொரு எரிமலையும் தற்போது வெடிக்க வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் மேலும் பெரிய அளவில் காற்று மண்டலத்தில் தூசுப் புகைப் பரவலாம். இருந்தாலும்கூட, உலக அளவில் கணிசமாக ஏதும் நடக்கும் என்று யாரும் கருதவில்லை.

அறிவியல் விளக்கம்


எரிமலைப் பிழம்பு வெளியாதல்
அட்லாண்டிக் கடல் பரப்பின் மையத்தில் உள்ள மலைத்தொடரில் அமைந்திருக்கின்ற ஐஸ்லாந்தைப் பொறுத்தவரை அங்கு எரிமலைகள் வெடிப்பதென்பது புதிய விடயமல்ல.

அட்லாண்டிக் கடலடியில் உள்ள இந்த மலைத் தொடர், டெக்டானிக் பிளேட்ஸ் எனப்படும் உலகின் மேற்பரப்புத் தட்டுகள் இரண்டு ஒன்றோடொன்று அகன்று செல்கின்ற ஓர் இடம்.

அப்படி அகலும்போது உருவாகும் இடைவெளியை நிரப்ப பூமிக்கு கீழே இருந்து பாறை பிழம்பு மேலே வரும் என்பதுதான் இதற்கான அறிவியல் விளக்கம்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter