>> Friday, April 30, 2010
இடிந்து போன பிரபகரனின் வீடு
பிரபாகரன் வீடு இடிப்பு
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பூர்வீக வீட்டை இலங்கை இராணுவத்தினர் இடித்து தள்ளிவிட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டுகிறார்.
யாழ் குடா நாட்டின் வல்வெட்டித் துறையில் உள்ள பிரபாகரன் குடும்பத்தினரின் பூர்வீக வீட்டை பார்க்க தெற்கில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் இதை பொறுத்துக் கொள்ளமுடியாதவர்கள் வீட்டை இடித்திருக்கலாம் என்றும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
அந்த வீட்டிற்கு இராணுவ பாதுகாப்பு போடப்பட்டிருந்ததாகவும், வீட்டை சிறிது சிறிதாக உடைக்கும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்ததாகவும், இது பற்றி தான் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் சிவாஜிலிங்கம் தமிழோசையிடம் தெரிவித்தார்.
ஆனால் வீடு இடிந்து போனதற்கும் இராணுவத்திற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்றும் வீட்டை இடிக்க வேண்டிய தேவையேதும் இராணுவத்துக்கு இல்லை என்றும் இலங்கை ராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தமிழோசையிடம் கூறினார்.
1987 இல் மேற்கொள்ளப்பட்ட இலங்கை இராணுவ நடவடிக்கையின் போது இந்த வீடு பலமாக சேதமடைந்தது. பிரபாகரனின் வீட்டார் இந்த வீட்டை விட்டு 1983 இல் வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.
இலங்கையின் வன்னிப் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலி உறுப்பினர்களின் கல்லறைகள், அலுவலகங்கள் போன்றவைகளும் கடந்த சில மாதங்களில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுவருவது இங்கே குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment