>> Friday, April 23, 2010


சரத் பொன்சேகா கன்னி உரை


நாடாளுமன்றத்தில் சரத் பொன்சேகா
இலங்கையில் சட்டத்தின் ஆட்சி நிலைபெற வேண்டும் என்று ஜெனரல் சரத் பொன்சேகா தனது முதலாவது நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த 12 தினங்களில் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதை அடுத்து சரத் பொன்சேகா அவர்கள் பொது இடத்தில் பேசிய முதலாவது தருணம் இதுதான்.

சுருக்கமான தனது உரையில், முதலில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகரை வாழ்த்திய பிறகு, பொன்சேகா அவர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை தாக்கிப் பேசினார்.

இலங்கைக்கு, ஜனநாயகமும், சட்டத்தின் ஆட்சியும், தனிநபர் மற்றும் ஊடக சுதந்திரமும் தேவை என்று அவர் கூறினார்.

தான் வருத்தத்துடன் பேசுவதாக கூறிய அவர், பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறி தான் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

வெள்ளை உடையில் வந்திருந்த பொன்சேகா அவர்கள், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கைகுலுக்கிக் கொண்டதுடன், பார்வையாளர் அமரும் பகுதியை நோக்கி கையசைத்தார்.

அவர் இராணுவ தளபதியாக இருந்த காலத்தில் அரசியலில் தலையீடு செய்தார் என்ற குற்றச்சாட்டு உட்பட பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஒரு இராணுவ நீதிமன்றத்தின் முன்னர் விசாரிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று மறுத்துள்ள அவர், அந்த இராணுவ நீதிமன்றம் அரசியல் நோக்கம் கொண்டது என்றும் கூறுகிறார்.

அரசாங்கம் சரத் பொன்சேகா விடயத்தை மிகவும் சிக்கலுக்குரிய விடயமாக பார்க்கிறது.

செய்தியாளர்கள் அவரை அணுக அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் நாடாளுமன்ற முதல் நிகழ்வு குறித்து செய்தி வெளியிட்ட அரசாங்க தொலைக்காட்சி, அவரது பங்களிப்பை புறக்கணித்தது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சகோதரரான சாமல் ராஜபக்ஷ அவர்கள் புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


ஐ.தே.மு. இலிருந்து திகாம்பரமும் விலகினார்


சிக்கலில் ரணில்
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பீ. திகாம்பரம் ஐக்கிய தேசிய முன்னணியியிலிருந்து விலகி தனித்து இயங்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

திகாம்பரம் செவ்வி

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கப் போவதாகவும்
அரசாங்கத்தின் சிறந்த வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்படவுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் திகாம்பரம் கூறியுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து ஜெனரல் பொன்சேகாவை ஆதரித்த தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவர் பீ.திகாம்பரம், நாடாளுமன்றத் தேர்தலிலும் அந்தக் கூட்டணியின் கீழேயே போட்டியிட்டார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் தமக்கும் தேசிய பட்டியல் ஆசனங்களை வழங்குவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தேர்தலுக்கு முன்னர் அளித்த வாக்குறுதி மீறப்பட்டுள்ளதாக திகாம்பரம் தமிழோசையிடம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் இனவாதப்போக்கு இதன்மூலம் வெளிப்பட்டுள்ளதாகவும் அந்தக்கட்சி தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும் திகாம்பரம் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் மாற்றம் ஏற்பட்டாலே தவிர எதிர்காலத்திலும் அந்தக் கட்சியுடன் கூட்டு சேர வாய்ப்பில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் தமிழோசையிடம் கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, மனோ கணேசன் மற்றும் திகாம்பரம் ஆகியோரின் கருத்துக்கள் நகைப்புக்கிடமானவை என தெரிவித்தார்.


அரசாங்கத்துக்கு தாவும் முயற்சிகளாகவே ஐ.தே.க மீது இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன


ரவி கருணாநாயக்க

அரசாங்கத்துடன் இணைந்துகொள்வதற்கு இந்தக் கட்சிகள் மேற்கொள்ளும் தந்திரோபாய நடவடிக்கையாகவே இத​னைப் பார்ப்பதாக ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

இந்தக்கட்சிகளுக்கு தேசியப் பட்சியல் உறுப்புரிமை வழங்குவது தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவினால் எந்தவிதமான வாக்குறுதிகளும் அளிக்கப்படவில்லையெனவும் ரவி கருணாநாயக்க கூறினார்.


வட ஐரோப்பா வழமைக்கு திரும்பியது

மீள ஆரம்பித்துள்ள விமானசேவைகள்
ஐஸ்லாந்து எரிமலை சாம்பல் காரணமாக கடந்த ஐந்து நாட்களாக விமான போக்குவரத்தில் நீடித்த தடைக்குப் பின்னர் வட ஐரோப்பிய வான்போக்குவரத்து பாதை பெரும்பாலும் வழமைக்குத் திரும்பியுள்ளது.
ஒரு வாரத்துக்குரிய முழுமையான எண்ணிக்கையில் விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் குறைந்தளவான சேவை ரத்துகளே எதிர்பார்க்கப்படலாம் எனவும் ஐரோப்பிய வான்போக்குவரத்து கட்டுப்பாட்டு முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும் நோர்வேயும் சுவீடனும் தமது வான் போக்குவரத்து மார்க்கத்தில் சில பகுதிகளை மீண்டும் மூடியுள்ளன.

காற்றில் புதிய சாம்பல் மேகங்கள் அள்ளுண்டு வந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னணி விமான போக்குவரத்து நிறுவனங்கள் பல முன்னர் விதிக்கப்பட்டிருந்த தடையை விமர்சித்துள்ளன.

இரண்டு பில்லியன் டொலர்கள் வரை நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக கூறும் இந்த நிறுவனங்கள் நிதி ரீதியான உதவிகளை கோரியுள்ளன.

தென்னிந்தியாவிலும் ஐரோப்பிய சேவைகள் தொடங்கின


விமான சேவைகள் மீளத்தொடங்கின
இதேவேளை தென்னிந்தியாவிலும் ஐரோப்பாவுக்கான விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கியிருக்கின்றன.

எனினும் கடந்த ஆறு நாட்களாக இருந்த தடைகளால் ஏற்பட்ட தேக்க நிலை காரணமாக விமான சேவைகளை முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாக இந்திய சுற்றுலா முகவர்கள் கூட்டமைப்பின் தமிழ் நாட்டு பிரிவுத் தலைவர் ஐ. பஷீர் தெரிவித்தார்.

ஏற்கனவே இடைவழியில் பயணம் தடைப்பட்டவர்களை விட புதிய பயணிகளுக்கே தற்போது அனுமதி வழங்கப்படுவதாகவும் தொடர்ந்தும் தேக்கநிலை ஏற்படுவதை தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே பயணம் தடைப்பட்டவர்களுக்கு வேறு தினங்கள் ஒதுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter