திருகோணமலை முடிவு
தேர்தல் முடிவு
இலங்கையில் மறுவாக்குப்பதிவை அடுத்து இதுவரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி திருகோணமலை தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசுக்கட்சி முன்னிலை பெறுகின்றது. அடுத்த இடத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும், அதனையடுத்த இடத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் இருக்கின்றன.
இருந்தபோதிலும், திருகோணமலை மாவட்டத்துக்கான ஒட்டுமொத்த முடிவுகளின்படி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே அங்கு ஆகக்கூடுதலான வாக்குகளை பெற்றுள்ளது.
அதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு அந்த மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களும், இலங்கை தமிழரசுக்கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு ஆசனமும் கிடைத்துள்ளன.
இலங்கையில் தேர்தல் முறைகேடுகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட இரு பகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்புகள் இன்று நடந்து முடிந்திருக்கின்றன.
திருகோணமலை மாவட்டத்தின் கும்புறுப்பிட்டிப் பகுதி மற்றும் கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டிப் பகுதி ஆகிய இடங்களிலேயே இன்று வாக்குப் பதிவு நடந்திருக்கின்றது.
கும்புறுப்பிட்டியில் ஒரு வாக்களிப்பு நிலையத்திலும், நாவலப்பிட்டியில் முப்பதியேழு வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிப்பு நடந்தது.
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றைப் பொறுத்தவரை, தேர்தல் முறைகேடுகள் காரணமாக மறுவாக்குப் பதிவு நடப்பது இதுதான் முதல் தடவையாகும்.
இந்த இரு இடங்களிலும் மறு தேர்தல் நடப்பதால், நாடாளுமன்ற தேசிய பட்டியல் ஆசனங்களுக்கான ஒதுக்கீடுகள் ஒத்திவைக்கப்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த இரு இடங்களிலும் இன்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தவுடன் திருகோணமலை மற்றும் கண்டி மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
சேவைகள் படிப்படியாக ஆரம்பம்
விமானப் பயணிகள்
வட ஐரோப்பாவின் சில பகுதிகளில் எரிமலை சாம்பல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட விமானங்கள் மீண்டும் படிப்படியாக பறக்க ஆரம்பித்திருக்கின்றன.
ஆனாலும் ஐரோப்பிய கண்டம் நெடுகிலும்,விமானப் போக்குவரத்தில் பாரிய அளவு நிலைகுலைவு தொடர்கிறது.
பிரிட்டிஷ் வான்பரப்பு பெருமளவில் மூடப்பட்டிருக்கிறது. லண்டனைச் சுற்றியுள்ள எல்லா பெரிய விமானநிலையங்களும் மூடப்பட்டிருக்கின்றன.
ஜெர்மனி மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் தொடர்ந்து கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றன.
ஆனால், பாரிசிலிருந்தும் ஆம்ஸ்டர்டாமிலிருந்தும் சில விமானங்கள் பறந்திருக்கின்றன. மேலும் தென் ஐரோப்பாவில், இத்தாலிய, ஸ்பானிய மற்றும் துருக்கிய விமான நிலையங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு தணிந்து கொண்டு வருவது போல் தோன்றினாலும், ஐரோப்பிய பெருநிலப்பரப்பை நோக்கி புதிய எரிமலைச் சாம்பல் மேகம் ஒன்று உமிழப்பட்டுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் இருந்து நாடு திரும்பிக் கொண்டிருக்கும் பிரிட்டிஷ் சிப்பாய்கள் 500 பேர் ஸ்பெயினில் இருந்து பிரிட்டிஷ் கடற்படைக் கப்பலில் ஏறியிருக்கிறார்கள். எரிமலைப் புகை காரணமாக பிரிட்டிஷ் வான் பரப்பு பாதிக்கப்பட்டிருந்ததால், இவர்கள், சைப்பிரஸுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.
கார் உற்பத்தியில் முடக்கம்
அதேவேளை, ஐஸ்லாந்தின் எரிமலை சாம்பல் காரணமாக ஏற்பட்ட இடையூறுகள் உலகெங்கும் வர்த்தகத்தின் மீது மேலும் தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றன.
ஜெர்மன் நாட்டு கார் உற்பத்தி நிறுவனமான, பிஎம்.டபுள்யூ கார் தயாரிக்கப் பயன்படும் பொருட்கள், குறிப்பாக மின்னணு பாகங்கள் கிடைக்கப்பெறுவதில் ஏற்பட்ட தடங்கல்கள் காரணமாக ஜெர்மனியில் அதற்கு இருக்கும் மூன்று தொழிற்சாலைகளில் உற்பத்தியை தான் இடைநிறுத்துவதாகக் கூறுகிறது.
ஜப்பானில், நிஸ்ஸான் கார் நிறுவனமும் அயர்லாந்திலிருந்து பாகங்கள் வருவதில் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதால், தயாரிப்புப் பணிகளை இடை நிறுத்தியுள்ளது. ஹோண்டா நிறுவனமும் கார் தயாரிப்பு வேலைகளில் ஒரு பகுதியை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
சீனாவில் தேங்கிக்கிடக்கும் ஏற்றுமதிப்பொருட்கள் குவிந்து வருவதாகவும், தென்கொரியாவில், பல லட்சக்கணக்கான மொபைல் தொலைபேசிகள் ஏற்றுமதி செய்ய முடியாமல் தேங்கிக்கிடப்பதாகவும், வங்க தேசத்திலிருந்து ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்படவேண்டிய துணிமணிகள் மலை போல் குவிந்து கிடப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன
'தேவைக்கு அதிகமான எச்சரிக்கை'
ஐஸ்லாந்திலுள்ள எரிமலை வெடித்து சிதறியதால் வெளியான சாம்பலின் அளவுகள் மற்றும் அதன் தன்மைகளை ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள், அறிவியல் குறிப்புகள் மற்றும் ஆய்வுகளைக் காட்டிலும் கணினி மூலமான வரைபடங்களை வைத்து தேவைக்கும் அதிகமாக கூடுதலான எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து விட்டார்கள் என்கிற விமர்சனம் தற்போது எழுந்துள்ளது.
இந்த எரிமலை வெடிப்பு விமானப் போக்குவரத்தின் மீது ஏற்படுத்திய முன்னுதாரணமற்ற பாதிப்பு காரணமாக ஐரோப்பிய வான் பரப்பை மூட எடுக்கப்பட்ட முடிவுக்கு பின்னுள்ள அறிவியல் அடிப்படையை பல விமான நிறுவனங்கள் கேள்விக்குள்ளாக்கியுள்ளன.
பிரிட்டனின் வானிலை முன்னறிவிப்பு நிறுவனம் உண்மைகளின் அடிப்படையில் செயல்படாமல், அச்சத்தின் அடிப்படையில் செயல்பட்டது என்று விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறது.
விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் தர, உலக அளவில் அமைந்துள்ள ஒன்பது எரிமலை சாம்பல் தகவல் மையங்களில் இந்த பிரிட்டிஷ் வானிலை முன்னறிவிப்பு நிறுவனமும் ஒன்று.
ஐஸ்லாந்து எரிமலை கடந்த வாரம் மீண்டும் வெடித்தபோது, பிரிட்டிஷ் வானிலை முன்னறிவிப்பு நிறுவனம் பயன்படுத்திய கணினி மாதிரிகள் இந்த எரிமலை சாம்பல் துகள்கள் விரைவாக பிரிட்டன் மற்றும் வட ஐரோப்பாவை மூடிவிடும் என்று கணித்தன.
இந்த கணிப்புதான், சுற்றுச்சூழலில் எந்த அளவுக்கு சாம்பல் துகள்கள் நிறைந்திருக்கக்கூடும் என்பது குறித்த துல்லியமான தரவுகள் இல்லாத நிலையிலும், வான்பரப்பை மூட எடுக்கப்பட்ட முடிவிற்கு முக்கிய அடிப்படையாக அமைந்தது.
இந்த முடிவு விஞ்ஞானிகள் கூறும் முன்னெச்சரிக்கை கோட்பாடு என்பதனை அடிப்படியாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த கோட்பாட்டின்படி, எந்த ஒரு நடவடிக்கையையும் எடுப்பதில் ஒரு வரையறுக்கப்படாத ஆபத்து இருந்தால், அந்த நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று பிரேரிப்பவர்கள்தான், அந்த நடவடிக்கை ஒரு பாதுகாப்பான நடவடிக்கை என்பதை நிரூபிக்க வேண்டியர்கள் ஆவார்கள்.
எரிமலை வெடிப்பு போன்ற அபூர்வமாக நிகழும் சம்பவங்களை ஆராயும்போது, இது போன்ற கணினி மாதிரிகளைத்தான் ஓரளவுக்கு நாம் நம்ப வேண்டியிருக்கிறது என்கிறார் இங்கே பிரிட்டனில் எக்சிடர் பல்கலைக்கழகத்தில் ஆபத்து நிர்வாகத்தில் வல்லுநராக இருக்கும் டாக்டர் ஸ்டிபான் ஹாரிசன்
பிரிட்டிஷ் வானிலை முன்னறிவிப்பு நிறுவனம் தாங்கள் பலூன்கள் மூலமாகவும், லேசர் கதிர்கள் மூலம் எடுத்த அளவீடுகளைக் கொண்டும் சேகரித்த பிந்தைய தகவல்கள், இந்த சாம்பல் துகள்கள் நிறைந்திருக்கும் பகுதி மற்றும் அவைகளின் அளவை உறுதிப்படுத்தியிருப்பதாக, தங்கள் தரப்பு நியாயத்தைச் சொல்கிறார்கள்.
இப்போதைக்கு விஞ்ஞானம் குறித்து சில மிக விவரணமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஜெட் விமான இயந்திரங்களில் இந்த நுண் துகள்களில் எந்த அளவு துகள்கள் அடைத்துக் கொள்ளும், எப்போது இந்த சாம்பல் திரள் கலையும், போன்ற இந்த மாதிரிக் கேள்விகளுக்கு இப்போதைக்கு அறிவியல் ரீதியாக விடைகள் தர தேவைப்படும் தரவுகள் இல்லை.
Read more...