>> Friday, November 20, 2009

ஏன் செய்ய வேண்டும் உடற்பயிற்சி? 'உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே' என்கிறார் திருமூலர் தமது திருமந்திரத்தில். 'சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுதவேண்டும்' என்றும் 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்றும் சொல்கிறது நம் பழமொழி. நமது உடலை நாம் பாதுகாக்காமல் அடுத்தவரா பாதுகாக்க முடியும்? உடலைப் பேணிப்பாதுகாப்பது என்றால் என்ன? நன்கு மூக்குப் பிடிக்க விதவிதமாகச் சாப்பிட்டுவிட்டு,
நாற்காலியில் அமர்ந்துகொண்டு துரும்பைக்கூட அசைக்காமல், நான் என் உடம்பை நன்கு பத்திரமாகக் கவனித்துக்கொள்கிறேன் என்றா சொல்லவேண்டும்? இல்லை.

பயன்படுத்தாத இயந்திரமே துருப்பிடித்து வீணாகிவிடுகையில் மனித உடம்பு உழைப்பு இல்லை என்றால் என்ன ஆகும்? உடம்பு நன்றாக இருக்கவேண்டும், நோய்நொடியின்றி வாழவேண்டுமென்றால் நாம் உடலுக்கு சரியான சத்தான உணவும் கொடுக்கவேண்டும், சரியாக உடற்பயிற்சியும் செய்யவேண்டும். இது எல்லாருக்கும் தெரிந்த தகவல்தானே. இதில் என்ன புதுமை இருக்கிறது என்கிறீர்களா? உடற்பயிற்சி
நமக்கு நல்லது என்று தெரியும்தான். உடற்பயிற்சி நமக்கு எந்தெந்த விதத்தில், எவ்வளவு தூரம் நன்மை புரிகிறது என்று கொஞ்சம் விரிவாகவே தெரிந்துகொள்வோமே!!

உடனடி விளைவு - ஆழ்ந்த தூக்கம்: இன்றைய உலகில் தூக்கமின்மை எனப்படும் நோய் அதிகரித்து வருகிறது. இப்பொழுதெல்லாம் நமது உடலுழைப்பு குறைந்து விட்டது. நம் முன்னோர்கள் பெரும்பாலும் உழவுத்தொழிலில் ஈடுபட்டிருந்தனர். எங்கே செல்லவேண்டுமென்றாலும் நடந்துதான் சென்றனர். பெண்களும் அம்மி அல்லது ஆட்டுரலில் அரைத்தல், நெல் குற்றுதல், தண்ணீர் எடுத்து வருதல், வீடு முழுவதும்
பெருக்கித் துடைத்தல் என்ற பெரும்பாலான வேலைகளைச் செய்து வந்தனர். ஆனால் இன்றோ எல்லாம் இயந்திர மயம். பக்கத்துத் தெருவிற்குக் கூட நாம் வண்டியில் செல்கிறோம். அதே சமயம் நமது மூளை அதிக அயர்ச்சியடையும் அளவு வேலை செய்கிறோம். குறிப்பாக மென்பொருள் நிறுவனங்கள், பொருண்மியம் தொடர்பான நிறுவனங்கள் இவற்றில் பணி புரிபவர்கள் நாற்காலியை விட்டு எழக்கூட முடியாமல் மிகுந்த
மும்மரமாக உள்ளனர். ஆனால் இவர்கள் மூளைக்குக் கொடுக்கும் வேலையோ மிக மிக அதிகம். எனவே இரவில் இவர்களால் உறங்க முடிவதில்லை. இவர்கள் குறைந்த பட்சம் 20 முதல் 30 நிமிடங்களை உடற்பயிற்சிக்கென ஒதுக்குவார்களே ஆனால், இரவில் உடனடியான, ஆழ்ந்த உறக்கம் பெறுவது உறுதி.

ஊற்றெடுக்கும் உற்சாகம்: உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்பவர்கள் எளிதில் மன அழுத்தத்திற்கு ஆளாவதில்லை எனவும், அதிக உற்சாகத்துடன் பணிகளை மேற்கொள்கின்றனர் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன. அது மட்டுமல்ல, இவர்கள் பதட்டமடைவதில்லை, எத்தகைய சூழலையும் அமைதியாகவும் திறம்படவும் கையாள்கின்றனர் என்பதும் இந்த ஆய்வுகளின் முடிவு. மேலும், தொடர்ந்து பயிற்சி செய்பவர்கள்
உடலிலும் மனதிலும் தோன்றும் நல்லவிதமான மாற்றங்கள் அவர்களுடைய சுய மதிப்பீடு உயரவும் வழிவகை செய்கிறது.

வலுவான எலும்புகளும், வலியில்லா வாழ்வும்: உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வரும்பொழுது, அனைத்து எலும்புகளும் பலம் பெறுகின்றன. இதனால், மூட்டுவலி, முதுகுவலி முதலியவை நம்மை அண்டுவது கூட இல்லை. தொடர்ச்சியாக உடற்பயிற்சிகளை, குறிப்பாக நடைப்பயிற்சி மற்றும் மெதுவான ஓட்டம் முதலியவற்றைச் செய்பவர்களது எலும்புகள் வழக்கத்தைவிட அதிக அளவு அடர்த்தியாவதாகவும்,
இதனால், வயதான காலத்தில் வரும் எலும்புத் தேய்வு என்னும் பிரச்னை இவர்களுக்கு ஏற்படுவதில்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக மாதவிடாயின் காரணமாக அவதிப்படும் பெண்கள், தொடர்ந்து உடற்பயிற்சிகளைச் செய்வதால், அந்தச் சமயத்தில் ஏற்படும் இடுப்பு மற்றும் வயிற்று வலிகளில் இருந்து நிவாரணம் கிடைப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

எதையும் தாங்கும் இதயம் : இதயநோய் பொதுவாக கொழுப்பு அதிகம் உடலில் உடையவர்களையே தாக்குகிறது. ஆனால், நம்மில் பலர் அறியாதது ஒன்று உண்டு. அது கொழுப்பில் இரண்டு வகையுண்டு என்பது. நல்ல கொழுப்பு என்பது HDL எனவும், கெட்டகொழுப்பு LDL எனவும் அழைக்கப் படுகிறது. மிதமான உடற்பயிற்சி செய்பவர்கள் உடலில் நல்ல கொழுப்பு அதிகரிக்கிறது எனவும் கெட்ட கொழுப்பு குறைகிறது எனவும் தெரிய
வந்துள்ளது. இந்த HDLஇன் பணி இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதாகும். மேலும் விடாமல் தொடர்ந்து பயிற்சி செய்பவர்களது உடலில் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுத்தக் கூடிய LDL எனும் கெட்ட கொழுப்பு படிவது தடுக்கப் படுகிறது.

நீளும் வாழ்நாள்: உங்கள் வாழ்நாளை (நோயற்ற வாழ்நாளை) நீடித்துக்கொள்ள நீங்கள் தினமும் உடலை வருத்தி ஏராளமான பயிற்சிகள் செய்துதான் ஆகவேண்டுமென்பதில்லை. மாதத்தில் பத்து நாட்கள் அரைமணி நேரம் மிதமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தவர்கள், உடற்பயிற்சி ஏதும் செய்யாதவர்களை விட அதிக நாள் வாழ்வதாக/ வாழ்ந்ததாக கடந்த பதினேழு வருடங்களாக மேற்கொள்ளப் பட்டு வந்த ஒரு
புள்ளிவிவரம் கூறுகிறது.

இந்தப் பலன் போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

உடற்பயிற்சி செய்வதால் சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப் படுகிறது. வாரம் மூன்று அல்லது நான்கு நாட்கள் மிதமான உடற்பயிற்சி மேற்கொள்பவர்களது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியானது 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கிறது. பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பையில் தோன்றும் புற்றுநோய் முதலியவை உடற்பயிற்சி செய்பவர்களுக்கு வரும் வாய்ப்பு 50 சதவீதம்
வரை குறைவதாகவும் பல்வேறு ஆராய்ச்சிகளில் இருந்து தெரிய வந்துள்ளது. அவ்வளவுதானா? வாரம் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் பயிற்சி செய்பவர்களது உடலில் சிறுநீரகக் கல் அல்லது பித்தப்பைக் கல் முதலியவை உருவாவது கூட இருபது சதவீதம் குறைவாம். உடல் எடை கட்டுப்படுகிறது. சக்தி கூடுகிறது. தோற்றம் பொலிவடைகிறது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter