>> Saturday, November 21, 2009

இலங்கையின் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சித் தலைவர்களிடையே ஸ்விட்சர்லாந்தில் கூட்டம்

இலங்கையில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசி இணக்கப்பாடு காண்பதற்காக இலங்கையின் தமிழ் மற்றும் முஸ்லீம் கட்சிகளின் தலைவர்கள் ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் கூடியுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்ந்தர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிஸ் கட்சியின் தலைவர் ரவூஃப் ஹக்கிம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழர் தகவல் நடுவம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் சிறுபான்மையினரைப் பாதிக்கும் பல்வேறு விடயங்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் பொது இணக்கப்பாட்டைக் காண்பது இந்தக் கூட்டத்தின் நோக்கம் என்று தமிழோசையில் கருத்து வெளியிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.



--------------------------------------------------------------------------------


இராணுவ வெற்றியைக் குறிக்கும் ஆயிரம் ரூபாய் நோட்டு தொடர்பில் புதிய சர்ச்சை


புதிய ஆயிரம் ரூபாய் நோட்டு

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆறு மாதங்களுக்கு முன் பெறப்பட்ட இராணுவ வெற்றியை குறிக்கும் ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஆயிரம் ரூபாய் நோட்டு, அழகான பலவண்ணங்களில் அச்சிடப்பட்டிருக்கிறது.

இதன் ஒரு பக்கத்தில், பாதுகாப்புப் படையினர் இலங்கையின் தேசியக் கொடியை ஏற்றும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. அடுத்த பக்கத்தில் புன்னகை தவழும் முகத்துடன் இருக்கும் அதிபர் ராஜபக்ஷ அவர்கள், வெற்றியை குறிக்கும் விதமாக கையை உயர்த்திக்காட்டும் படம் அச்சிடப்பட்டுள்ளது.

அதிபர் தேர்தல் விரைவில் நடக்கவிருக்கும் நிலையில் இப்படிப்பட்ட ரூபா நோட்டு ஒன்று வெளியிடப்பட்டமை வெட்கம் கெட்ட செயல் என்று முக்கிய எதிர்கட்சி அரசியல்வாதியான மங்கள சமரவீர சாடியிருக்கிறார்.

உயிருடன் இருக்கும் அரசியல் தலைவர் ஒருவரின் படம் ரூபாய் நோட்டில் அச்சிடப்படுவது அசாதாரணமான ஒரு நிகழ்வு என்றும் அவர் வர்ணித்துள்ளார்.

ஆனால் சமரவீராவின் இந்த குற்றச்சாட்டுக்கள் பொறாமையின் விளைவாக சொல்லப்படுபவை என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் காப்ரால் கூறியுள்ளார்.



--------------------------------------------------------------------------------


நேபாள மிருக பலி திருவிழா: முன்னாள் கனவுக் கன்னி கண்டனம்


இத்திருவிழாவில் லட்சக்கணக்கான மிருகங்கள் பலிகொடுக்கப்பட்டு வருகின்றன
நேபாளத்தில் விரைவில் நடக்கவுள்ள இந்து திருவிழா ஒன்றின்போது பல்லாயிரக்கணக்கான விலங்குகள் பலிகொடுக்கப்படுவதை நேபாள அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸின் முன்னாள் சினிமா நட்சத்திரமும் மிருக வதைத் தடுப்பு ஆர்வலருமான பிரிஜீத் பார்தோ வலியுறுத்தியுள்ளார்.

நேபாளத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகின்ற காதி மாய் துர்க்கை அம்மன் திருவிழாவிற்காக நேபாளத்தின் பல பாகங்களிலிருந்தும் இந்தியாவின் சில இடங்களிலிருந்தும் கூடுகின்ற பக்தர்கள், 5 லட்சம் வரையிலான கால்நடைகளையும் விலங்குகளையும் பலி கொடுக்கவிருப்பதாகத் தெரிகிறது.

இந்த மிருக பலி சடங்கை எதிர்த்து மிருக உரிமைகள் மற்றும் புத்த மத குழுக்கள் ஏற்கனவே அழுத்தம் தந்துவரும் நிலையில், இந்த திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசாங்கம் அதிகரித்துள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் திருவிழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர். துர்க்கை அம்மனின் ஒரு வடிவமான காதி மாய் என்ற பெண் தெய்வத்தை திருப்திப்படுத்துவதற்காக லட்சக்கணக்கான மிருகங்கள் பலிகொடுக்கப்படுகின்றன.

மிருகங்களை பலி கொடுத்தல் என்பது, தீங்குகள் நீங்கி வளம் பெருக உதவும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆனால் இது காட்டுமிராண்டித்தமான, காலத்துக்கு ஒவ்வாத செயல் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.



--------------------------------------------------------------------------------


30 ஆயிரம் ரன் குவித்த முதல் கிரிக்கெட் வீரர் ஆனார் டெண்டுல்கர்


சச்சின் டெண்டுல்கர்
இலங்கை இந்திய அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் இரண்டாவது இன்னிங்சில் சதமடித்த டெண்டுல்கர் உலகிலேயே முப்பதினாயிரம் ரன்களை பெற்ற முதலாவது ஆட்டக்காரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.

அகமதாபாத் டெஸ்ட் ஆட்டம் சமனில் முடிவடைந்துள்ளது.

முதலாவது இன்னிங்ஸில் 426 ஓட்டங்களைப் பெற்றிருந்த இந்திய அணி அதனது இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கட் இழப்புக்கு 412 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி அதனது முதலவாது இன்னிங்ஸில் 7 விக்கட்டுக்கள் இழப்புக்கு 760 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter