சரத் பொன்சேகாவை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை விசாரிப்பதற்கு இலங்கை எதிர்ப்பு

>> Tuesday, November 3, 2009

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதரமாக இலங்கை கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களை பயன்படுத்தும் நோக்கில் அவரை விசாரிப்பதற்காக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கைக்கான அமேரிக்க தூதுவரிடம் இலங்கை வெளியுறவு அமைச்சர் றோஹித போகொல்லாகம அவர்கள் பேச்சு நடத்தியுள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை, நேர்காணல் ஒன்றுக்காக வரும் புதனன்று வருமாறு அழைத்துள்ளது. இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கவே அது அவரை அழைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து இன்று கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய அமைச்சர் றோஹித போகொல்லாகம அவர்கள், ''ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு கிடைத்திருக்கக் கூடிய அனைத்து தகவல்களும் அவர் இலங்கை இராணுவத்தின் தலைவர் என்ற வகையில் அவருக்கு கிடைத்த வசதிகளின் அடிப்படியிலேயே அவருக்கு கிடைத்திருந்தன, ஆகவே அவற்றை அவர் பிறருக்கு சட்ட ரீதியாக கூறுவதானால், அது குறித்து முன்னதாகவே இலங்கை அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்'' என்று கூறினார்.

இந்த தகவல்கள் இலங்கையினதும் அதனது மக்களினதும் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்த தகவல்கள் என்பதால், அவற்றை எந்த சூழ்நிலையிலும், அவர் வெளியிடுவதை இலங்கை அரசாங்கம் அனுமதிக்காது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்த விவகாரம் குறித்து இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளினதும், உயர்மட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டிருப்பதால், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அது குறித்து, சரத் பொன்சேகா அவர்களை விசாரிக்கக் கூடாது என்றும் தாம் அமெரிக்காவின் இலங்கைக்கான தூதரிடம் கூறியிருப்பதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறினார்.

இப்படியான ஒரு விசாரணைக்காக ஜெனரல் சரத் பொன்சேகா அழைக்கப்பட்டிருப்பதை, வைத்துப் பார்க்கும் போது ஜெனரல் பொன்சேகாவுக்கும், பாதுகாப்பு அமைச்சர் கோத்தாபாயவுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டிருப்பதாக கொள்ளலாமா என்று கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர் றோகித போகொல்லாகம அவர்கள், '' நான் அப்படி நினைக்கவில்லை'' என்று பதிலளித்தார்.



--------------------------------------------------------------------------------
தமிழக அகதி முகாம்களை மேம்படுத்த மாநில அரசு முடிவு

தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழர் அகதி முகாம்களில் அடிப்படை வசதிகளை உடனடியாக மேம்படுத்துவதென தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.

இம்முகாம்களில் போதுமான வசதிகள் இல்லாததன் காரணமாக அகதிகள் பல் வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர் என்று ஒரு பத்திரிகையில் செய்தி வெளியானதன் பின்னணியில், முகாம்களின் நிலை குறித்து ஆலோசிக்க, தமிழக முதல்வர் கருணாநிதி இன்று அவசரக் கூட்டமொன்றை தலைமைச் செயலகத்தில் கூட்டியிருந்தார்.

அதேவேளை, ஏற்கனவே செய்துகொடுக்கப்பட்டுள்ள வசதிகளுக்காக அகதிகள் நன்றிக்கடன்பட்டவர்களென்று தெரிவித்த ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக்கழக நிறுவனர் சா.செ.சந்திரஹாசன், சிறு சிறு பிரச்சினைகளைப் பெரிதுபடுத்துவதை ஊடகங்கள் தவிர்க்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியாவில் நிரந்தரக்குடியுரிமை வழங்குவது என்ற ஆலோசனை குறித்து தம் மக்களிடம் பேசிவருவதாகவும், அவர்களுடனான கலந்தாய்விற்கு பிறகே தங்களால் இறுதி முடிவு எதுவும் எடுக்கமுடியும் என்றும் சந்திரஹாசன் தெரிவித்தார்.



--------------------------------------------------------------------------------
கொக்கோஸ் தீவுகளுக்கு அருகே படகு விபத்து: 23 பேரைக் காணவில்லை

இந்து மகா சமுத்திரத்தின் கொக்கோஸ் தீவுகளுக்கு அருகே ஒரு படகு மூழ்கியதில் குறைந்தது 23 பேர் காணாமல் போயுள்ளனர்.

அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்கள் என்று நம்பப்படும், 17 பேர் அந்த வழியே திரவ வாயுவை ஏற்றி வந்த கப்பல் ஒன்றினால் மீட்கப்பட்டனர்.

ஆஸ்திரேலிய பிராந்தியத்தைச் சேர்ந்த கொக்கோஸ் தீவுகள், ஆஸ்திரேலியாவுக்கும், இலஙங்கைக்கும் இடையே இருக்கின்றன.

உயிர் தப்பியிருக்கக் கூடியவர்களை மீட்பதற்கான பணியில் ஆஸ்திரேலிய றோயல் ஃபிளயிங் டாக்டர் சேவையின் ஜெட் ஒன்றும் ஈடுபட்டுள்ளது.

இந்த மாதிரியான நிகழ்வுகள் இந்தப் பிராந்தியத்தில் தற்போது வழமையாகிவருவதாக இந்த ஃபிளயிங் டாக்டர் சேவையைச் சேர்ந்த ஸ்டீபன் லாங் ஃபோர்ட் கூறியுள்ளார்.

எவரும் இலகுவில் செல்லாத இந்து மகா சமுத்திரத்தின் அந்தப் பகுதியில், இந்த சிறிய படகு மூழ்கத்தொடங்கிய போது இருளத்தொடங்கிவிட்டது.

அந்தப் படகில் வந்தவர்கள் பெரும்பாலும் அகதிகளாக தஞ்சம் கோரிச்சென்றவர்களாக இருக்கக் கூடும்.

சுமார் 17 பேர் வரை தாய்வான் நாட்டுக் கப்பலால் மீட்கப்பட்டாலும் ஏனைய பலரை இன்னமும் காணவில்லை.

தாம் மிகுந்த கவலை அடைந்திருப்பதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இந்த வருடத்தில் மாத்திரம் இலங்கை, இராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 30 படகுகளில் வந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ளனர்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter