>> Wednesday, November 11, 2009
துணுக்காயில் கல்வி உள்ளிட்ட பல சேவைகள் துவக்கம்
இலங்கையின் வன்னிப்பிரதேசமாகிய முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள துரித மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் கீழ் மீளக் குடியமர்ந்துள்ள மக்களுக்கான பல்வேறு சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்தில் மீளக்குடியமர்ந்துள்ள குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் கல்வி கற்பதற்காக யோகபுரம் மகாவித்தியாலயம் செவ்வாய் கிழமை முதல் செயற்படத் தொடங்கியுள்ளது என்றும், நானூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று அந்தப் பாடசாலைக்கு வருகை தந்திருந்ததாகவும் துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் தம்பிராஜா மேகநாதன் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, துணுக்காய் பகுதியில் இரண்டு உப அஞ்சல் அலுவலகங்கள் திறக்கப்பட்டிருப்பதாகக் கூறும் வடமாகாண பிரதி அஞ்சல்மா அதிபர் வி.குமரகுரு அவர்கள், மக்கள் குடியேறியுள்ள கிளிநொச்சி மாவட்டத்திலும் அஞ்சல் அலவலகங்கள் விரைவில் திறக்கப்படவுள்ளன என தெரிவித்திருக்கின்றார்.
துணுக்காய் பிரதேச பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் மீளக்குடியமர்ந்துள்ள மக்களுக்கான காய்கறிகள், எரிபொருள் உட்பட அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கென ஏற்கனவே நான்கு கிளைகளைத் திறந்து செயற்பட்டு வருவதாக அந்தச் சங்கத்தின் தலைவர் தம்பிப்பிள்ளை பிரேமச்சந்திரன் தெரிவிக்கின்றார்.
இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
--------------------------------------------------------------------------------
திருகோணமலையில் 2006 முதல் 109 பேர் காணமல் போயுள்ளனர்- ஜனாதிபதி ஆணைக்குழு தகவல்
கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பள்ளி மாணவி
இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை மற்றும் கந்தளாய் பொலிஸ் பிரிவுகளில் 2006 முதல் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 109 பேர் காணாமல் போனதாகவும், 82 பேர் கடத்தப்பட்டதாகவும், இலங்கையில் காணாமல் போனவர்கள், மற்றும் கடத்தப்பட்டவர்கள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஒரு நபர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையர், முன்னாள் நீதிபதி மஹாநாம திலகரட்ண தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் உண்மையறியும் நடவடிக்கைகளை நடத்திய பின்னர் இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
தனது விசாரணைகளின் போது காணாமல் போனவர்களில் இளம் மனைவிமாரே அதிகமாக சாட்சியம் அளிக்க வந்ததாகவும் அவர் கூறினார்.
அவர்களது நிலைமை மிகவும் சோகமானதாக இருந்ததாகவும், அவர்களில் பலர் வாழ வழியில்லாமல் இருப்பதாகவும் அவர் கூறினார்.
கடத்தப்பட்டவர்களில் சிலரைக் கொண்டு சென்ற வெள்ளை நிற வான்கள் பாதுகாப்புப் படையினரின் சோதனைச் சாவடிகளின் ஊடாகவே எந்தவிதமான சோதனையும் இன்றியே சென்றதாக சாட்சியங்களில் சில குற்றஞ்சாட்டியதாகவும் மஹாநாம கூறியுள்ளார்.
--------------------------------------------------------------------------------
இடைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஊக்கம் -இடதுசாரிகளுக்கு பின்னடைவு
பிரதமர் மன்மோகன் சிங்குடன் சோனியா காந்தி
ஏழு மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளன. மேலும், உத்தரப் பிரதேசத்தில், மக்களவைத் தொகுதி ஒன்றிலும் காங்கிஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
அதே நேரத்தில், இடதுசாரிக் கட்சிகள் ஆளும் மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநிலங்களில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடம் கூடக்கிடைக்கவில்லை.
உத்தரப் பிரதேசத்தில், பிரோஸ்பூர் மக்களவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில், முன்னாள் நடிகரும், காங்கிரஸ் வேட்பாளருமான ராஜ் பாபர், சமாஜவாதி கட்சி வேட்பாளரும் அக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் மருமகளுமான டிம்பிள் யாதவை 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சட்டப்பேரவையைப் பொருத்தவரை, உத்தரப் பிரதேசத்தில், 11 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 10 தொகுதிகளுக்கும், கேரளத்தில் மூன்று தொகுதிகளுக்கும், அஸ்ஸாம், ஹிமாசலப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தலா இரு தொகுதிகளுக்கும், சத்தீஸ்கரில் ஒரு தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெற்றது.
கேரளத்தில், மூன்று தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சி தக்கவைத்துக் கொண்டது..
மேற்கு வங்கத்தில், பத்தில் ஏழு தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஒன்றில் காங்கிரஸும், ஒன்றில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஓரிடம் கூடக் கிடைக்காத நிலையில், அதன் கூட்டணிக் கட்சியான ஃபார்வர்டு பிளாக்கிற்கு ஒரு இடம் கிடைத்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரை, கடந்த மக்களவைப் பொதுத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, இடைத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறற்றுள்ளது.
தேர்தல் நடந்த 11 தொகுதிகளில் ஏழு தொகுதிகளை மாயாவதி கட்சி கைப்பற்றியுள்ளது. முலாயம் சிங் யாதவின் சமாஜவாதி கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.
0 comments:
Post a Comment