>> Wednesday, November 25, 2009

பொன்சேகாவை வேட்பாளராக முன்னிறுத்துகிறது ஜெ வி பி

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ஜெனரல் பொன்சேகாவை தாம் முன்மொழிந்துள்ளதாக ஜெ வி பி கூறியுள்ளது. இதை பிற கட்சிகள் ஏற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிற எதிர்கட்சிகளும் இவரை ஆதரிக்க வேண்டும் என்று அக்கட்சி கோரியுள்ளது. ஆனால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு தேர்தலில் நிற்பது குறித்து ஜெனரல் பொன்சேகா எதவும் கூறாமல் இருந்து வருகிறார்.

அதே நேரம் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் இது பற்றி எதுவும் தெரிவிக்காமல் உள்ளது.



--------------------------------------------------------------------------------


பாதுகாப்பு கோரி பொன்சேகா மனு

ஒய்வு பெற்ற இராணுவத் தளபதி சரத் பொன்சேகா

தனது பாதுகாப்புக்காக 600 இராணுவ வீரர்களும் 10 வாகனங்களும் 2 குண்டு துளைக்காத வாகனங்களையும் வழங்குமாறு அரசாங்கத்துக்கு கட்டளையிடுமாறு முன்னாள் இராணுவத்தளபதி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை இலங்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

ஜனாபதிக்கு 2 ஆயிரம் இராணுவ வீரர்களும், பாதுகாப்பு செயலாளருக்கு 500 இராணுவ வீரர்களும், தற்போதைய இராணுவ தளபதிக்கு 600 இராணுவ வீரர்களும். முன்னாள் கடற்படைதளபதி வசந்த கரன்னாகொடவுக்கு 120 இராணுவ வீரர்களும் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருப்பதாக இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் மேலும் தங்குவதற்கு இடமளிக்குமாறு அரசாங்கத்துக்கு கட்டளையிடுமாறும் கோரியுள்ளார்

விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி அரசாங்கத்துடன் இணைந்துள்ள அமைச்சர்களுக்கும் ஏனைய அமைச்சர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பைவிட குறைந்த பாதுகாப்பு தனக்கு வழங்கப்பட்டிருப்பதால் தனது உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது 62 இராணுவ வீரர்கள் பாதுகாப்புக்காக தனக்கு வழங்கப்பட்டிருந்தாலும் அவர்களில் இருபது பேர் சுழற்சி முறையில் சேவையிலிருந்து மாறும் பட்சத்தில் தமது பாதுகாப்புக்ககாக 25 இராணுவ வீரர்களே இருப்பது போதுமானதாக இல்லையென்றும் சரத் பொன்சேக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பெரும் பங்களிப்பை செய்த தனக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் காரணமாக 600 இற்கும் அதிகமான இராணுவ வீரர்களை கொண்டு போதூன பாதுகாப்பு வழங்குமாறு பாதுகாப்பு செயலாளருக்கு கட்டளையிடுமாறும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.



--------------------------------------------------------------------------------


பாபர் மசூதி இடிப்பு விவகாரம் - விசாரணை ஆணையத்தின் அறிக்கை தாக்கல்


பாபர் மசூதி இடிக்கப்படும் போது எடுத்த படம்

இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தியாவில் இருந்த பாபர் மசூதி இந்துத்துவவாதிகளால் இடிக்கப்பட்டு 17 ஆண்டுகளுக்குப் பின்னர் , அந்த சம்பவம் குறித்து விசாரிக்க அரசால் அமைக்கப்பட்ட லிபர்ஹான் கமிஷன் அளித்த அறிக்கை, இன்று, செவ்வாய்க்கிழமை, இந்திய நாடாளுமன்றத்தில் அரசால் வைக்கப்பட்டது.

இது குறித்து கருத்து வெளியிட்ட விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தேசியத் துணைத்தலைவர் வேதாந்தம், இவ்வளவு காலம் கடந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருப்பது, நீதியை மறுக்கும் செயல் என்றார். அதே போல் நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் முன்னரே ஊடகங்களில் இந்த அறிக்கை கசியவிடப்பட்டிருப்பது, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றார். வாஜ்பாய் போன்ற இந்த சம்பவத்தில் சம்பந்தமில்லாத தலைவர்களை இந்த அறிக்கை குற்றம் சாட்டியிருப்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகும் என்றார் வேதாந்தம்.

கோவில் கட்டுவதுதான் சங்க பரிவார் அமைப்புகளின் நோக்கமே தவிர மசூதியை இடிப்பது அல்ல என்றும் அவர் கூறினார்.

ஆயினும், அயோத்தியில் ராமர் கோவில், மதுராவில் கிருஷ்ணர் கோவில் மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் கட்டும் திட்டங்களை தங்களது அமைப்புகள் கைவிடாது என்றும், ஆனால் இந்த லட்சியங்களை எட்டுவதில் வன்முறைக்கு இடம் இருக்காது என்றும் வேதாந்தம் தெரிவித்தார்.

"அறிக்கை ஏமாற்றமளிக்கிறது"-- ஜவாகிருல்லா

அரசின் இந்த நடவடிக்கை எடுத்த அறிக்கை ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது என்றார் தமிழக முஸ்லீம் முன்னேற்றக்கழகத் தலைவர் ஜவாகிருல்லா.

சங்க பரிவார் அமைப்புகளைச் சேர்ந்த 68 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக விசாரணைக் கமிஷன் தெரிவித்திருப்பது, இந்த விஷயம் முன்பே தெரிந்ததுதான் என்றாலும், வரவேற்கத்தகுந்தது என்றும் ஜவாகிருல்லா தெரிவித்தார்.

ஆனாலும், இந்த விசாரணைக்கமிஷன் அறிக்கை மீது அரசு முறையான நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நீதிமன்றங்களால் சரியாகத் தீர்வு காணமுடியாத பிரச்சினயாகிவிட்ட இதற்கு, ஹிந்து மற்றும் முஸ்லீம் அமைப்புகள் இடையே பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணமுடியாதா என்று கேட்டதற்கு பதிலளித்த ஜவாகிருல்லா, இந்த விஷயத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்ட வேண்டுமென்றால், பாபர் மசூதி அமைந்திருந்த இடம் குறித்த நில உரிமை வழக்கு விரைவில் முடிக்கப்பட்ட அதில் கிடைக்கும் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் , அது ஒன்றுதான் சரியான தீர்வாக இருக்கும் என்றார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter