>> Thursday, November 5, 2009

ஜனாதிபதி ராஜபக்ஷ வன்னி விஜயம்



இலங்கை அரச படைகளினால் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் முதற்தடவையாக வன்னிப்பிரதேசத்திற்கு இன்று விஜயம் செய்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள், அங்கு இடம்பெற்று வருகின்ற மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்திப் பணிகளையும் நேரடியாகப் பார்வையிட்டிருக்கின்றார்.

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசத்தில் மீளக்குடியமரச் சென்றுள்ள இடம்பெயர்ந்த மக்களையும் அவர் சந்தித்து பேசியிருக்கிறார்.

அவர்கள் மத்தியில் தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள், கஸ்டமான காலம் முடிவடைந்து புதிய வாழ்க்கையை உருவாக்குவதற்காகப் பாடுபடும் அரசாங்கத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதியின் இந்த வன்னி விஜயத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர், முப்படைகளின் தளபதிகள், புதிய பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய உள்ளிட்ட உயர் மட்ட அரச அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தார்கள்.

இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


'சரத் பொன்சேகா அமெரிக்காவில் இருந்து புறப்பட்டுவிட்டார்'


சரத் பொன்சேகா
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறையினரின் விசாரணைக்கு சமூகமளிக்காமல் இலங்கை கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகா அங்கிருந்து புறப்பட்டுவிட்டதாக இலங்கை தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்கா சென்றிருந்த இலங்கை கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா அங்கிருந்து கிளம்பிவிட்டார் என்றும் அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு துறையினாலோ வேறு அரச நிறுவனத்தினாலோ அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருக்கவில்லை எனவும் இலங்கை வெளியுறவு அமைச்சின் அறிக்கை கூறுகிறது.

விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விபரம் வழங்குவதற்காக இலங்கை கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு துறையினரால் தொடர்பு கொள்ளப்பட்டிருந்ததாக விபரங்கள் வெளியாகியிருந்தன.

தளபதி சரத் பொன்சேகாவிடம் அமெரிக்கா கேள்விகள் கேட்பதற்கு இலங்கை அரசாங்கம் ஆட்சேபனை தெரிவித்திருந்தது.



--------------------------------------------------------------------------------


இத்தாலியில் வகுப்பறையில் சிலுவையை வைத்திருப்பது குறித்த விவகாரம்


வகுப்பறையில் சிலுவை
இத்தாலியில் பள்ளிக்கூட வகுப்பறைகளில் கிறிஸ்தவ மதச் சின்னமான சிலுவையை வைத்திருப்பதற்கு எதிராக மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதற்கு வத்திகானிலுள்ள ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் திருச்சபை அதிர்ச்சி அடைந்துள்ளது என அதன் சார்பாகப் பேசவல்லவர் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிக்கூடங்களில் சிலுவைகளை வைத்திருப்பது என்பது மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் உரிமைகளை மீறும் செய்ல் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter