>> Saturday, November 7, 2009

மனித உரிமை விவகாரங்களைக் கையாள்வதில் உள்ள குறைகளை அகற்ற இலங்கை அரசு புதிய செயல்திட்டம்: அமைச்சர் மஹிந்த சமரசிங்க

இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களை கையாள்வதில் அரசின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு சாத்தியம் இருப்பதை இலங்கை அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

மனித உரிமை மீறல்களை கையாள்வதில் இலங்கை அரசு தனது செயற்பாடுகளை மேம்படுத்த விரும்புவதாக மனித உரிமைகளுக்கான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா அகியவற்றின் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட இரண்டு அறிக்கைகளும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களை இலங்கை அரசு கையாளும் விதம் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தன.

இலங்கையில் உள்நாட்டுப்போர் நடந்தபோதும் சரி, அது கடந்த மேமாதம் முடிவுக்கு வந்த பிறகும் சரி தனது மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விமர்சனங்களை அந்நாட்டின் அரசாங்கம் கடுமையாக மறுத்தே வந்திருந்தது.

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆய்வு செய்வதற்கு இலங்கைக்கு வந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆய்வாளர்கள் இலங்கைக்குள் வரக்கூடாது என்று எதிர்ப்பு காட்டிய இலங்கை அரசாங்க அமைச்சர் ஒருவர், இலங்கைக்குள் மனித உரிமை மீறல்கள் என்கிற பிரச்சினையே இல்லை என்று முன்னர் வாதிட்டிருந்தார்.

இந்த வழக்கத்துக்கு மாறாக அமைச்சர் சமரசிங்கவின் தற்போதைய கருத்து அமைந்துள்ளது.

மேம்படுத்தப்படவேண்டியவை என்று கருதப்படும் விடயங்கள் தொடர்பில் தாம் ஏற்கெனவே புலனாய்வு செய்து வருவதாகவும், அந்த விடயங்களை உள்ளடக்கிய தேசிய செயல்திட்டம் ஒன்று வடிவமைக்கப்படும் என்றும் அமைச்சர் விபரித்துள்ளார்.

சித்திரவதை, ஆட்கள் கடத்தல், சட்டத்துக்கு அப்பாற்பட்ட ஆட்கொலைகள், பெண்கள் மற்றும் சிறார்களின் பாதுகாப்பு போன்ற பல விடயங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் இந்த தேசிய செயல்திட்டத்தில் இடம்பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.



--------------------------------------------------------------------------------


மீளக் குடியமர்வதற்காக ஆயிரம் பேர் கிளிநொச்சி மாவட்டத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்


அரசாங்க அதிபர் எமில்டா சுகுமார்
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் மீளக்குடியமர்வதற்காக ஆயிரம் பேர் இன்று அந்தப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அரசாங்க அதிபர் எமில்டா சுகுமார் தெரிவித்திருக்கின்றார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக் கரையோரப் பிரதேசங்களாகிய நாச்சிக்குடா, முழங்காவில், ஜெயபுரம் தெற்கு ஜெயபுரம் வடக்கு ஆகிய பகுதிகளில் இவர்கள் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இடைத்தங்கல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டு, கண்ணிவெடிகள் பற்றிய விழிப்புணர்வு அறிவூட்டப்பட்டதன் பின்னர் இம்மக்கள் உடனடியாக அவர்களது சொந்தக் காணிகளுக்குச் சென்று குடியேறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபராகப் பணியாற்றி வந்த திருமதி ரூபவதி கேதீஸ்வரன் அவர்கள், கிளிநொச்சி மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.



--------------------------------------------------------------------------------


இலங்கைக்கு கண்ணிவெடி அகற்றும் இயந்திரங்களை வழங்கியுள்ளது ஐ.நா.அகதிகள் நிறுவனம்


கண்ணிவெடி அகற்றும் இயந்திரம்
இலங்கையின் வடக்கே முன்னாள் யுத்தப் பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் பயன்படுத்துவதற்காக 5 புதிய இயந்திரங்களை ஐ.நா. அகதிகள் நிறுவனம் இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளது.

ஐ.நா. மன்ற நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் வெளியூர் தன்னார்வ நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசாங்கம் கண்ணி வெடி அகற்றும் பணிகளை மேற்கொண்டுவருகிறது.

ஐ.நா. அகதிகள் நிறுவனம் வழங்கும் புதிய இயந்திரங்கள் இலங்கை அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும் என லண்டனிலுள்ள ஐ.நா. அகதிகள் நிறுவனத்தின் அயல் விவகார மூத்த அதிகாரி பீட்டர் க்ரெஸ்லர் தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.



--------------------------------------------------------------------------------


நாகா பிரிவினைவாதிகள் மீது பர்மிய படையினர் தாக்குதல்

பர்மாவின் வடகிழக்குப் பகுதியில் சகாய்ங் பிராந்தியத்தில் உள்ள நாகா பிரிவினைவாதிகளின் மையங்கள் மீது பர்மிய துருப்புக்கள் அதிரடித் தாக்குதலைத் துவக்கியிருப்பதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தத் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியாவுக்குள் ஊடுருவ முயலும் பிரிவினைவாதிகளைப் பிடிக்க, பர்மாவில் நாகா பிரிவினைவாதிகளின் மையத்து்ககு எதிர்பகுதியில் உள்ள மலைப்பகுதிக்கு இந்தியப் படைகள் அனுப்பப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தியாவின் வடகிழக்கில் உள்ள நாகாலாந்து மாநிலத்தில் உள்ள மனியக்ஸா கிராமத்துக்கு எதிரே, என்.எஸ்.சி.என். எனப்படும் தேசிய நாகலாந்து சோஷலிஸ கவுன்சிலின் கப்லாங் பிரிவின் இரண்டாவது பட்டாலியனுக்கான தலைமையகம் அமைந்துள்ளது.

அந்த முகாம்கள் மீதான தாக்குதல் நடவடிக்கையில், பர்மியத் துருப்புக்கள் ஈடுபட்டுள்ளன. ஆனால், அதுபற்றி பர்மிய ராணுவ அதிகாரிகளோ ராஜாங்க அதிகாரிகளோ எந்தத் தகவல்களையும் தர விரும்பவில்லை.

ஆனால் நாகா முகாம்கள் மீது பர்மியத் துருப்புக்கள் தாக்குதல் நடத்துவதைக் காணமுடிந்ததாக மனியக்ஸா கிராமவாசிகள் தெரிவிக்கிறார்கள்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter