>> Tuesday, November 10, 2009

பெர்லின் சுவர் வீழ்ந்து இருபது வருடங்கள் பூர்த்தியாவதை ஜெர்மனி கொண்டாடியுள்ளது


ஜெர்மன் தலைவி அங்கேலா மெர்க்கெலுடன், முன்னாள் சோவியத் தலைவர் கோர்பசேவ் மற்றும் முன்னாள் போலந்து அதிபர் லெக் வலேசா

பெர்லின் சுவர் வீழ்ந்ததன் இருபது வருட நிறைவைக் குறிக்கும் வகையிலான வைபவத்தில் கலந்துகொண்ட ஜெர்மனிய ஆட்சித் தலைவரான அங்கேலா மெர்க்கல் அவர்கள், கிழக்கு மற்றும் மேற்கு ஜேர்மனியை இணைக்கும் பாலம் ஒன்றின் மூலம் வைபவரீதியாக நடந்துவந்தார்.

இந்தப் பாலம்தான் பெர்லின் சுவர் உடைக்கப்பட்டபோது முதன் முதலில் திறக்கப்பட்ட எல்லைக் கடவை மையம் ஆகும்.

முன்னாள் சோவியத் தலைவரான மிக்கைல் கோர்பசேவ், கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிஸ ஆட்சிக்கு எதிராக முதல் முதலாக வெற்றிகரமாக சவால் விடுத்த போலந்து தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவரும், பின்னாளில் அதிபராக வந்தவருமான லெக் வலேஸா ஆகியோர் இந்த வைபவத்தில் மெர்க்கெலோடு நடந்து வந்தார்கள்.

ஜெர்மனியின் கிழக்குப் பகுதி போதிய பொருளாதார வளர்ச்சியைப் பெறாத நிலையில், ஜெர்மனியின் இணைவு இன்னமும் முழுமை பெறவில்லை என கிழக்கு ஜெர்மனியில் வளர்ந்தவரான மெர்க்கெல் கூறியுள்ளார்.



--------------------------------------------------------------------------------


சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராக கூட்டாக நடவடிக்கை எடுக்க ஆஸ்திரேலியாவுடன் இலங்கை ஒப்பந்தம்

இலங்கையிலிருந்து மக்கள் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்படுகின்ற பிரச்சினையை சமாளிப்பதில் கூட்டாக செயல்படுவது என்பதற்கு இலங்கையும் ஆஸ்திரேலியாவும் உடன்பட்டுள்ளன.

கொழும்பு வந்துள்ள ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீஃபன் ஸ்மித்துக்கும் இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கும் இடையில் நடந்த பேச்சுக்களை அடுத்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இலங்கை அகதிகள் அடங்கிய கப்பலொன்று ஆஸ்திரேலியா செல்லும் வழியில்இந்தோனேஷியாவில் கடந்த மாதம் வழிமறித்து தடுத்துவைக்கப்பட்டுள்ள விவகாரம் தீர்க்கப்படாத நிலையில் இந்த ஒப்பந்தம் வருகின்றது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்துள்ள நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு நோக்கி வரும் தமிழ் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆஸ்திரேலியா கூறுகிறது.



--------------------------------------------------------------------------------


நீதிபதி தினகரனுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைகிறது


நீதிபதி பி.டி.தினகரன்
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.டி.தினகரன், தமிழ்நாட்டில் இருக்கும் அவரது சொந்த ஊரில் அரசு நிலத்தை சட்டவிரோதாமாக கைப்பற்றியதாகக் கூறப்படும் புகாரில் சிக்கியிருப்பதால் அவர் தமது பதவியில் நீடிக்கக்கூடாது என்று கோரி, கர்நாடக உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களில் ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களில் சிலர், தினகரன் வழக்கை விசாரித்துக்கொண்டிருந்த நீதிமன்றத்திற்குள் புகுந்து அவருக்கு எதிரான கோஷங்களை எழுப்பி, அவரது பணிகளுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தாம் விசாரித்துக்கொண்டிருந்த வழக்கை பாதியில் இடைநிறுத்திவிட்டு, நீதிபதி தினகரன் நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார்.

வழக்கறிஞர்களின் இந்த போராட்டத்தை படம்பிடித்துக்கொண்டிருந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் உள்ளிட்ட சில ஊடகவியலாளர்கள் வழக்கறிஞர்களால் தாக்கப்பட்டதாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இன்று ஒரு ஆங்கில நாளேட்டிற்கு அளித்துள்ள பேட்டியில் நீதிபதி தினகரன் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றும் தான் எந்த நிலத்தையும் ஆக்கிரமிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

திருவள்ளூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்டுகள் கைது


திருவள்ளூரில் நடந்த ஆர்ப்பாட்டம்

கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன் சென்னையை அடுத்த திருவள்ளூரில் அரசு நிலங்களை ஆக்கிரமித்திருப்பதாகக் குற்றஞ்சாட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், இன்று திருவள்ளூரில் நில மீட்புப் போராட்டம் நடத்த முயன்றபோது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மார்க்ஸிஸ்ட் கட்சியின் விவசாயிகள் அமைப்பான அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.வரதராஜன் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளனர்.

இந்தப் போராட்டத்தை மனதில் கொண்டு மாவட்ட நிர்வாகம் ஞாயிறன்றே அப்பகுதியில் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.

போராட்டம் குறித்து விவாதிக்கவென அழைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சிலர் ஞாயிறு மாலையே கைதுசெய்யப்பட்டிருந்தனர்.



--------------------------------------------------------------------------------


காங்கிரஸில் சேர்ந்தார் திருநாவுக்கரசர்


திருநாவுக்கரசர்
பாரதீய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான தமிழ்நாட்டைச் சேர்ந்த திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார்.

மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவியையும் அவர் இராஜினாமா செய்துள்ளார்.

பாஜகவின் தேசியச் செயலர் பொறுப்பிலிருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையிலிருந்தும் அவர் விலகியுள்ளார்.

கடந்த 2002ல் திருநாவுக்கரசர் ஆரம்பித்திருந்த எம்.ஜி.ஆர்.-அண்ணா திமுக கட்சி பாரதீய ஜனதாவில் இணைந்திருந்தது.



^^

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter