>> Friday, November 13, 2009
ஜெனரல் சரத் பொன்சேகா இராஜினாமா
இலங்கையின் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகா தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டதாக அறிவித்திருக்கிறார்.
தனது இராஜினாமா கடிதத்தை இலங்கை அரசாங்கத்துக்கு தான் வழங்கிவிட்டதாக அவர் தமிழோசைக்குத் தெரிவித்தார்.
இந்த மாத இறுதியுடன் தான் பதவி விலகப்போவதாக தெரிவித்த பொன்சேகா அவர்கள், தனது இராஜினாமாவுக்கான பல காரணங்களை, அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும், இருந்தபோதிலும், தற்போதைக்கு அவற்றை வெளியிட முடியாது என்றும் கூறினார்.
இந்த வருட முற்பகுதியில் முடிவுக்கு வந்த விடுதலைப்புலிகளுக்கு எதிரான போருக்கு இலங்கை இராணுவத்துக்கு தலைமை தாங்கியவர் இவராவார்.
சக படையதிகாரிகளுடன் சரத் பொன்சேகா(ஆவணப்படம்)
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இராணுவத் தலைமையகத்தை விட்டு வெளியேறும் பாதையில் கரும்புலித் தாக்குதலில் உயிர்தப்பிய ஜெனரல் பொன்சேகா, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை தலைமையேற்று நடத்தினார். இராணுவ ரீதியாக புலிகளை முறியடிக்கவே முடியாது என்ற கருத்தை பொய்யாக்கினார்.
சில மாதங்களுக்கு முன்னர் இராணுவ தளபதியாக இருந்து வெறுமனே அலங்கார பதவியாக மாத்திரம் கருதப்படும் தற்போதைய பதவிக்கு அவர் பதவி உயர்வு செய்யப்பட்டதை அடுத்து அவருக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக செய்திகள் வந்துகொண்டிருந்தன.
சமீபத்தில் ஒரு நிகழ்சியில் பேசுகையில் இலங்கையில் புலிகளுக்கு எதிரான வெற்றியில் இராணுவம் ஆற்றிய பங்களிப்பை அதிகாரத்தில் இருப்பவர்கள் மறந்து வருகின்றனர் என்ற அவர் பகிரங்கமாகவே குற்றம்சாட்டியிருந்தார். விடுதலைப் புலிகளை ஒழித்ததை தனது பெரிய சாதனையாக அவர் கூறினார்.
அடுத்த வருடம் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்ற ஜனாதிபதி தேர்தலில் இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக இவர் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
--------------------------------------------------------------------------------
'இறுதிக்கட்டத்தில் துணுக்காய் மீள்குடியேற்றம்'- முல்லை அரச அதிபர்
ஆஸ்திரேலியாவின் விசேட தூதுவரை வரவேற்கும் அதிகாரிகள்
இலங்கையின் வடக்கே போரினால் இடம்பெயர்ந்து மனிக்பாம் நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருப்பதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்திருக்கின்றார்.
இது வரையில் இந்தப் பகுதியில் 6000 பேர் மீண்டும் குடியமர்த்தப்பட்டிருக்கின்றார்கள்.
அதேவேளை, துணுக்காய் பிரதேசத்தில் மீளக்குடியமர்ந்துள்ள மக்களின் போக்குவரத்து, விவசாயம், கல்வி ஆகிய துறைகளில் வசதிகளை மேம்படுத்துவதற்காக துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரிசிறி அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.
வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் துணுக்காய் பிரதேசத்தின் விவசாய அபிவிருத்திக்கென 14 மில்லியன் ரூபாவும், இந்தப் பகுதியில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள 19 பாடசாலைகளைப் புனரமைத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக 39 மில்லியன் ரூபாவும் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் ஆளுனர் சந்திரசிறி அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.
இதற்கிடையில் இலங்கை வந்துள்ள ஆஸ்திரேலிய விசேட தூதுவர் ஜோன் மெக்கார்த்தி அவர்கள் நேற்று துணுக்காய் பிரதேசத்திற்குச் சென்று அங்கு இடம்பெற்று வருகின்ற மீள்குடியேற்ற நடவடிக்கைகளை நேரடியாகப் பார்வையிட்டிருக்கின்றார்.
முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார், கிளிநொச்சி மாவட்ட ஆயுதப்படைகளி்ன் தளபதி மேஜர் ஜெனரல் அத்துல ஜயவர்தன ஆகியோரை ஆஸ்திரேலியாவின் விசேட தூதுவர் சந்தித்து, அங்கு இடம்பெற்று வருகின்ற அபிவிருத்தி பணிகள் மீள்குடியேற்றச் செயற்பாடுகள் என்பன குறித்து விரிவாகக் கேட்டறிந்துள்ளார்.
--------------------------------------------------------------------------------
இலங்கை அகதி முகாம்களுக்கு தமிழக அரசு 100 கோடி ஒதுக்கவுள்ளதாக அறிவிப்பு
தமிழகத்தில் இலங்கை அகதிகள்
தமிழக அரசு மாநிலத்திலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம்களை மேம்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்குவதாக இன்று அறிவித்திருக்கிறது.
கடந்த சில வாரங்களாகவே முதல்வர் கருணாநிதி அகதி முகாம்களின் நிலைமையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தனது அமைச்சர்களை முகாம்களைப் பார்வையிட்டு வருமாறு பணித்திருந்தார். அவ்வமைச்சர்களின் அறிக்கைகளை விவாதிப்பதற்காகவே இன்று அமைச்சரவைக் கூட்டத்தையும் கூட்டியிருந்தார்.
பின்னர் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், முகாம்களிலுள்ள 5922 குடியிருப்புக்களை செப்பனிடவும், சாலை, கழிப்பிடம், குடிநீர், கழிவுநீர் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு, முகாம்வாசிகள் அனைவருக்கும் தமிழகத்திலுள்ள இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படுவதுபோல் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
0 comments:
Post a Comment