>> Friday, November 20, 2009
இலங்கையில் ஐ.நா. அகதிகள் நிறுவனத் தலைவர்
இலங்கையின் வடக்கே அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களில் இருந்தவர்களில் பாதிப் பேர் தற்போது முகாம்களை விட்டுச் சென்றுவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித நேயப் பணிகளுக்கான தலைமை அதிகாரி ஜான் ஹோம்ஸ் கூறியுள்ளார்.
இந்த முகாம்களுக்கு விஜயம் செய்து திரும்பியுள்ள ஜான் ஹோம்ஸ் இது விடயம் தொடர்பாக இலங்கை அரசு அளித்து வரும் விபரங்களை உறுதிப்படுத்தினார்.
ஒரு லட்சத்து முப்பத்தி ஐயாயிரம் பேருக்கும் குறைவானர்கள் தான் அங்கு எஞ்சியிருப்பதாக ஜான் ஹோம்ஸ் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் பாதுகாப்புடன் மீளத் திரும்ப வேண்டும் என்பதையும், அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதையும் இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் ஹோம்ஸ் கூறியுள்ளார்.
--------------------------------------------------------------------------------
கரும்பு கொள்முதல் விலையை மாற்றியமைத்த இந்திய அரசின் சட்டத்துக்கு எதிர்ப்பு
இந்திய மத்திய அரசு கரும்புக்கு நியாய ஆதரவு விலை என்று சுமார் 1200 ரூபாயை அறிவித்து அண்மையில் பிறப்பித்துள்ள அவசர சட்டத்துக்கு எதிராக தலைநகர் டில்லியில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்திய நாடாளுமன்றத்தின் மாரிக்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் இது குறித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன.
அரசு பிறப்பித்துள்ள இந்த அவசர சட்டத்தை எதிர்ப்பதற்கான காரணங்கள் குறித்து, அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு என்ற அமைப்பின் தமிழகப் பிரிவின் துணைத்தலைவர் கே.வி.ராஜ்குமார் தமிழோசையில் தெரிவித்த கருத்துகளை நேயர்கள் நிகழ்ச்சியில் கேட்கலாம்.
கரும்பு விலை நிர்ணயம் தொடர்பில் தி.மு.க.வின் நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவிக்கும் கருத்துகளையும் நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
--------------------------------------------------------------------------------
வங்கதேசத் முன்னாள் தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படுகொலைக்கு காரணமானவர்களின் மேல்முறையீடு நிராகரிப்பு
ஷேக் முஜிபுர் ரஹ்மான்
வங்கதேசத்தின் சுதந்திரப் போராட்டத் தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மானும் அவரது குடும்பத்தினர் பலரும் 1975ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்த முன்னாள் இராணுவ அதிகாரிகள் ஐந்து பேர், தங்கள் மீதான கீழ்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து செய்திருந்த மேல்முறையீடு தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேல்முறையீடு நிராகரிக்கப்பட்ட செய்தியை அறிந்து வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா உணர்ச்சி பொங்கக் கண்கலங்கினார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மூத்தப் புதல்வியான ஷேக் ஹசீனாதான், தனது குடும்பம் மொத்தமும் படுகொலை செய்யப்பட்டபோது உயிர் தப்பியிருந்த ஒரே நபர் ஆவார்.
தனது பெற்றோர், உடன்பிறந்தோர் மற்றும் வேறு இருபது பேரின் படுகொலைக்குக் காரணமானவர்கள் தண்டனைக்குள்ளாவதை உறுதிசெய்ய வேண்டும் என்று அந்த நாள் முதலே ஷேக் ஹசீனா தீர்மானமாக இருந்துவந்தார்.
படுகொலைக்குக் காரணமான அப்போது இளம் இராணுவ அதிகாரிகளாக இருந்த நபர்களுக்கு வங்கதேசத்தின் முந்தைய அரசாங்கங்கள் அரண்களாக இருந்து அவர்கள் மீதான நடவடிக்கைகளுக்கு தடையாய் இருந்தன.
1996ஆம் ஆண்டு ஷேக் ஹசீனா முதல் தடவையாக பிரதமராக வந்த பின்னர்தான் இந்நபர்களில் சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்தப் படுகொலையில் சம்பந்தப்பட்டுள்ளவர்களாகக் கருதப்படும் வேறு ஆறு பேர் இன்னும் வெளிநாடுகளில் பதுங்கியுள்ளனர்.
ஆனால் கைதுசெய்யப்பட்டு வங்கதேசச் சிறைகளில் உள்ளவர்கள் தற்போது மரண தண்டனையை எதிர்கொள்கின்றனர்.
குடியரசுத் தலைவர் கருணை அடிப்படையில் மரண தண்டனையை ரத்து செய்யாத பட்சத்தில், ஒரு மாதத்துக்குள்ளாகவேகூட இவர்கள் தூக்கிலிடப்படலாம்.
--------------------------------------------------------------------------------
டெஸ்ட் கிரிக்கெட்: ஆறாம் விக்கெட்டுக்கான ரன் குவிப்பில் இலங்கை வீரர்கள் உலக சாதனை
மஹேல ஜெயவர்த்தன - பிரசன்னா ஜெயவர்த்தன ஜோடி
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மஹேல ஜெயவர்த்தன-பிரசன்னா ஜெயவர்த்தன ஜோடி மட்டைவீச்சில் ஒரு புதிய உலக சாதனை படைத்துள்ளது.
இந்திய அணிக்கு எதிராக அகமதாபாத்தில் இலங்கை அணி ஆடிவரும் டெஸ்ட் ஆட்டத்தில் இந்த ஜோடி குவித்துள்ள 351 ரன்கள்தான் டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் ஆறாவது விக்கெட்டுக்காக குவிக்கப்பட்ட மிக அதிக ரன்கள் ஆகும்.
72 ஆண்டுகளுக்கு முன் 1937ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேனும் ஜேக் ஃபிங்கிள்டன் இங்கிலாந்து அணிக்கு எதிராக எடுத்திருந்த 346 ரன்கள்தான் இதற்கு முன் ஆறாம் விக்கெட்டுக்காக எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இருந்துவந்தது.
மேலும் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் எடுத்துள்ள 760 ரன்கள்தான் இந்திய மண்ணில் நடந்துள்ள அதிகபட்ச இன்னிங்ஸ் ரன்குவிப்பு ஆகும்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அணி ஒரு இன்னிங்ஸில் எடுத்த அதிகபட்ச ரன்களுக்கான சாதனையைப் பெற்றிருப்பதும் இலங்கை அணிதான். 1997ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக கொழும்பில் நடந்த டெஸ்ட் ஆட்டத்தில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 952 ரன்களைக் குவித்திருந்தது.
0 comments:
Post a Comment