>> Tuesday, November 24, 2009
இலங்கையில் முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல்களை இன்னும் சில மாதங்களுக்குள் முன்கூட்டியே நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முடிவுசெய்திருப்பதாக அந்நாட்டின் அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஜனாதிபதி ராஜபக்ஷவின் தற்பொதைய ஆறுவருட பதவிக்காலம் 2012 நவம்பரில்தான் நிறைவுபெறுகிறது என்றாலும், மக்களிடம் இருந்து புதியதோர் ஆணையைப் பெற ராஜபக்ஷ விரும்புவதாக இலங்கை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.
இந்த ஆண்டில் முன்னதாக விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் பெற்ற இராணுவ வெற்றியின் பலனைப் பெறுவதற்காக ராஜபக்ஷ முன்கூட்டியே தேர்தலை நடத்த விரும்புகிறார் என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
வரும் ஜனவரி மாத நடுப் பகுதியில் தேர்தல் நடக்கலாம் என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு தலைமையேற்று வெற்றித் தேடித்தந்த முன்னாள் இராணுவத் தளபதி ஜனரல் சரத் ஃபொன்சேகா, ராஜபக்ஷவை எதிர்த்து ஜனாதிபதிப் பதவிக்கு போட்டியிடலாம் என்று ஊகங்ககள் நிலவும் நிலையில், தற்போதைய அறிவிப்பு வெளிவந்துள்ளது.
--------------------------------------------------------------------------------
அயோத்தி மசூதி இடிப்பு: விசாரணை ஆவணம் கசிந்தது தொடர்பில் இந்திய நாடாளுமன்றத்தில் அமளி
எல்.கே. அத்வானி
அயோத்தியில் 17 வருடங்களுக்கு முன்னர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரத்தில் இந்து தேசியவாதக் கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களை சம்பந்தப்படுத்திக் குற்றஞ்சாட்டும் ஆவணம் ஒன்று கசிந்தது குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தால் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்செயல்களில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் பலியாயினர்.
அயோத்தியின் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்த மூல அறிக்கை ஒன்று ஜூன் மாதத்தில் அரசாங்கத்துக்கு கையளிக்கப்பட்டது.
ஆனால் அதன் உள்ளடக்கம் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை.
இந்திய ஊடகங்களுக்கு கசிந்த அறிக்கையின் படி பாரதியஜனதாக் கட்சியின் தலைவரான எல்.கே. அத்வானி மற்றும் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரது பெயரை இந்த அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது.
--------------------------------------------------------------------------------
ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் இலங்கை மற்றும் ஆப்கானிய அகதிகள் இடையிலான மோதல்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்
கிறிஸ்துமஸ் தீவைக் காட்டும் வரைபடம்
ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவு குடிவரவு தடுப்பு முகாமில் ஏற்பட்ட ஓர் அடிதடிச் சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர்கள் மற்றும் ஆப்கானியர்களாக கிட்டத்தட்ட 150 பேர் இடையில் ஏற்பட்ட மோதல்களில் பலர் காயமடைந்துள்ளனர்.
மரக்கிளைகளாலும், தும்புத்தடிகளாலும், பிலியர்ட்ஸ் ஆடும் குச்சிகளாலும் போட்டிக் குழுக்கள் ஒன்றை ஒன்று தாக்கிக்கொண்டன.
37 பேருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது. அவர்களில் எலும்பு முறிவு ஏற்பட்ட மூவர் மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரான பேர்த்துக்கு மேலதிக சிகிச்சைக்காக வான் மார்க்கமாக கொண்டு செல்லப்பட்டனர்.
நிலைமையை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு கிறிஸ்மஸ் தீவுகளில் உள்ள அதிகாரிகளுக்கு அரை மணிநேரம் பிடித்துள்ளது.
இச்சம்பவம் பற்றிய மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
--------------------------------------------------------------------------------
புதிய மீன்பிடி விதிகளுக்கு எதிராக தமிழகத் தலைவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.
இந்தியாவின் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்டிருக்கும் மீன்பிடி விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறை மசோதா, மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்வதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கிறது என்பது குறித்து தமிழக மீனவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்திவரும் நிலையில், தமிழக முதல்வர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோர் இவ்விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்த மசோதா மீனவர் நலனுக்கு எதிராக அமையக்கூடும் என்று முதல்வர் கருணாநிதி அச்சம் தெரிவித்துள்ளார்.
மீனவர்களைக் கலந்தாலோசித்து உரிய மாற்றங்களைச் செய்த பின்னரே இந்த மசோதா முன்னெடுக்கப்பட வேண்டும் என மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவாருக்கு கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்போது அதனை அ.தி.மு.க. எதிர்க்கும் என்று அக்கட்சியின் தலைவர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இலங்கைக் கடற்படையின் தாக்குதல்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் நிலையை இப்புதிய சட்டம் மேலும் மோசமாக்கும் என்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment