யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையே நேரடி பேருந்து சேவை இன்று தொடங்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் இன்று, புதன்கிழமை, காலை நடந்தஒரு வைபவத்த்தில் இந்த நேரடி சேவை தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினசரி மூன்று பேருந்துகள் , ஏ-9 வீதியூடாக இயக்கப்படுகின்றன என்று இலங்கைப் போக்குவரத்து சபையின் யாழ்ப்பாண பணிமனை பொதுமேலாளர் கணேசபிள்ளை தமிழோசையிடம் தெரிவித்தார். இவற்றில் இரண்டு அரைச்சொகுசு பேருந்துகள், மற்றொன்று சாதாரண பேருந்து.
யாழ் பேருந்து நிலையம் ( ஆவணப்படம்)
யாழ்ப்பாணத்துக்கும் நாட்டின் தென்பகுதிகளுக்கும் இடையே தரைவழிப் போக்குவரத்து, யுத்த காலத்தில் தடைப்பட்டிருந்தது. சமீபத்தில் யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையே பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டபோது, இதில் பயணிக்கும் பயணிகள் , வவுனியா அருகே உள்ள மதவாச்சி சோதனைச்சாவடி வரையிலும் ஒரு பேருந்தில் சென்று, பிறகு அங்கிருந்து சோதனைச்சாவடியைத் தாண்டி , வேறு ஒரு பேருந்தில் அல்லது இரயில் வண்டிகள் மூலமாக தங்களது பயணத்தைத் தொடர வேண்டிய நிலை இருந்து வந்தது.
இந்த நிலை இப்போது தொடங்கப்பட்டுள்ள நேரடிப் போக்குவரத்து மூலம் மாறி, பயணிகள் நாட்டின் வடக்கிலிருந்து கொழும்புக்கு தடையில்லாமல் நேரடியாக பயணிக்கக் கூடிய வசதி ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறினர்.
ஆனாலும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்ல விரும்பும் பயணிகள், வழமை போல அவர்களது பகுதிகளில் இருக்கும் ராணுவ அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின்னரே இந்தப் பேருந்துகளில் செல்ல முடியும் என்று கணேசபிள்ளை தெரிவித்தார்.
அதே போல, யாழ்ப்பாண மக்கள் மட்டுமே இந்தப் பேருந்துச் சேவையைப் பயன்படுத்த முடியும் என்றும், கொழும்பிலிருந்து மக்கள் யாழ்ப்பாணம் செல்ல இந்த சேவையைப் பயன்படுத்த தற்போது முடியாது என்றும் அவர் கூறினார்.
இதே போல யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு விமானம் அல்லது கப்பல் மூலம் செல்பவர்கள் மீண்டும் அவர்கள் பயணித்த அதே வழியிலேயே ( அதாவது விமானத்திலோ அல்லது கப்பல் மூலமாகவோதான்) திரும்ப வேண்டும் என்ற தற்போதைய நடைமுறையும் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் கணேச பிள்ளை தெரிவித்தார்.
--------------------------------------------------------------------------------
'யாழ்ப்பாணத்துக்கு வன்னிப்போரில் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் முடிவடைந்தது'
இலங்கையில் நடந்து முடிந்த போரில் இடம்பெயர்ந்து , முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த மக்களில், யாழ் குடா நாட்டைச் சேர்ந்தவர்கள் சுமார் 48000 பேர், அங்கு மீண்டும் அனுப்பப்படுவது முடிவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த நவம்பர் 7ம் தேதியுடன் இந்த மீள்குடியேற்றம் முடிவடைந்ததாக யாழ் அதிகாரிகளை மேற்கோள்காட்டி உள்ளூர் ஊடகவியலாளர்கள் கூறுகிறார்கள்.
ஆயினும், இந்த மக்களுக்கு இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ள உதவும் வகையில் அறிவிக்கப்பட்ட நிதி உதவி தரப்படுவதில் இன்னும் சிக்கல்கள் நிலவுவதாகத் தெரிகிறது. பல குடும்பங்களுக்கு தரப்படவேண்டிய நிதி உதவியில் ஒருபகுதியே முன்பணமாகத் தரப்பட்டுள்ளது என்றும் பல குடும்பங்களுக்கு இன்னும் எதுவுமே தரப்படவில்லை என்றும் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
இதன் காரணமாக யாழ் குடா நாட்டுக்கு திரும்பி அனுப்பப் பட்டவர்களில் பலர் வறுமையில் வாடுவதாகவும், இரண்டு தற்கொலை சம்பவங்கள் கூட நடந்துள்ளன என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இதே போல, யாழ் குடா நாட்டுக்கு திரும்ப அனுப்பப்பட்ட மாணவர்கள் பலருக்கு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதுவது சிரமமாக இருக்கும் என்பதால் டிசம்பரில் நடக்கவிருக்கும் இந்தத் தேர்வை, பிப்ரவரிக்கு ஒத்திவைக்குமாறு, யாழ்ப்பாண தன்னார்வ குழுக்களின் ஒன்றியம் கூறியுள்ளது.
--------------------------------------------------------------------------------
வன்னி முகாம்களில் உள்ள மக்களை சந்திக்க எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அனுமதி
'முகாம்களுக்குச் செல்ல எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி'-ரிஷாத்
இலங்கையின் வடக்கே வவுனியாப் பகுதியில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் இருக்கும் மக்களை சந்திக்கும் முகமாக எதிர்கட்சியின் உறுப்பினர்கள் உட்பட மீள்குடியேற்ற அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ள 32 பேர் அங்கு செலவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
அந்தக் குழுவில் வன்னிப் பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட நாடாளுமன்றத்தில் இருக்கின்ற அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் இடம் பெற்றுள்ளதாகவும் அவர் கூறுகிறார். அவர்கள் எதிர்வரும் செவ்வாய் அல்லது புதன்கிழமை அங்கு செல்லவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறுகிறார்.
எதிர்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனியாக வவுனியா முகாம்களுக்கு சென்று வர அனுமதி கோரினால் அது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற்று அவர்கள் அங்கு சென்று வருவதற்கு வழி செய்யப்படும் என்றும் அமைச்சர் ரிஷாத் பதியதீன் தெரிவிக்கிறார்.
மீள்குடியேற்ற அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் அங்கு சென்று வந்த பிறகு அவர்கள் தெரிவிக்கும் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை அரசு ஆக்கபூர்வமாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் எனவும் இலங்கையின் மீள்குடியேற்ற அமைச்சர் கூறுகிறார்.
--------------------------------------------------------------------------------
புரதச்சத்து குறைந்த குழந்தைகள் தெற்காசியாவில்தான் அதிகம் என்கிறது யுனிசெப்
உலகம் முழுவதும் புரதச் சத்துக் குறைவாக உள்ள, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பெரும்பான்மையானவர்கள், அதாவது, 83 மில்லியன் குழந்தைகள், தெற்காசியாவில் உள்ளதாக, இன்று வெளியிடப்பட்ட யுனிசெஃப் அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
சத்துக்குறைவாக உள்ள குழந்தைகள் அதிகமாக, 24 நாடுகளில் உள்ளனர். அதில் அதிகபட்ச குழந்தைகளைக் கொண்ட முதல் ஐந்து நாடுகள் தெற்காசியாவில் உள்ளன. ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான், இந்தியா மற்றும் நேபாளம் ஆகியவைதான் அந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. அதாவது, இந்த நாடுகளில், 40 சதத்துக்கும் அதிகமான குழந்தைகள் அவ்வாறு உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில், 59 சதம் அல்லது 2.9 மில்லியன், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நேபாளத்தில் 49 சதம் அல்லது 1.75 மில்லியன், இந்தியாவில் 48 சதம் அல்லது 61 மில்லியன், வங்கதேசத்தில் 7.2 மில்லியன், பாகிஸ்தானில் 9.9 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புரதச்சத்துக் குறைவாக உள்ள குழந்தைகள் பலவீனமாகவும், நோய் எதிர்ப்புத் திறன் குறைந்தவர்களாகவும் உள்ளதாக யுனிசெட் அமைப்பின் செயல் இயக்குநர் ஆன் எம்.வெமனென் தெரிவித்துள்ளார்.
தாயின் கர்ப்பத்திலிருந்து, ஒரு குழந்தையின் இரண்டு ஆண்டுகள் வரை, புரதச்சத்து மிகவும் அவசியம். இந்தக் காலகட்டத்தில் ஏற்படும் சத்துப் பற்றாக்குறை, அதன் ஆயுட்காலம் முழுவதும் நோயை எதிர்க்கும் திறன் குறைந்துவிடுவதுடன், சமூக மற்றும் மன ரீதியிலான திறமைகள் குறைந்தவர்களாகவும் இருப்பார்கள் என அறிக்கை கூறுகிறது.
தெற்காசியாவைப் பொருத்தவரை, பல நாடுகளில் பொருளாதார வளர்ச்சி விகிதம் ஆரோக்கியமானதாக இருந்தாலும், குழந்தைகள் புரதச்சத்துக் குறைபாடுடன் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகமாக இருப்பதாக, யுனிசெஃப் அமைப்பின் தெற்காசியப் பிராந்திய இயக்குநர் டேனியல் டூலே தெரிவித்துள்ளார்.
கர்ப்பவதிகள் மற்றும் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு புரதச்சத்துள்ள உணவு வகைகளை வழங்குவது நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ள டேனியல் டூலே, இரண்டு வயதுக்கு மேட்பட்ட குழந்தைகள் மீது தேவைக்கு அதிகமாக கவனம் செலுத்தப்படுகிறது என்றும், அதனால் தேவையான பலன் கிடைக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
புரதச்சத்துக் குறைவாக உள்ள குழந்தைகள் கல்வி கட்கும் திறன் குறைந்தவர்களாகவும், மெதுவாக செயல்படக்கூடியவர்களாகவும், வயிற்றுப் போக்கு, அம்மை, நிமோனியா, மலேரியா, எச்ஐவி எய்ட்ஸ் போன்ற நோய்களால் எளிதில் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயம் உடையவர்களாகவும் உள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.
குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம், குழந்தை இறப்பு விகிதத்தை பெருமளவு குறைப்பதுடன், வளரும் நாடுகளில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தை 12 முதல் 15 சதம் வரை குறைக்க முடியும் என்றும் ஆய்வு ெதரிவிக்கிறது.
தெற்காசியா முழுவதும் பின்பற்றப்படும் ஆபத்தான கலாசார நடைமுறை, குழந்தைத் திருமணம். அதனால், பெண்கள் இளம் வயதிலேயே குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். பிரசவம் எளிதாக இருக்க வேண்டும் என்று கூறி, கர்ப்ப காலத்தில் குறைவாக உண்ணுமாறு அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். அதனால், எடை குறைவான குழந்தைகள் பிறக்கின்றன. அந்தக் குழந்தைகள் உயிருடன் இருந்தாலும், ஆரோக்கியமாக இருப்பதில்லை. மூன்றில் ஒன்றுக்கும் குறைவான பெண்கள்தான், குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்கிறார்கள். சிலர் மூன்று நாட்கள் கூட எடுத்துக் கொள்கிறார்கள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், தெற்காசியாவில், உறுதியான தலைமை தேவை என்று யுனிசெஃப் அமைப்பின் தெற்காசியப் பிராந்திய இயக்குநர் டேனியல் டூலே தெரிவித்துள்ளார். புரதச்சத்துள்ள உணவு வழங்குவதில் முதலீடுகளைச் செய்யாமல், பொருளாதார வளர்ச்சியால் மட்டும் நிலைத்து நிற்கக்கூடிய மாறுபாட்டை ஏற்படுத்திவிட முடியாது. தெற்காசியா முழுவதும் காத்துக் கொண்டிருக்கும் 83 மில்லியன் குழந்தைகளுக்காக, இந்த சுகாதார முன்னுரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று டேனியல் டூலே வலியுறுத்தியுள்ளார்.
Read more...