>> Monday, February 1, 2010

காலக்கெடு முடிவடைந்தும் முகாம்களில் மக்கள்
இலங்கையில் விடுதலைப் புலிகளுடான இறுதி யுத்த காலத்தில் வன்னிப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அரசின் இடைத்தங்கல் முகாம்களில் அகதிகளாக தஞ்சம் புகவேண்டிய நிலை ஏற்பட்டது.
அப்படி தங்கியவர்கள் அனைவரும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் தேதிக்கு முன்னர் தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என இலங்கை அரசு அறிவித்திருந்தது.
இந்தக் காலக்கெடு ஞாயிற்றுகிழமையுடன் முடிவடைந்துள்ள நிலையில் இன்னமும் சுமார் ஒரு லட்சம் மக்கள் பல முகாம்களில் தங்கியுள்ளனர். தாங்கள் உடனடியாக தங்களது இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
மக்கள் முன்னர் தங்கியிருந்த பகுதிகளில் இன்னமும் மிதிவெடிகளை முழுமையாக அகற்றும் பணி முடிவடையாததே அவர்களை மீள்குடியேற்ற முடியாததற்கு காரணம் என்று இலங்கை அரசின் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூறுகிறார்.
தாங்கள் எதிர்பார்த்ததை விட மிதிவெடி அகற்றும் பணி மெதுவாகவே நடைபெற்று வருகிறது என்றும், மக்களை தொடர்ந்து முகாம்களில் தங்கவைக்கும் எண்ணம் அரசுக்கு கிடையாது என்றும் அவர் கூறுகின்றார்.
உயர் பாதுகாப்பு வலையங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவம் அமைச்சர் தெரிவிக்கிறார்.
யாழ்குடாவில் அழுத்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளது
யாழ்ப்பாணம் வரைப்படம்
இலங்கையின் வடக்கே யாழ்குடா நாட்டில் தங்களது எதிர்காலத்தையும் வாழ்வாதாரங்களையும் உறுதிப்படுத்தும் வகையில் அங்கு சமூக ஆர்வலர்களால் அழுத்தக் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் அரசியல் தலைமகள் மற்றும் போராளிக் குழுக்களின் தீர்மானங்களே தம் மீது திணிக்கப்பட்டதாகவும் அப்படியான செயற்பாடுகள்தான் தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு காரணம் என்று இந்த அழுத்தக் குழுவினர் கூறுகிறார்கள்.
இந்தக் குழுவில் எதிர்வரும் காலத்தில் முஸ்லிம் மக்களையும் இனைத்துக் கொள்ள இவர்கள் தீர்மானித்துள்ளனர். இதன் மூலம் வடகிழக்கு பகுதியில் சிறுபான்மையினர் தொடர்பான அரசியல் மற்றும் அபிவிருத்தி பணிகளில் தீர்மானங்கள் எடுக்கப்படும் போது சமூக மட்டக் குழுக்களுடன் கலந்துரையாடியே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் இவர்கள் கோருகிறார்கள்.
இந்த அழுத்தக் குழுவில் பல்துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் இடம் பெற்றுள்ளார்கள். வடபகுதியில் இருக்கும் அனைத்து மாவாட்டங்களில் இருந்தும் பலர் இந்த அழுத்தக் குழுவில் இணைந்துள்ளனர்.
யாழ்மாவட்ட மீனவர் சங்கங்களின் கூட்டுறவு சம்மேளனத்தின் தலைவர் தவரட்ணம் அவர்களின் தலைமையில் இந்த அழுத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிந்தும் தொடரும் அச்சுறுத்தல்கள் - த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு
டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடை பெற்று முடிந்துள்ள போதிலும் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் தமது கூட்டமைப்பைச் சேர்ந்த சேர்ந்தவர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை கூறுகின்றார்.
இதன் காரணமாக தேர்தல் காலத்தில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிய இரண்டு உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் உட்பட 4 பேர் தொடர்ந்தும் பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்டத்திற்கு வெளியே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர் நோக்கியுள்ள இவர்களுக்கான பொலிஸ் பாதுகாப்பு தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரிடம் பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை முன் வைக்கப்பட்ட போதிலும் இது வரை எத்தகைய நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று கூறுகிறார் டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை
தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கும் இதனை தாம் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
தமது மாவட்டத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவான ஆயுதக் குழுவொன்றினாலே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
தமிழக முதல்வருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன்
இந்தியாவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவியேற்றுள்ள சிவசங்கர் மேனன் தமிழக முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து உரையாடியுள்ளார்.
இதன்போது தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது, இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்துவது போன்ற விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்து விட்டதாக இலங்கை அரசு தெரிவித்துள்ள போதிலும், இது தொடர்பான மரண சான்றிதழ் இந்தியாவுக்கு இன்னமும் வழங்கப்படவில்லை என இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ தெரிவித்துள்ளது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter