>> Friday, February 5, 2010
பாகிஸ்தானுடனான பேச்சுக்களை தொடர இந்தியா முடிவு
இந்தியாவின் மும்பை நகரில் கடந்த 2008-ம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் இடைநிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர இந்தியா திட்டமிட்டுள்ளது.
இரு நாடுகளின் வெளியுறவுச் செயலர் நிலையிலான பேச்சுவார்த்தையைத் துவக்க இந்தியா திட்டமிட்டிருப்பதாக இந்திய வெளியுறவுச் செயலக அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். பயங்கரவாதம் உட்பட அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் பாகிஸ்தானுடன் பேசப்படும் என இந்திய ஊடகங்களுக்கு மற்ற அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
பேச்சுவார்த்தை நடத்தப்படும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், இந்தியா எதைப்பற்றிப் பேசத் தயாராக உள்ளது என்பது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் விளக்கம் கேட்டிருப்பாதக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
இதுதொடர்பாக, இந்தியாவின் சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமத் குரேஷி, பேச்சுவார்த்தை தொடர்பான விவரங்கள் இந்தியாவிடமிருந்து கிடைத்தபிறகு, தேதி முடிவு செய்யப்படும் என்றும், எல்லாப் பிரச்சினைகளையும் ஆக்கப்பூர்வமான வகையில் பேசித் தீர்த்துக் கொள்ள பாகிஸ்தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
காஷ்மீர் உள்பட இரு நாடுகளுக்கிடையிலான பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பேச்சுவார்த்தை துவங்கியது. ஆனால், கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து அந்தப் பேச்சுவார்த்தையை இந்தியா இடைநிறுத்தியது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாதிகள்தான் தாக்குதலை நடத்தியிருப்பதாகவும், அவர்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் வரை பேச்சுவார்த்தை கிடையாது என்றும் இந்தியா கூறிவந்தது.
இன்னும் இரு நாடுகளுக்கிடையே பரஸ்பர நம்பகத்தன்மை ஏற்படாவிட்டாலும், பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர வேண்டும் என்ற விருப்பம், இரு அரசுகளிடமும் இருப்பதாகக் கருதப்படுகிறது.
இலங்கையில் சிறுபான்மையினர் என்று யாரும் இல்லை--மஹிந்த ராஜபக்ஷ
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து இடம்பெற்ற முதல் சுதந்திர தின கொண்டாட்டங்கள் வியாழனன்று காலை கண்டியில் இடம்பெற்றன.
வரலாற்று பிரசித்தி பெற்ற கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக நடைபெற்ற நாட்டின் 62 ஆவது சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஒரே நாடு, ஒரே மக்கள் என்பதே தமது தாகம் எனக் குறிப்பிட்டார்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
இந்த விழாவில் நாட்டின் முப்படைத் தளபதிகள், பாதுகாப்புத் துறை சார்ந்த உயரதிகாரிகள், அமைச்சர்கள், அரச முக்கியஸ்தர்கள், ராஜதந்திரிகள் பொதுமக்கள் என பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டார்கள். தமது நாட்டின் பிரச்சினைகளை பேசித் தீர்த்துக்கொள்ள முடியும் என தெரிவித்த ஜனாதிபதி இலங்கையில் சிறுபான்மையினர் என்று எவருமே கிடையாது என்கிற தமது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
கடந்த மே மாதம் வரையில் யுத்த பிரதேசமாகத் திகழ்ந்த முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்கிய வன்னிப்பிரதேசத்தின் பல இடங்களிலும் அரசு அலுவலகங்களிலும், இராணுவ முகாம்கள், காவால் நிலையங்கள் என்பனவற்றிலும் சுதந்திர தின வைபவங்கள் நடைபெற்றன. தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
முல்லைத்தீவு நகரில் முக்கிய இராணுவ தளத்தில் இடம்பெற்ற சுதந்திர தின வைபவத்தில் அந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான இராணுவ தளபதியுடன் முல்லைத்தீவு அரசாங்க அதிபரும் கலந்து கொண்டார். கிளிநொச்சி அரச செயலகத்திலும், மீள்குடியேற்றம் இடம்பெற்றுள்ள பிரதேசங்களில் உள்ள அரச அலுவலகங்களிலும் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
நேபாள குழந்தைகள் தத்து கொடுக்கப்படுவதில் மோசடி
சரவதேச அளவில் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு குழந்தைகள் தத்தெடுக்கப்படுவதை கண்காணிக்கும் உலக அமைப்பு, நேபாளத்திலிருந்து வெளிநாடுகளுக்கு குழந்தைகள் தத்தெடுக்கப்படுவதை நிறுத்திவைக்கும்படி பரிந்துரை செய்துள்ளது.
நேபாள குழந்தைகளை தத்தெடுக்கும் நடைமுறைகளில் முறைகேடுகள் நடப்பதாகவும், இதனால் இந்த நடைமுறையை நிறுத்தவேண்டும் என்றும் இந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சீனா மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளை விட நேபாளத்தில் இருந்து மற்ற நாடுகளுக்கு தத்தெடுக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவு தான்.
தத்து கொடுக்கப்பட்ட நேபாள குழந்தைகளில் சிலர்
ஆனால் சமீபகாலமாக இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இவர்களில் பலர் அமெரிக்கா, ஸ்பெய்ன், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு செல்கிறார்கள்.
உலக அளவில் ஒரு நாட்டிலிருந்து மற்ற நாடுகளுக்கு குழந்தைகள் தத்தெடுக்கப்படுவதை கண்காணிக்கும் சர்வதேச அமைப்பு தற்போது வெளியிட்டிருக்கும் வரைவு அறிக்கையில், நேபாளத்தில் குழந்தைகளை தத்தெடுப்பதற்கு கடைபிடிக்கப்படும் நடைமுறைகள் சர்வதேச தரத்தின் கீழ் அமையவில்லை என்று கூறியுள்ளது.
நாடுகளுக்கிடையில் குழந்தைகள் தத்தெடுக்கப்படுவதை முறைப்படுத்துவதற்காக 1993 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஹேக் ஒப்பந்தத்தில் நேபாளமும் கையொப்பமிட்டுள்ளது. ஆனாலும் தத்து கொடுக்கப்படும் குழந்தையின் நன்மையை கருத்தில் கொள்ளும் வகையில் நேபாள அரசு செயற்படவில்லை என்றும், குழந்தைகள் பலவந்தமாக கடத்தப்படுவதையும், விற்பனை செய்யப்படுவதையும் பிறகு நாடு கடத்தப்படுவதையும் நேபாள அரசாங்கம் தடுக்கத்தவறிவிட்டதாகவும் இந்த அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment