>> Thursday, February 4, 2010
தேர்தலில் முறைகேடுகள் எனக் கூறி இலங்கையில் எதிர்கட்சியினர் பேரணி
இலங்கையில் கடந்த வாரம் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டி வருகின்ற எதிரணி கட்சிகள் ஒன்றிணைந்து இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியையும், கண்டனக் கூட்டத்தையும் நடத்தியிருக்கின்றன.
எதிர்கட்சி ஆதரவாளர்கள் மீதான அடக்குமுறைகள், ஊடகங்கள் மீதான நெருக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும் சுட்டிக்காட்டி அவற்றை நிறுத்த வேண்டும் என இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
சரத் பொன்சேகா தேர்தல் ஆணையாளரிடம் மனு
இதேவேளை, நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகள் வாக்கு எண்ணிக்கை மோசடிகள் போன்ற பல்வேறு விடயங்களைக் குறிப்பிட்டு, எதிரணிக்கட்சிகளின் பொது வேட்பாளராகிய சரத் பொன்சேகா அவர்கள் தேர்தல் ஆணையாளருக்கு புதன்கிழைமை எழுத்து மூலமான முறைப்பாட்டைச் செய்திருந்தார்.
இந்த முறைகேடுகளின் அடிப்படையில் இந்தத் தேர்தல் முடிவுகளை நிராகரிக்க வேண்டும் என அவர் தமது முறைப்பாட்டில் தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
எனினும் ஜனாதிபதி தேர்தல் நியாயமான முறையிலேயே நடந்து முடிந்துள்ளது என தேர்தல் ஆணையாளர் தாயனந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் தேர்தல் பிரச்சார காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள அவர், வாக்குத் திணிப்புகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார்.
மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்ய முயன்றதாக கூறி பலர் கைது
மஹிந்த கொலை செய்ய சதி என்று அரசு கூறுகிறதுஇலங்கையில் அவசரககால சட்டத்தின் கீழ் சுமார் 40 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அரசுக்கு சொந்தமான தினசரி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்ய எதிர்கட்சிகள் தீட்டிய சதித்திட்டத்தில் இவர்கள் தொடர்புபட்டிருந்தார்கள் என்று அரசு கூறுகிறது.
கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் இராணுவ அதிகாரிகள் அல்லது படைவீரர்கள். அரசியலில் ஈடுபட்டார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு 10க்கும் அதிகமான அதிகாரிகள் சமீபத்தில் கட்டாய ஓய்வில் அனுப்பட்ட சம்பவத்துக்கு பிறகு இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டங்கள் தீட்டபட்டன என்பதை மறுக்கும் எதிர்கட்சியினர், கடந்த வாரம் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பிறகு அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது என்றும் கூறுகிறார்கள்.
அரசின் ஊதுகுழலாக செயற்பட்டுவரும் டெய்லி நியூஸ் எனும் தினசரி, ஜனாதிபதி மற்றும் இதர சிலரை கொலை செய்ய முயன்றார்கள் என அது கூறும் செயற்பாட்டில், இவர்கள் ஈடுபட்டிருக்கக் கூடும் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.
ஊடகத்துறையினருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்
சிக்கலில் இருக்கும் ஒரு பத்திரிகையும் அதன் ஆசிரியரும்அரசுக்கு ஆதரவான மற்றொரு தினசரியோ, அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இந்த 37 பேரைத்தவிர மேலும் 20 பேர் விசாரிக்கப்பட்டு வருவதாக செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் ஊடகத்துறையினர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறார்கள் என்று கூறும் உள்ளூர் ஊடக அமைப்புகள், அப்படியானவற்றை குறைக்கும் வகையில் ஜனாதிபதி தலையிட வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
இதனிடையே வெளிப்படையான கருத்துக்களை தெரிவித்து வந்த ஒரு இணையதளத்தின் ஆசிரியரான பிரகீத் எக்நலிகொட காணாமல் போய் 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில் அவரது இருப்பிடம் குறித்த தகவல்கள் இதுவரை தெரியவில்லை.
செய்தியாளர்கள் தொடர்ந்து அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருவதாக மனித உரிமை அமைப்புகளும் கூறுகின்றன.
இலங்கையின் அரச ஊடகங்களில் பணியாற்றும் செய்தியாளர்கள் உட்பட 56 பேர் மோசமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாக அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.
ஆனால் இலங்கையில் ஊடகத் துறையினருக்கு எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை என்றும் அவர்கள் சுந்தரமாக செயற்பட முடியும் எனவும் அரசின் ஊடகத்துறை துணை அமைச்சர் லக்ஷமன் யாப்பா அமேவர்த்தனா தமிழோசையிடம் தெரிவித்தார்.
இது தொடர்பான விரிவான தகவல்களை இன்றைய செய்தியரங்கில் கேட்கலாம்
அதிகாரப் பகிர்வு உறுதிமொழியை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும்-திமுக
தமிழக முதல்வர் கருணாநிதிஇலங்கையில் தமிழ் மக்களுக்கான அதிகார பகிர்வு குறித்து இலங்கை அரசு முன்னர் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என திமுக கோரியுள்ளது.
இது தொடர்பில் இந்த மாதம் 20 ஆம் தேதி நடைபெறவுள்ள அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூடும் போது ஒரு தீர்மானம் இயற்றப்படும் என திமுகவின் தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தியாவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பொறுபேற்றுள்ள சிவ சங்கர் மேனன் சில தினங்களுக்கு முன்னர் தன்னை சந்தித்த போதும் இந்த விடயம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினியை விடுவிப்பது குறித்து மத்திய அரசுடன் பேசி முடிவெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் இடம் பெற்றதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment