>> Monday, February 8, 2010
இலங்கைக்கு ரஷ்யா 300 மில்லியன் டாலர் இராணுவக் கடனுதவி
இலங்கை ஜனாதிபதியாக இரண்டாவது முறை தேர்தெடுக்கப்பட்ட பிறகு தனது அதிகாரபூர்வமான முதல் பயணமாக ரஷ்யா சென்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ் அவர்கள், இந்த பயணத்தின் போது 300 மில்லியன் டாலர்கள் அளவுக்கு ஆயுதக் கொள்வனவுகள் செய்யும் நோக்கில் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளத்தாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நாட்டில் நடைபெற்ற போர் முடிவடைந்துவிட்டதாக அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த அளவுக்கு ஆயுதக் கொள்வனவு எதற்கு என பலதரப்பிலும் கேள்விகள் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதன் பின்புலத்தில் போருக்கு பின்னர் இந்த இராணுவ உடன்பாட்டின் நோக்கம் என்ன என்று இலங்கையிலிருக்கும் இராணுவப் பகுப்பாய்வாளர் இக்பால் அத்தாஸ் தமிழோசையிடம் கருத்து தெரிவித்தார்.
அதில் தற்போது ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் என்பது 300 மில்லியன் டாலர்கள் கடனுக்கான உடன்பாடுதான் என்றும் அந்தக் கடனுதவி ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட இராணுவ உபகரணங்கள், அதாவது புலிகளுடனான இறுதி யுத்தத்துக்கு முன்னர் வாங்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை பழுதுபார்க்கவும், மேம்படுத்தும் வகையிலேயே வழங்கப்படவுள்ளது என்றும் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்த கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
ஆவணங்களை காண்பித்து வாகனங்களை மக்கள் திரும்ப பெறலாம் - யாழ் ஆயர்
யாழ் ஆயர் தாமஸ் செளந்திரநாயகம்
இலங்கையின் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னிப்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற போர் காரணமாக பொதுமக்களின் சொத்துக்கள், வாகனங்கள் என்பன எங்கும் சிதறிக்கிடந்ததைத் தாங்கள் கண்டதாக அண்மையில் அந்தப் பகுதிகளுக்கு போருக்கு பிறகு முதன்முறையாக விஜயம் மேற்கொண்டு திரும்பியுள்ள யாழ் ஆயர் தாமஸ் சௌந்தரநாயம் அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்தார்.
இராணுவத்தின் அனுமதியோடு, அவர்களது வழித்துணையுடன் சென்று இந்த இடங்களைப் பார்வையிட்டதாகத் தெரிவித்த ஆயர் அவர்கள், முள்ளியவளை, தண்ணீரூற்று போன்ற பகுதிகளில் பெரும் எண்ணிக்கையான வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை நேரில் கண்டதாகவும் கூறினார்.
இந்த வாகனங்கள் தற்போது அந்தப் பகுதி அரசாங்க அதிபரின் பொறுப்பில் இருப்பதாகவும், உரிமையாளர்கள் உரிய ஆவணங்களைக் காட்டி அவற்றைப் பெற்றுச் செல்ல முடியும் என இராணுவத்தினர் தம்மிடம் தெரிவித்ததாகவும் யாழ் ஆயர் தாமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்திருக்கின்றார்.
கடந்த வருடம் மே மாதம் விடுதலைப்புலிகள் இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்டதையடுத்து, முதற் தடவையாக அவர் யுத்தம் நடைபெற்ற பகுதிக்குச் சென்று பார்வையிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 'கேரம்'
சென்னை
கேரம் விளையாட்டில் இந்தியா உலக சாம்பியனாக இருக்கும் நிலையில் தமிழகம் இந்த விளையாட்டில் முன்ணணியில் உள்ளது. சென்னையில் குடிசைப்புறங்கள் மற்றும் ஏழ்மையான இடங்களில் மிக அதிக அளவில் கேரம் விளையாடப்படுகிறது.
இந்த விளையாட்டில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் சர்வதேச அளவில் மிக உயர்ந்த இடங்களை பெற்றுள்ளனர். இந்த விளையாட்டு தமிழகத்தில் பிரபலமாக இருப்பதன் காரணம், இதை விளையாடுபவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் போன்றவற்றை ஆராய்கிறார் நமது தமிழகச் செய்தியாளர் டி.என். கோபாலன்.
0 comments:
Post a Comment