>> Wednesday, February 10, 2010

சரத் பொன்சேகா கைதை எதிர்கட்சிகள் கண்டிப்பு
இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதியும், ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டவருமான ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
திங்கட்கிழமை இரவு, கொழும்பில் பொன்சேகா அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட போது, சரத் பொன்சேகா பல அரசியல் தலைவர்களுடன் ஒரு சந்திப்பை நிகழ்த்திக்கொண்டிருந்தார்.
இலங்கையின் தேசிய பாதுகாப்பபு சபையில் உறுப்பினராக இருந்த பொழுதே அரசியல் வாதிகளுடன் கலந்துரையாடியதன் மூலமாக இராணுவ விதிகளை அவர் மீறியுள்ளளார் என்பதால்தான் இந்த கைதுநடவடிக்கை என்று இலங்கை அரசு தெரிவிக்கிறது.
பொன்சேகாவின் நடவடிக்கை ஒரு வகையில் தேச விரோதக் குற்றமாக அமைந்துள்ளது என பாதுகாப்பு விடயங்கள் சார்பாகப் பேசவல்ல அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.
இலங்கையின் முன்னாள் ஆயுதப் படைத் தளபதியாக இருந்த பொன்சேகாவை இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த தாம் எண்ணம் கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதே நேரம் சரத் பொன்சேகா மிகவும் மோசமான, அருவருப்பான முறையில் இழுத்துச்செல்லப்பட்டார் என்று ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் கூறினார்.
கைது செய்யப்படுவதற்கு முன்னர், திங்கட்கிழமை,ஜெனரல் சரத் ஃபொன்சேகா இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் போர் குற்றங்கள் குறித்த விசாரணைகள் வருமானால் அப்போது, தான் சாட்சியம் அளிக்க தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இது பற்றிய மேலதிக விபரங்களை இன்றைய நிகழ்சியில் நேயர்கள் கேட்கலாம்.
சரத் பொன்சேகா கைது சட்டவிரோதமானது, உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்—ரணில் விக்ரமசிங்க
சரத் பொன்சேகா கைது சட்டவிரோதமானது என்கிரார் ரணில்இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்துள்ளது சட்டவிரோதமானது, ஜனநாயகத்துக்கு எதிரானது என்று கருத்து வெளியிட்டுள்ளார் இலங்கையின் எதிர்கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்க
அவரது கைது இராணுவச் சட்டங்களுக்கு எதிரானது மட்டுமல்ல நாட்டின் பொதுவான சட்டங்களுக்கும் எதிரானது என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க பிபிசி சந்தேஷ்யவிடம் தெரிவித்தார். அவரது கைது என்பது நாட்டின் அரசியல் சாசனத்தை மீறும் செயல் என்றும் அவர் கூறுகிறார்.
அவர் கைது செய்யப்பட்டுள்ளதை தாங்கள் கண்டிப்பதாகவும் அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார். இதுகுறித்து பல்தரப்பினருடனும் தான் பேசி வருவதாகவும்,அனைவரும் இதே கருத்தை கொண்டுள்ளனர் எனவும் அவர் மேலும் கூறுகிறார்.
இது சில இராணுவ அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஜனநாயக விரோதச் செயல் என்றும் அவர் கூறுகிறார். அவர் மீது ஏதாவது குற்றசாட்டுகள் இருந்தால் அவை வழக்கமான நீதிமன்றங்கள் முன்னர் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் ரணில் கருத்து வெளியிடுகிறார்.
மிருகத்தைப் போன்று இழுத்துச் சென்றார்கள்
பொன்சேகாவை மிருகத்தைப் போல இழுத்துச் சென்றதாக அவரின் மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பொன்சேகாவை சந்திக்க செவ்வாயன்று அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக செய்திகள் கூறுன்றன.
இந்த கைதை தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டித்துள்ளது. பொன்சேகா தவறு செய்திருந்தால் அவரை உரிய முறையில் விசாரிக்கலாம் என்றும் இப்படி ஏதேச்சதிகாரமாக செயல்படக் கூடாது என்றும் அது கூறியுள்ளது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்கு இந்தியா அனுமதி மறுப்பு
நாட்டுக் கத்தரி
மரபணு மாற்றம் செய்யப்பட்ட தொழில்நுட்பத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பி.டி கத்தரிக்காய்கள், பொதுமக்களின் உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்காது என்பது உறுதி செய்யப்படும் வரை, அந்தக் கத்தரிக்காய்களை வர்த்தக ரீதியாக இந்தியாவில் அனுமதிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக இந்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் அறிவித்துள்ளார்.
ஆளும் காங்கிரஸ் கட்சியிலிருந்தும், மாநில அரசுகள், விவசாயிகள் மற்றும் தன்னார்வ அமைப்புக்களிடம் இருந்தும் கடும் எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்கிழமை மாலை செய்தியாளர்களிடம் பேசும்போது ஜெயராம் ரமேஷ் அதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும், பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது உறுதி செய்யப்படும் வரை அந்தத் தடை தொடரும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இது மிகவும் கடுமையான முடிவு என்றாலும் கூட, விஞ்ஞானம், சமூகம், உற்பத்தியாளர், நுகர்வோர் ஆகிய அனைவரையும் கணக்கில் கொண்டு முடிவெடுக்க வேண்டியிருந்தது என்று அவர் தெரிவித்தார்.
எந்த நிர்பந்தத்தின் அடிப்படையிலு்ம் தான் இந்த முடிவை எடுக்கவில்லை என்று அமைச்சர் தெரிவித்தார். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுடன் நீண்ட ஆலோசனை நடத்திய பிறகே தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து நடைபெறும் ஆய்வுகளின்போது அனைத்து அம்சங்களும் கவனத்தில் கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
பி.டி. கத்தரிக்காயை அனுமதிக்கலாமா என்பது குறித்து, நாடு முழுவதும் ஏழு நகரங்களில் சுமார் 8 ஆயிரம் பேரிடம் ஆலோசனை நடத்தப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். அந்த ஆலோசனைகளின்போது, பல இடங்களில் தன்னார்வ அமைப்புக்கள் மற்றும் விவசாயிகளுடன் அமைச்சர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பாஜக மற்றும் இடதுசாரிக் கட்சிகள் ஆளும் கர்நாடகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் மட்டுமன்றி, காங்கிரஸ் ஆளும் ஆந்திரம், கூட்டணிக்கட்சிகள் ஆட்சி நடத்தும் தமிழ்நாடு உள்பட பத்துக்கும் மேற்பட்ட மாநில அரசுகள், பி.டி. கத்தரிக்காய்க்கு அனுமதியளிக்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்துவிட்டன. மேற்கு வங்கம், ஒரிஸா, பிகார் மாநிலங்களில் இருந்து மட்டும் 60 சதத்துக்கும் மேற்பட்ட கத்தரிக்காய் உற்பத்தி செய்யப்படுகிறது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter