>> Monday, February 15, 2010

இந்திய குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் கண்டனம்
பாகிஸ்தான் பிரதமர் யூசப் ராசா கிலானி அவர்கள் நேற்று சனிக்கிழமை இந்தியாவின் மேற்கு பகுதியில் ஒன்பது பேர் கொல்லப்பட்டு பலரை காயப்படுத்திய குண்டுத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய கிலானி அவர்கள் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகவும் அவர் கூறினார்.
புனே நகரில் வெளிநாட்டவர் அதிகம் புழங்கும் சிற்றுண்டி கடையில் குண்டு வெடித்தது. இதில் கொல்லப்பட்ட 9 பேரில் இருவர் வெளிநாட்டவர்கள். இந்நிலையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அடுத்த வாரம் மீண்டும் ஆரம்பமாகும் அதிகாரப்பூர்வ பேச்சுக்கள் வெற்றி பெற வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புவதாக பிரதமர் கிலானி தெரிவித்தார்.
புனேவில் நடந்த குண்டுத்தாக்குதலுக்கு பாகிஸ்தானை குற்றம்சாட்டிய இந்திய இந்துத்துவ தேசியவாதிகள் பாகிஸ்தான் கூட பேச்சுக்கள் நடைபெறக் கூடாது என கூறியிருந்தார்கள்.
சரத் பொன்சேகா வழக்கறிஞருக்கு அச்சுறுத்தல் என குற்றச்சாட்டு
சரத் பொன்சேகா
இலங்கையில் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல சரத்பொன்சேகாவை சிறையில் அடைத்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என முயற்சிக்கின்றது என எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டம் ஒன்றில் ரணில் விக்ரமசிங்க இந்த கருத்துக்களை வெளியிட்டார். இதே கூட்டத்தில் பங்கேற்றஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஐனாதிபதி தேர்தல் முடிவுகளை கேள்விக்குட்படுத்தி ஜெனரல் சரத் பொன்சேகா சார்பில் வழக்கு தாக்கல் நடிவடிக்கையில் ஈடுபட்டுள்ள சட்டத்தரணி விஜேதாச ராஜபக்சவை அச்சுறுத்தும்படியான தொலைபேசி அழைப்புகள் விடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.
இலங்கை பெளத்த பீடாதிபதிகளின் நேரடி அரசியல் தலையீடு குறித்த ஆய்வுக் கண்ணோட்டம்
சரத் பொன்சேகா
இலங்கை அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள, முன்னாள் இராணுவத் தளபதியும் எதிர்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதித்தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்ட வருமான சரத்பொன்சேகா அவர்களை விடுதலை செய்யுமாறு இலங்கையின் நான்கு முக்கிய பௌத்த பீடாதிபதிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.
மல்வத்தை, அஸ்கிரிய, அமரபுர மற்றும் ராமன்ன ஆகிய பௌத்தபீடங்களின் பீடாதிபதிகள் இணைந்து இந்தக் கோரிக்கையை எழுத்து மூலம் விடுத்திருக்கின்றார்கள்.
முன்னதாக நாட்டில் தோன்றியுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் நிச்சயமற்ற நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக இந்த நான்கு பீடாதிபதிகளும் பிப்ரவரி 18 ஆம் தேதி கண்டியில் மாநாடு ஒன்றிற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
அதற்கடுத்தபடியாக சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை விடுத்துள்ளனர்.
இலங்கையின் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முன்னின்று செயற்பட்ட சரத் பொன்சேகாவுக்கும், ஜனாதிபதிக்கும் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்சவுக்கும் இடையில் எழுந்துள்ள முரண்பாடு இலங்கையின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பதாக இந்த பீடாதிபதிகள் கூறியிருக்கிறார்கள்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter