>> Saturday, January 30, 2010

சரத் பொன்சேகா
தமிழோசை
சரத் பொன்சேகாவின் அலுவலகத்தில் தேடுதல் - 13 பேர் கைது
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் அலுவலகம் அரச படையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
சரத் பொன்சேகாவின் அலுவலகம் அமைந்துள்ள வீதியை மறித்து ஊடகவியலாளர்கள் எவரும் உள்நுழையாதபடி தடுத்த விசேட அதிரடிப் படையினர் அங்கு சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சுமார் நாற்பது அதிகாரிகள் சரத் பொன்சேகாவின் அலுவலகத்தில் சோதனை நடத்தி 13 பேரை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
ஏற்கனவே தமது பாதுகாப்பு ஏற்பாடுகளை நான்கு பொலிசாராக குறைத்துள்ள அரச தரப்பு தற்போது தமது அலுவலகத்தை சோதனையிட்டு கணிணி உள்ளிட்ட உபகரணங்களை எடுத்துச் சென்றுள்ளதாகவும் தம்முடன் இருந்தவர்களையும் கைது செய்து சென்றுள்ளதாகவும் தமிழோசைக்குத் தெரிவித்தார்.
சரத் பொன்சேகாவின் செவ்வியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
இதுதொடர்பாக இலங்கை அரச அதிகாரி லக்ஷ்மன் ஹுலுகல்லவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, விசாரணை நடவடிக்கைகள் தொடர்வதாக மட்டும் கூறினார். சரத் பொன்சேகாவின் அலுவலகத்தில் தேடுதல் நடத்தப்பட்டது பற்றியோ, எது குறித்து விசாணை நடத்தப்படுகிறது என்பது பற்றியோ ஹுலுகல்ல உறுதிப்படுத்தவில்லை.
இந்திய இராணுவத் தளபதியின் இராணுவச் செயலர் மீது விசாரணை
இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் தீபக் கபூர்நில பேரம் தொடர்பான முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்திய இராணுவத் தளபதியின் இராணுவச் செயலர் லெப்டினன்ட் ஜெனரல் அவதேஷ் பிரகாஷுக்கு எதிராக, ராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் தீபக் கபூர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராணுவத்தில், மூன்று நட்சத்திர அந்தஸ்துடைய உயர் அதிகாரி ஒருவர் இத்தகயை நடவடிக்கையை எதிர்நோக்குவது இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். இந்த மாதம் 31-ம் தேதி அவர் ஓய்வு பெற உள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராணுவச் செயலர் மீதான குற்றச்சாட்டை அடுத்து, முதலில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க ராணுவத் தளபதி உத்தரவிட்டார்.
ஆனால், இரு தினங்களுக்கு முன்பு பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனி, அந்த அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கைக்குப் பதிலாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அந்தக் குற்றச்சாட்டில் தொடர்புடைய மற்ற ராணுவ அதிகாரிகள் மீது வேறு வகையான நடவடிக்கை எடுக்கப்படும்போது, ராணுவச் செயலர் அவதேஷ் பிரகாஷுக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு என்று அவர் கேள்வி எழுப்பியதாகத் தெரிகிறது.
அதைத் தொடர்ந்து ராணுவத் தளபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். ராணுவத் தளபதியின் உத்தரவை நிராகரித்து, பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிடுவது இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் சுக்னா ராணுவ நிலையம் அருகே அமைந்துள்ள நிலத்தை தனியார் ஒருவருக்கு விற்க, ஆட்சேபணையில்லா சான்றிதழ் வழங்க, அவதேஷ் பிரகாஷ், மற்ற நான்கு ராணுவ அதிகாரிகளுடன் சேர்ந்து தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தியின் எஞ்சியுள்ள அஸ்தி தென்னாபிரிக்காவில்
இலா காந்தி- காந்தியின் பேத்தி1948 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியின் அஸ்தியை பல நாட்டு அரசுகளின் சார்பில் அவற்றின் தலைவர்கள் தத்தமது நாடுகளுக்கு கொண்டு சென்றார்கள்.
ஆனால் அப்போது தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கொள்கையை கடைப்பிடித்த அரசாங்கம் ஆட்சியில் இருந்ததால் அந்த அஸ்தியை அந்நாட்டு அரசாங்கம் பெற்றுக் கொள்ளாமையால் அங்குள்ள ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் சார்பில் காந்தியின் அஸ்தி அங்கே கொண்டுசெல்லப்பட்டது.
காந்தி தென் ஆப்ரிக்காவில் 21 ஆண்டுகள் வாழ்ந்ததால் அவரது அஸ்தியின் ஒருபகுதியை அங்கே அனுப்புவதற்கு இந்திய அரசும் ஒப்புக்கொண்டது. அப்படி கொண்டுவரப்பட்ட காந்தியின் அஸ்தி அவர் தென் ஆப்ரிக்காவில் வாழ்ந்த அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.
அப்படி வைக்கப் பட்டிருந்தபோது, விலாஸ் மெஹதா என்கிற காந்தி குடும்பத்திற்கு நெருக்கமான நண்பர் அந்த அஸ்தியிலிருந்து ஒரு பகுதியை எடுத்து காந்தியின் நினைவாக தம்மிடம் வைத்துக் கொண்டார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார். இறக்கும் தருவாயில் இந்த அஸ்தியை அவர் தமது மருமகளிடம் கொடுத்து அதை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அந்த அஸ்தியை சில ஆண்டுகாலம் வைத்திருந்த அந்த மருமகள் அதனை காந்தி குடும்பத்திடம் கையளித்துள்ளார்.
காந்தியின் அஸ்தியை கண்காட்சியிலோ அல்லது தனிநபர்களிடமோ வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் அதை கடலில் கரைப்பது தான் சரி என்றும் முடிவு செய்யப்பட்டு எதிர்வரும் சனிக்கிழமை அஸ்தி கடலில் கரைக்கப்படவுள்ளது.
தென் ஆப்ரிக்க கடற்படையின் வாகனத்தில் அஸ்தியுடன் தாமும் உடன் சென்றுகடலில் கரைக்கவுள்ளதாகவும் இது முழுமையான அரசு மரியாதையுடன் செய்யப்பட இருப்பதாகவும் தென்னாபிரிக்காவிலுள்ள காந்தியின் பேத்தியான இலா காந்தி தமிழோசையிடம் கூறினார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter