>> Thursday, February 11, 2010

கொழும்பில் எதிர்க்கட்சி ஊர்வலத்தில் கலவரம்
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற ஜெனரல் சரத் பொன்சேகா, இராணுவத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளது தொடர்பில், தலைநகர் கொழும்பின் உயர்நீதிமன்ற வளாகத்துக்கு அருகே ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்கள் இடை யே கலவரம் மூண்டதை அடுத்து கூட்டத்தைக் கலைக்க பொலிசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியுள்ளனர்.
பொன்சேகாவின் விடுதலை கோரி அவரது மனைவி எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் பெரும் ஊர்வலமாகச் சென்று உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய வந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஜெனரல் சரத் பொன்சேகாவின் கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என்று கூறி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்வதற்காக சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகாவுடன் எதிர்க்கட்சித் தலைவர்களும் ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சி ஆதரவாளர்களும் உயர்நீதிமன்றத்துக்கு ஊர்வலமாக வந்தபோது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் சுமார் ஐம்பது பேர் அவ்வூர்வலத்தின் மீது கற்களையும் பாட்டில்களையும் வீசி கலைக்க முயன்றனர்.
முதலில் கலைந்து ஓடினாலும் பின்னர் ஒன்று சேர்ந்த எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் தங்களுடன் மோதிய ஆளுங்கட்சி ஆதரவாளர்களை திருப்பித் தாக்கி விரட்டியடித்து ஊர்வலத்தை முன்னெடுத்துச் சென்றுள்ளனர்.
இத்தருணத்தில் பொலிசாரும் கலவரத்தைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகைக் குண்டுகளை பயன்படுத்தியிருந்தனர்.
நடந்த கலவரத்தில் குறைந்தபட்சம் எட்டு பேர் காயமடைந்துள்ளனர். வளாகத்துக்கு வெளியே பொலிசார் அமைத்திருந்த தடைகளை உடைத்து நீதிமன்றத்துக்குள் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் நுழைந்திருந்தனர்.
கலகத்துக்குப் பின்னர் அனோமா பொன்சேகா, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் நாட்டின் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, இராணுவத்தின் புதிய தளபதி ஜெகத் ஜெயசூரிய, திங்கள் இரவு சரத் பொன்சேகாவைக் கைது செய்யச் சென்றிருந்த மூத்த இராணுவ அதிகாரி சுமித் மானவடு உள்ளிட்டோர் பிரதிவாதிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த மனு வரும் வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
எதிர்க்கட்சியினரின் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் மக்கள் ஜனநாயக முன்னணி ஜேவிபியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூர்ய மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
கைதாகியுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா தடுப்புக் காவலில் கொல்லப்படுவார் என்று தாங்கள் அஞ்சுவதாக எதிர்கட்சிகள் இன்று கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளன.
சரத் பொன்சேகா மீதான இராணுவ குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக ஆதராங்கள் கிடைத்துள்ளதாக அரசாங்கம் சார்பாகப் பேசவல்லவர் ஒருவர் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் இராணுவ உறுப்பினராக இருந்தபொழுதே அரசியல் வாதிகளுடன் இணைந்து செயலாற்றியதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை சரத் பொன்சேகா மறுக்கிறார்.
பொன்சேகா கைது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் -ஆய்வு
ஆய்வாளர் கீத பொன்கலன்
இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு மாத காலம் இருக்கும் நிலையில், தற்போது சரத் பொன்சேகா கைது செய்யப்பட்ட சம்பவம் காரணத்தால் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை, தணிவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார் இலங்கை அரசியல் பகுப்பாய்வாளர் கீத பொன்கலன்.
தேர்தல்கள் நடைபெற இன்னும் காலம் இருப்பதால், இந்தக் கைது சம்பவம், தேர்தல்கள் சுமுகமாக நடப்பதைக் குழப்பிவிடும் என்று நம்புவதற்கு பெரிய இடமளிக்கவில்லை என்றார் அவர்.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில், தென்னிலங்கையில் பெருவாரியான ஆதரவு பெற்றுள்ள, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, தேர்தலுக்கு பிந்தைய காலகட்டத்தில் நடந்த இந்த கைது சம்பவத்தின் விளைவாக, நாடாளுமன்றத்தேர்தலில், மக்கள் ஆதரவு குறைய வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டதற்கு, இது பெரிய அளவில் மாறுவதற்கான வாய்ப்பில்லை என்றார் கீத பொன்கலன்.
கொள்கை ரீதியாக வேறுபட்ட நிலைப்பாட்டை எடுத்திருக்கும் எதிர்க்கட்சிகள், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில், சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி, ஒரே அணியில் திரண்டன. அந்தக் கூட்டணி ஒன்றாக நீடிக்குமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், சரத் பொன்சேகாவின் கைது நாடாளுமன்றத் தேர்தலிலும், இந்தக் கூட்டணி தொடர்வதற்கான வாய்ப்புகளை அதிகரித்திருக்கிறது என்றார் கீத பொன்கலன்.
பொன்சேகா கைது குறித்து காங்கிரஸ் மற்றும் பாஜக விமர்சனம்
எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதியும், ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவருமான ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பாக, இந்திய அரசின் சார்பில் இதுவரை கருத்துக்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், ஆளும் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சியும் அந்தக் கைது நடவடிக்கை குறித்து விமர்சித்திருக்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் சார்பில், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதேசிகன் கூறும்போது, யார் குற்றம் செய்திருந்தாலும், அதற்கான நடைமுறைகளைப் பின்பற்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, மனித உரிமைகளை மீறும் வகையில் செயல்படக்கூடாது என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை எதி்ர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், சரத் பொன்சேகாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter