>> Tuesday, February 2, 2010
இலங்கையில் சில இராணுவ அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு
இலங்கையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் எனக் கூறி சில இராணுவ அதிகாரிகள் கட்டாய ஓய்வில் அனுப்பபடுகிறார்கள்.
இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஊடக மையத்தின் இயக்குநரான லக்ஷமன் ஹுலுகல்ல இந்தத் தகவலை பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.இப்படியாக எவ்வளவு பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அவர் கூறவில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரான சரத் ஃபொன்சேகாவுக்கு ஆதரவாக இந்த அதிகாரிகள் செயற்பட்டார்கள் என்கிற தகவல் கிடைத்ததை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
நாட்டின் முப்படைகள் மற்றும் காவல்துறையில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் பாதுகாக்க எடுக்கப்பட்ட ஒரு ஒழுங்கு நடவடிக்கையே இது எனவும் லக்ஷமன் ஹுலுகல்ல கூறுகிறார்.
இந்த இராணுவ அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
லங்கா பத்திரிகையை மூட அரசு எடுத்த நடவடிக்கையை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது
சிக்கலிலுள்ள பத்திரிகையும் அதன் ஆசிரியரும்இலங்கையிலிருந்து வெளியாகும் லங்கா வாராந்திர பத்திரிகையின் அலுவலகத்தை மூட இலங்கையின் காவல்துறையினர் எடுத்த நடவடிக்கையை கொழும்பிலுள்ள ஒரு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே வி பி கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருந்தாகக் கூறப்படும் அந்த பத்திரிகையில் அலுவலகத்தை மூட இலங்கையில் குற்றத் தடுப்பு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
நீதிமன்றம் அரசின் உத்தரவை ரத்து செய்திருந்தாலும் அதன் ஆசிரியர் இன்னமும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அரசின் உத்தரவுகளுக்கு அடிபணியாத ஊடகங்களுக்கு எதிராக அரசு ஒடுக்குமுறை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகாக உள்ளூர் ஊடக அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இந்த பத்திரிகையில் வெளிவந்த சமீபத்திய கட்டுரை ஒன்று பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து அரசு மேற்கொண்டுவரும் விசாரணைகள் சம்பந்தமான் விதிமுறைகளை மீறியுள்ளது என்று குற்றப் புலனாய்வு துறையின் இயக்குநர் பிபிசியிடம் தெரிவித்தார்.
புலிகளுடனான போரில் ஈடுபட்ட இராணுவத்தினர் மீது விசாரணை கிடையாது:கோத்தபாய ராஜபக்ஷ
போரில் ஈடுபட்ட இராணுவத்தினர் மீது நடவடிக்கை இல்லை விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரின் செயற்பாடுகள் குறித்து எந்த வகையான விசாரணைக்கும் அனுமதியளிக்கப் போவதில்லை என்று இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அண்மையில் முடிவடைந்த ஜனாதிபதி தேர்தலில், பிரதான எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் ஃபொன்சேகா நாட்டின் சட்டதிட்டங்களை மீறியுள்ளார் என்றும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
இலங்கையின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு ஜெனரல் சரத் ஃபொன்சேகா மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதுகாப்புச் செயலர் கூறுகிறார்.
இலங்கையில் இனங்களின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் அமைந்திருப்பது தவறு என்றும், அவை கொள்கைகளின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என தான் கருதுவதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து செயற்படும் என அறிவிப்பு
சம்பந்தர் மற்றும் ரவூஃப் ஹக்கீம்இலங்கையின் ஜனாதிபதி தேர்தலின் போது பல்வேறு அச்சுறுத்தல்கள் அத்துமீறல்களுக்கு மத்தியிலும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் வேண்டுகோளின்படி வாக்களித்துள்ளதாகத் தெரிவித்துள்ள அக்கட்சிகள், அடுத்து வரவரவிருக்கின்ற பொதுத் தேர்தலிலும் இணைந்து செயற்படவுள்ளதாகத் தெரிவித்திருக்கின்றன.
இந்தத் தகவலை கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவுப் ஹக்கீம் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கின்றார்கள்.
இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை நிராகரித்து வாக்களித்திருக்கின்ற போதிலும், அரசாங்கத்துடன் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் குறித்து பேச்சுக்களை நடத்துவதற்குத் தாங்கள் தயாராக இருப்பதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்பும் தமது கட்சிக்காரர்கள் மீது வன்முறைகள் தொடர்வதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அத்துடன் அரசுக்கு எதிராக வாக்களித்தமைக்காக திருகோணமலை, மன்னார் ஆகிய மாவட்டங்களில் மீனவர்கள் மீன்பிடிப்பதில் பாஸ் நடைமுறை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரபாகரனின் மரணச் சான்றிதழ் கிடைத்துவிட்டது என்கிறார் சிதம்பரம்
பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என இலங்கை அரசு உறுதிப்படுத்தியுள்ளது என்று இந்தியா கூறுகிறதுவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிராபாகரின் மரணத்தை உறுதி செய்யும் மரணச் சான்றிதழ் தங்களுக்கு கிடைத்துவிட்டதாக இந்திய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம் பிரபாகரன் அவர்கள் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை அரசு தெரிவித்த நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கை முறைப்படி முடித்து வைப்பதற்காக அதற்கான மரனச சான்றிதழை இந்தியா இலங்கையிடம் கோரியிருந்தது.
ஆனால் அத்தகைய மரணச் சான்றிதழ் ஏதும் இதுவரை தமக்கு கிடைக்கப் பெறவில்லை என இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறையின் தலைவரை மேற்கோள்காட்டி ஞாயிறன்று செய்திகள் வெளியாயின.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒருவர் இது தொடர்பான தகவலைக் கோரியபோதே இந்தியாவின் மத்திய புலனாய்வு நிறுவனம் இதை தெரிவித்ததாக செய்திகள் கூறின.
இந்நிலையிலேயே பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்பதனை உறுதி செய்யும் முகமான மரணச் சான்றிதழ் இலங்கையிடமிருந்து இந்திய அரசுக்கு கிடைத்துவிட்டது என்று ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment