>> Thursday, February 18, 2010

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து ஆராய புதிய குழு
தமிழ்நாடு – கேரள மாநிலங்களுக்கிடையே நீண்ட காலமாக சர்ச்சையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக் குறித்து ஆய்வு செய்ய உயர்நிலைக்குழு ஒன்றை அமைக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் அமையும் அந்தக் குழுவில், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்கள் தலா ஒரு பிரதிநிதியை நியமிக்கலாம். அவர்கள் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளாகவோ அல்லது தொழில்நுட்ப நிபுணர்களாகவோ இருக்கலாம்.
அதேபோல், மத்திய அரசும் தொழில்நுட்ப நிபுணர்கள் இருவரை நியமிக்கலாம்.
அந்தக் குழுவில், மத்திய நீர்வளக் ஆணையம் பிரதிநிதிகள் யாரையும் நியமிக்கக் கூடாது என்றும், அவர்கள் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்வதாகவும் கேரள அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஏற்கெனவே, முல்லைபெரியாறு அணையின் உயரத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த அளித்த பரிந்துரையை எதிர்க்கப் போவதாகவும் கேரளத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், நீர்வளக் ஆணையத்தின் மீதான புகாரை மறுத்த மத்திய அரசு வழக்கறிஞர், நிபுணர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டினார்.
அந்தக் குழுவின் விவரங்கள் தொடர்பான அறிவிப்பை வியாழக்கிழமை அறிவிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு அந்தக் குழு 6 மாதங்களில் தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். சட்டப்பிரச்சினைகள் அல்லாத பிற அம்சங்கள், அதாவது தற்போதுள்ள அணை எந்த அளவுக்குப் பாதுகாப்பாக உள்ளது, புதிய அணை கட்டப்பட வேண்டுமா, அதன் சாதக, பாதகங்கள் உள்ளிட்ட அம்சங்களில் அந்தக்குழு ஆய்வு மேற்கொள்ளும்.
நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு புதன்கிழமை இந்த உத்தரவை வெளியிட்டது.
கேரள எல்லைக்குள் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை, தமிழ்நாட்டின் ஒரு பகுதிக்குத் தேவையான நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர்த் தேவைக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. நிபுணர் குழு பரிந்துரை அடிப்படையில், அணையின் கொள்ளளவை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த, கடந்த 2006-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவி்ட்டது.
ஆனால், கேரள அரசு புதிய சட்டம் கொண்டு வந்து, அணையின் உயரம் 136 அடியாகவே நீடிக்க வேண்டும் என்று அறிவித்தது. அந்த நடவடிக்கை, உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் செயல் என்றும், புதிய சட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரியும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
விசாரணை நடந்துகொண்டிருந்த நேரத்தில், இந்தப் பிரச்சினையை உச்சநீதிமன்றம் விசாரிக்கக்கூடாது என்றும், நடுவர் மன்றம்தான் விசாரிக்க வேண்டும் என்றும் கேரளம் வாதிட்டது. அது தண்ணீர் பிரச்சினை அல்ல என்பதால் நடுவர் மன்றம் விசாரிக்க முடியாது என்று தமிழகம் வாதிட்டது. அதன்பிறகு, அணையின் பாதுகாப்புத் தொடர்பாக ஆய்வு செய்ய புதிய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்ற கேரளத்தின் கோரிக்கையை ஏற்று, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய விளையாட்டு போட்டிகள் திட்டமிட்டப்படி பாதுகாப்பாக நடக்கும் - உள்துறை அமைச்சர் சிதம்பரம்
இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம்
இந்தியாவில் நடைபெற உள்ள முக்கிய விளையாட்டுப் போட்டிகளுக்கு எதிராக தீவிரவாதக் குழுக்கள் விடுத்துள்ள மிரட்டலுக்கு அரசு பணிந்துவிடாது என்று இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்த மாத இறுதியில் இந்தியத் தலைநகர் டெல்லியில் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் துவங்குகின்றன. அதன்பிறகு, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளும், ஆண்டின் பிற்பகுதியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற உள்ளன. அந்தப் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் யாரும் பங்கெடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் மீறினால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் பாகிஸ்தானை மையமாகக் கொண்ட, அல்-கய்தா இயக்கத்துடன் தொடர்புடைய தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த இல்யாஸ் கஷ்மீரி என்பவர் நேற்று மிரட்டல் விடுத்ததாக செய்திகள் வெளியாயின.
இந்த நிலையில், ப. சிதம்பரம் இத்தககைய கருத்தை வெளியிட்டுள்ளார்.
''ஹாக்கி, கிரிக்கெட் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரருக்கும், பயிற்சியாளருக்கும், அதிகாரிகளுக்கும் இந்திய அரசு முழுமையான பாதுகாப்பு வழங்கும். நாம் எப்படி செயல்பட வேண்டும் என்பதை இல்யாஸ் கஷ்மீரி உத்தரவிட முடியாது’’ என்றார் உள்துறை அமைச்சர் சிதம்பரம்.
ஆனால், தீவிரவாதக் குழுக்களின் மிரட்டலால் தாக்கம் ஏற்பட்டிருப்பது உண்மை. உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகளில் பங்கேற்க இந்தியா வரத் திட்டமிட்டிருந்த நியூஸிலாந்து அணி, தனது பயணத்தை தாமதப்படுத்தியுள்ளது. கடந்த வாரம் இங்கிலாந்து ஹாக்கியின் தலைவர் டேவிட் ஃபால்க்னர், போட்டிகள் துவங்குவதற்கு முன்னதாக தான் எதிர்பார்த்த பாதுகாப்பு உத்தரவாதம் கிடைக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால், கடந்த வாரம் டெல்லி வந்திருந்த பிரிட்டனின் மூத்த போலீஸ் அதிகாரி, பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுவாக இருப்பதாகக் கூறியிருந்தார்.
அக்டோபரில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் வரையிலும் அதன் பிறகும் கூட, பாதுகாப்புத்தான் தங்களது முன்னுரிமையாக இருக்கும் என்றும் இந்திய அதிகாரிகள் கூறுகிறார்கள்.
முல்லைத்தீவு பிரதேசத்தின் இடம்பெயர்ந்த மக்கள் அவதியுறுவதாக புகார்
மீனவர்கள்
இலங்கையின் வன்னியில் யுத்த முனைப்புகள் தீவிரம் பெற்றிருந்த போது பெருமளவிலான குடும்பங்கள் படகுகள் மூலம் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டையை வந்தடைந்தன.
இத்தகைய குடும்பங்கள் கடந்த இரு மாதங்களின் முன்னர் விடுவிக்கப்பட்டதுடன் இவர்களது படகுகளும் தற்போதுகடற்படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளன.
எனினும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசம் இதுவரை விடுவிக்கப்படாமையால் படகுகளை மீளப்பெற்றபோதும், இத்தகைய குடும்பங்கள் பெரும் சிரமங்களின் மத்தியிலேயே திருகோணமலையில் உள்ள தங்கள் உறவினர் நண்பர்களின் வீடுகளில் தங்கி வாழ்ந்து வருகின்றனர்.
விடுவிக்கப்பட்ட தங்கள் படகுகளையும் இவர்கள் புல்மோட்டையில் தங்களுக்கு அறிமுகமானோரின் பொறுப்பில் விட்டு விட்டேதிருகோணமலையில் தங்கியுள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதே வேளை கடற்படையினரால் விடுவிக்கப்பட்ட யாழ் குடாநாட்டைச் சோந்தோர் மற்றும் மீள்குடியேற்றம் நடைபெறும் பகுதிகளைச் சேர்ந்தோர் கடல்வழிப்பாதை வழியாக தங்கள் படகுகளைக் கொண்டு செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter